Thursday, 2 May 2019

பாபாவும் மகான்களும்

பாபாவும் மகான்களும்...

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகத் திகழும் ஶ்ரீசாயிநாதர், அனைத்து மகான்களுமே தம்முள் இருப்பதாகவும், தாமே அனைத்து மகான்களாகவும் இருப்பதாகவும் பல நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.
அத்தகைய நிகழ்ச்சிகளுள் ஒரு சில நிகழ்ச்சிகளை இங்கே பார்ப்போம்...
சாயிபாபாவும் நரசிங்க மஹராஜும்...
Sai Baba Devotees
சாயிபாபாவின் சம காலத்தைச் சேர்ந்த மஹான் நரசிங்க மஹராஜ். நாசிக் என்ற இடத்தில் இருந்தவர். சகோரி என்னும் இடத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர் இவர்கள் இருவரிடமும் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். இரண்டு மகான்களிடமும் அளவற்ற பக்தி கொண்டிருந்த ஹன்ஸ்ராஜ், ஆஸ்துமா வியாதியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. நரசிங்க மஹராஜிடம் சென்ற ஹன்ஸ்ராஜ் தன்னுடைய வியாதியை குணப்படுத்தவும், தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பிரார்த்தித்தார். ஆனால், ஹன்ஸ்ராஜ் உடலில் ஓர் ஆவி புகுந்திருப்பதால், அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று கூறிய நரசிங்க மஹராஜ், அவரை ஷீரடி பாபாவிடம் செல்லுமாறு கூறினார். அவரும் அப்படியே தன் மனைவியை அழைத்துக்கொண்டு பாபாவிடம் சென்றார். துவாராகா மாயியில் அவர்கள் பாபாவை தரிசித்து வணங்கினர். அவர்கள் தங்கள் குறைகளைக் கூறுவதற்கு முன்பே பாபா ஹன்ஸ்ராஜை அடித்து, ''தீய பிசாசே, இவருடைய உடலில் இருந்து போய்விடு' என்று கடுமையாகக் கூறினார். பாபாவின் உத்தரவு கேட்டு அந்த ஆவியும் ஹன்ஸ்ராஜ் உடலிலிருந்து ஓடிவிட்டது. பின்னர் அவருக்கு குழந்தை பிறந்ததுடன், ஆஸ்துமா நோயும் குணமானது.
மற்றுமொரு சம்பத்தையும் இங்கே குறிப்பிடலாம்.
ஹரிபாவு கார்னிக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர் ஒருமுறை பாபாவை தரிசிக்க வந்தார். பாபாவை தரிசித்து வணங்கினார். பின்னர் அவர் பாபாவிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். துவாரகாமாயி படிகளில் இருந்து இறங்கியபோது பாபாவுக்கு ஒரு ரூபாய் தட்சிணை கொடுக்கவேண்டும் என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. பாபாவிடம் சென்று தட்சிணையைக் கொடுக்க விரும்பினார். ஆனால், உடன் வந்த ஷாமா என்பவர், பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டால், திரும்பவும் போகக்கூடாது என்று கூறினார். வேறு வழியில்லாமல், பாபாவுக்கு தட்சிணை கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அவர் புறப்பட்டுச் சென்றார். ஊருக்குப் போகும் வழியில், நாசிக் என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்த காலாராமரின் கோயிலுக்குச் சென்றார். கோயில் வாசலிலேயே தம்முடைய சீடர்களுடன் அமர்ந்திருந்த நரசிங்க மஹராஜ், கார்னிக்கை அழைத்து, 'எனக்குத் தரவேண்டிய ஒரு ரூபாயைக் கொடு' என்று கேட்டார். கார்னிக் திகைப்பு அடைந்தாலும், மகிழ்ச்சியுடன் அவர் கேட்ட ஒரு ரூபாயைக் கொடுத்தார். அப்போதுதான் தாம் ஷீரடியில் பாபாவுக்குக் கொடுக்க விரும்பிய ஒரு ரூபாயை சாய்பாபாவே நரசிங்க மஹராஜ் மூலமாகப் பெற்றுக்கொண்டார் என்ற உண்மையை கார்னிக் உணர்ந்துகொண்டார்.
குரு கொலாப் மஹராஜ்
குரு கொலாப் மஹராஜ் என்ற ஒரு மகான் இருந்தார். அவருடைய தீவிர பக்தரான மூலே சாஸ்திரி என்பவர் ஒருமுறை தம்முடைய நண்பரான பாபு சாஹேப் பூட்டி என்பவரைப் பார்ப்பதற்காக ஷீரடிக்கு வந்தார். பூட்டியைச் சந்தித்ததும் அவர் பாபாவை தரிசிப்பதற்காக துவாரகாமாயிக்குப் புறப்பட்டார். பாபா அவர்களுக்கு பிரசாதம் கொடுத்தார். பின்னர் மூலே சாஸ்திரி பாபாவின் கைரேகையைப் பார்ப்பதற்கு அனுமதி கேட்டார். ஆனால், பாபா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்கு வாழைப்பழங்கள் கொடுத்து அனுப்பிவிட்டார்.
தமது விடுதிக்குத் திரும்பிய மூலே சாஸ்திரி, குளித்து முடித்து தம்முடைய வழக்கப்படி தினசரி வழிபாடான அக்னி ஹோத்திரத்தை செய்யத் தொடங்கினார்.
பாபாவும் லெண்டித் தோட்டத்துக்குப் புறப்பட்டார். அப்போது உடன் வந்தவர்களிடம் சிறிது காவி நிறச் சாயத்தைக் கொண்டு வரும்படியும், அன்று தாம் காவி உடை உடுத்தப்போவதாகவும் தெரிவித்தார். உடன் இருந்தவர்களுக்கு பாபா சொன்னதன் பொருள் புரியவில்லை. ஆனாலும், பாபாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதால் அவர்கள் அப்படியே செய்தனர்.
பக்தர்களின் மத்தியான ஆரத்திக்காக பாபா தம் இருக்கையில் அமர்ந்தார். அப்போது பாபா பூட்டியைப் பார்த்து, 'உன் நண்பன் மூலே சாஸ்திரியிடம் போய் தட்சிணை வாங்கி வரும்படிக் கூறினார். பூட்டியும் மூலே சாஸ்திரியிடம் சென்று பாபா தட்சிணை கேட்பதாகக் கூறினார். மூலே சாஸ்திரிக்கு ஒன்றும் புரியவில்லை. 'தாமோ வைதீக பிராமணர். பாபாவோ ஒரு முஸ்லிம். தன் குருவும் அல்ல. அப்படி இருக்க தன்னிடம் தட்சிணை கேட்பது ஏன்? என்று நினைத்து குழம்பினார். ஆனால், பாபா ஒப்பற்ற மகான் என்பதாலும், பூட்டி தன்னுடைய நண்பர் என்பதாலும் மூலே சாஸ்திரி பாபாவுக்கு தட்சிணை கொடுப்பதற்காக, தன்னுடைய பூஜையை நிறுத்திவிட்டு துவாரகாமாயிக்குச் சென்றார். சற்று தொலைவில் இருந்தபடியே தம் கையில் இருந்த மலர்களை பாபாவின் மேல் தூவி, தம் கைகுவித்து வணங்கினார். அப்போது துவாரகாமாயியில் அவர் பாபாவைக் காணவில்லை. தம்முடைய குருநாதரான குருகொலாப் மஹராஜையே தரிசித்தார். பக்திப் பரவசத்துடன் குருவின் திருவடிகளில் விழுந்து வணங்கியவர், மறுபடியும் எழுந்து பார்த்தபோது, அங்கே குரு கொலாப் மஹராஜுக்கு பதிலாக பாபாவை தரிசித்தார். பாபாவே தம்முடைய குரு கொலாப் மஹராஜாகவும் விளங்குகிறார் என்ற பேருண்மை அவருக்கு விளங்கியது.
இதுபோல் பல மகான்களின் வடிவங்களில் பாபா காட்சி தந்திருப்பதுடன், அனைத்து மகான்களாகத் தாமே அருள்வதாகவும் பல நிகழ்ச்சிகளில் உணர்த்திக் காட்டி இருக்கிறார்.

No comments:

Post a Comment