குருராயரின் மஹிமை எல்லையற்றது. அதை
வர்ணிக்கப் புகும் முயற்சியில் பேச்சு கர்வம் இழக்கிறது. ஆகவே, குருவின்
பாதங்களில் தலையைச் சாய்த்து ஊமையன் போல் மௌனமாக இருப்பதே நன்று.
பூர்வஜன்மத்தில், குறைபடாத, பூரணமான
தவம் செய்யாதவனுக்கு உலகியல் வாழ்வின் மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடிய
ஸாயீயின் (ஞானியின்) தரிசனம் கிடைக்காது.
ஆன்மீக முன்னேற்றம் அடையவோ, மோட்சம்
சித்திக்கவோ, தம்முடைய பொதுவான நலன் கருதியோ, பாபாவுக்கு அணுக்கத் தொண்டர்
ஆகிவிட்டவர் வேறெதையும் நாடமாட்டார்.
பாபாவின் கூட்டுறவு பெரும்
பாக்கியமாகும். அதன் மஹிமையை யாரால் வர்ணிக்க முடியும்? நல்ல பக்தர்களுக்கு
விவேகத்தையும் பற்றின்மையையும் பரம சாந்தியையும் அது கொண்டுவருகிறது.
ஸாயீ பிரபஞ்சப் பேருணர்வின் உருவே
ஆவார். தோன்றாநிலையிலிருந்து தோன்றிய நிலைக்கு மாறியவர். அவருடைய பற்றற்ற
தன்மையை யாரால் எந்த அளவுக்கு அறுதியிட்டு விவரிக்க முடியும்?
கிருபாளுவான (அருளுடையவரான) ஸாயீ,
விசுவாசமுள்ள பக்தர்களுக்கும் பிரேமையுடன் கேட்பவர்களுக்கும் தம்முடைய
சுவையான சரித்திரத்தை அன்புடன் சொல்கிறார். அவர்களுக்கு இந்த ஸத்சரித்திரம்
ஒரு கோயில் அன்றோ !"
ஸாயீயின் கை எவருடைய சிரத்தில்
வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது. "அதுவே நான்"
(தத்வமஸி) என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது. பார்க்கும் இடமெல்லாம்
ஆனந்தம் நிரம்பி வழிகிறது.
No comments:
Post a Comment