மிக சங்கடமான நிலைமை
வரும்போது தன்னுடைய கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம்
வருகிறது. முழுத்தீவிரத்துடன் பக்திசெய்து இறைவனைக் கூவி அழைக்கிறான்.
கெடுசெயல்களைத்
தங்குதடையின்றித் தொடரும்வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை.
ஆயினும் முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன், அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி
இறைவன் ஏற்பாடு செய்கிறான்.
உலகவாழ்க்கையின்
வழிகாட்டி குரு. க்ஷேத்திராடனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்)
விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்துகொள்வதற்கும்
பற்றறுப்பதற்கும் குருவே வழிகாட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப்
பிரவசனம் செய்பவரும் அவரே.
புத்தியின் கண்ணைத்
திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா
காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும்
ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.
இதன் பிறகு புலனின்ப
ஆசைகள் க்ஷீணமடைந்து (அழிவடைந்து), சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப்பற்றிப்
பேசுகிறான் ! குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப்
பழங்கள் கைக்கு வந்துசேர்கின்றன.
ஞானிகள்
அடியவர்களுக்குக் கற்பகத்தரு ஆவர். அவர்களுடைய புனிதமான ஸந்நிதியில்
இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு ஸேவை செய்தால், சிரமமான முயற்சிகள்
எதுவும் தேவையில்லாது செய்துவிடுவர்.
ஆகவே, எப்பொழுதும்
ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப்
பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.