Wednesday 22 May 2019

முன்வினைகளை நீக்கும் சத்குரு நாதனின் பாதம்... சபட்ணேகருக்கு அருளிய சாய்பாபா!

மனித வாழ்க்கை, முன்வினைப் பயன்களால் ஆனது. அதை உணராது பலர், இந்த வாழ்வில் நிகழும் துயரங்களுக்காக இறைவனை சபிக்கிறார்கள். மெய்யான குருவைக் காணும் வரைக்கும் அவர்களுக்கு இந்த சஞ்சலம் இருக்கிறது. அப்படி ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி இது...

காலத்தை, கி.மு, கி.பி என்று பிரிப்பதுபோல, மனிதனின் வாழ்க்கையையும், சத்குரு ஒருவனுக்கு அறிமுகமாவதற்கு முன், அறிமுகமான பின் என்று பிரிக்கலாம். சத்குருவாம் ஷீரடி சாய்பாபாவினை அறிந்துகொள்வதற்கு முன் அவன் பயணித்த பாதையானது, அவரை அறிந்துகொண்ட பின் முற்றிலும் மாறிவிடுகிறது. அவன் தன் பழைய பொல்லாத பழக்கங்களை விட்டு, சத் சங்கத்தைத் தேடி ஓடுகிறான். குருவின் நாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்கிறான். அதனால், அவனுக்கு உண்டாகும் சகல தீமைகளையும் மாற்றி நன்மைகளாக்கிக் கொள்கிறான்.
சாய்பாபா
சாயி, தன்னை சரணாகதி செய்த கணத்திலிருந்து ஒருவனைக் காக்கிறார். அவன் கூடவேயிருந்து அவனுக்கு அருள்கிறார். அவன் அவரிலிருந்து விலகிச் செல்லும்போது, ஒரு குதிரைக்காரன் தன் குதிரையின் லகானைப் பிடித்துத் தன் பாதைக்குத் திருப்புவது போலத் திருப்புகிறார்.     
மனித வாழ்க்கை, முன்வினைப் பயன்களால் ஆனது. அதை உணராது, பலர் இந்த வாழ்வில் நிகழும் துயரங்களுக்காக இறைவனைச் சபிக்கிறார்கள். மெய்யான குருவைக் காணும் வரைக்கும் அவர்களுக்கு இந்த சஞ்சலம் இருக்கிறது. அப்படி ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.
பாபா
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அக்கல்கோட்டில் வாழ்ந்த வக்கீல் சபட்ணேகர். செல்வச் செழிப்பில் வாழ்ந்து வந்த சபட்ணேகரின் ஒரே மகன், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான். சபட்ணேகருக்கு உலகமே இருண்டுவிட்டது. இனி தன் வாழ்வில் என்ன இருக்கிறது என்கிற விரக்தி மேலிட புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்று தொழுது ஆறுதல் பெற்று வந்தார். ஆனாலும் அவரின் துக்கம் தீர்ந்தபாடில்லை. அப்போதுதான், அவரது கல்லூரிக் காலத்தில் நண்பன் ஒருவன் சாயிநாதரைப் பற்றிச் சொன்னது நினைவு வந்தது. தானும் ஷீரடிபோய் அவரைச் சந்தித்தால் என்ன என்று நினைத்துக்கொண்டு ஷீரடி சென்றார். துவாரகாமாயிக்குச் சென்று பாபாவைப் பணிந்து வணங்கினார். பாபா கோபம் கொண்டு, ``வெளியே போ" என்று சத்தமிட்டார். சபட்ணேகர் வேறுவழியின்றி வெளியே வந்தார்.
சபட்ணேகர், பாபாவின் பக்தரான பாலா ஷிம்பியின் உதவியை நாடினார். பாலா ஷிம்பி சபட்ணேகரை ஆறுதல்படுத்தி மீண்டும் துவாரகாமாயிக்குள் அழைத்துச் சென்றார். பாபாவின் படம் ஒன்றினை எடுத்துக்கொண்டு பாபாவிடம் சென்ற பாலா, அது `யார் படம்' என்று பாபாவிடமே கேட்டார். பக்தர்களோடு விளையாடும் பாபாவிடமே பாலா விளையாடுவதைக் கண்டு, பாபா தானும் அதைத் தொடர்ந்தார். அவர், சபட்ணேகரைக் காட்டி, `இது அவரது காதலனின் படம்' என்று சிரித்தபடியே கூறினார். சபட்ணேகருக்கு அருள பாபா தயாராய் இருக்கிறார் என்று எண்ணிய பாலா, கண்ஜாடை காட்டி பாபா முன்பாக அவரை வரச்செய்தார். ஆனால், சபட்ணேகர் வந்து வணங்கியதும் பாபா மீண்டும், `வெளியே போ' என்று கத்தினார்.
பாபாவின் செய்கையை யார்தான் புரிந்துகொள்ளமுடியும். சபட்ணேகர் வருத்தம் அடைந்தாலும், பாபா தன்னை ஏற்கும் நாள் என்றேனும் ஒருநாள் வரும் என்பதை அறிந்துகொண்டு வெளியேறினார். சஞ்சலத்தோடு ஷீரடி வந்த அவருக்குப் பாபாவின் தரிசனமே பெரும் ஆனந்தத்தைத் தந்திருந்தது. மீண்டும் தன் ஊருக்குக் கிளம்பி வந்து சேர்ந்தார்.
ஷீரடி
மாதங்கள் ஓடின. ஒரு நாள் சபட்ணேகரின் மனைவி அதிகாலையில் ஒரு கனவு கண்டாள். அதில், அவள் ஒரு கிணற்றடிக்குத் தண்ணீர் எடுத்துவரச் செல்கிறாள். அப்போது அங்கே தலையில் துண்டு ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்த பக்கிரி ஒருவர் நின்றார். அவர் அவளை நோக்கி, ``பெண்ணே, உன் பானையைக் கொடு. நான் நீர் நிரப்பித் தருகிறேன்" என்றார். அவளோ அச்சப்பட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தபோது அவர் அவளைத் தலையில் தொட்டார். அவள் மெய் சிலிர்த்தது. அவள் உறக்க மும் கலைந்தது. மெய்சிலிர்ப்பும், கண்களில் பெருகிய கண்ணீருமாக அவள் தன் கணவரிடம் தன் அனுபவத்தைச் சொன்னாள்.
இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். பொதுவாக பாபா தன் கரங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பதைப் பலர் தம் மனக்கண்ணில் காண்பதுண்டு. ஆனால், ஒரு சிலர் தம் துயரங்களில் மூழ்கியிருக்கையில் பாபா அவர்களைத் தொட்டு அருள் செய்த அனுபவத்தை அடைந்திருக்கிறார்கள். பாபாவை நினைக்கக் கூட முடியாத துயரில் அவர்கள் மூழ்கியிருக்கும் போது, அவரே வந்து அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்த உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். அப்படித்தான் சபட்ணேகரின் மனைவியும் பாபாவால் தொடப்பட்டார்.

No comments:

Post a Comment