Tuesday, 30 April 2019

ஷீரடி தரிசனம்

சீரடி ... பகவான் சாய்பாபா சூட்சும ரூபத்தில் இருந்து அருளாசி செய்யும் தெய்விகத்தலம். இங்குள்ள ஒவ்வோர் இடமும் தரிசித்து வணங்க வேண்டிய இடங்களே. இங்குள்ள ஒவ்வோர் அடி மண்ணும் பாபாவின் திருவடி ஸ்பரிசத்தால் மகிமை பெற்றுத் திகழ்கிறது. இந்த இடங்களைச் சுற்றியே சாயிநாதரின் லீலைகள் நடைபெற்றன.
சீரடியில் பாபாவின் சமாதி மந்திர், அவர் வசித்த துவாரகாமாயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சாபதி இல்லம் என்று பல இடங்களை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த இடங்களின் மகத்துவம் என்ன, இந்த இடங்களுக்கும் பாபாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி இங்கே காணலாம்.
சமாதி மந்திர், துவாரகமாயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சபாதி இல்லம் எனப் பல இடங்கள் பக்கதர்களால் தினம்தோறும் தரிசிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களின் பெருமைகள் என்ன? ஏன் தரிசிக்க வேண்டும் என்ற விவரங்களை இங்கு காண்போம்.
துவாரகாமாயியை அடுத்து சுமார் 50 அடி தூரத்தில் சாவடி உள்ளது. சாவடி என்றால் மக்கள் கூடிப் பேசும் பொது இடம். அந்நாளில் யாத்திரீகர்கள் தங்கிச் செல்லவும் இந்தச் சாவடி பயன்பட்டது. இரண்டு அறைகள், ஒரு வராண்டா கொண்ட சிறு அமைப்பை கொண்டது சாவடி. மிகவும் சிறிய இடமான சாவடி எப்படி புனிதத்துவம் பெற்றது என்றால், சாயிநாதரின் அருளால்தான் என்றே சொல்லலாம்.
Shirdi Sai Baba
சாய்பாபா தங்கியிருந்த மசூதி பாழடைந்து மழைக்காலத்தில் தங்கவே முடியாத நிலையில் இருந்தது. அப்போது அவரது பக்தர்கள் மசூதியை விட்டு வெளியே வந்து சாவடியில் வந்துதான் தங்கச் சொல்வார்கள். ஆனால் ஆரம்பத்தில் பாபா அங்கு வர சம்மதிக்கவில்லை. பின்னர் சாவடி சென்று அங்கும் தங்க ஆரம்பித்தார். இதனால்தான் சாவடி துவாரகமாயி மசூதிக்கு இணையான புகழை அடைந்தது. இன்று பளிங்கு மாளிகையாக இருக்கும் இந்த சாவடி அந்த நாளில் பாபாவின் திருவடி பட்டு பலரது நோய்நொடிகளை தீர்த்த புனித மண்ணைக் கொண்டிருந்தது. இங்கு இன்றும் சாய்பாபா பயன்படுத்திய நாற்காலி, சக்கர நாற்காலி, பலகை, பல்லக்கு, விசிறி போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சாய்பகவானின் உடல் வைக்கப்பட்டிருந்த பலகையும், இங்குதான் வைக்கப்பட்டிருந்தது. பின்னரே அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.சாவடியில் சாய்பாபா படுத்து இருந்த அறைக்குள் மட்டும் பெண்கள் செல்வதில்லை. பாபா உறங்கிய அறையில்தான் பூஜைகளும், வழிபாடும் செய்யப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகள் இரவு வேளையில் சாயிநாதர் துவாரகாமாயியில் இருந்து சாவடிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாபா சாவடிக்குச் செல்லும் நிகழ்ச்சியானது ஒரு பெரிய வைபவம் போலவே ஆர்ப்பாட்ட, அலங்கார அணிவகுப்பாக நடைபெறும். தினசரித் திருவிழா என்றே சொல்லலாம். முதலில் பாபா இதற்குச் சம்மதிக்கவில்லை என்றாலும், பக்தர்களின் வற்புறுத்தலுக்காக சம்மதித்தார். இப்போதும் வியாழக்கிழமைகளில் பாபாவின் திருவுருவம் துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.பாபாவின் அருள் நிறைந்த இடங்களுள் சாவடி முக்கியமானது. அடுத்ததாக சீரடியில் முக்கியத்துவம் பெற்ற மற்றோர் இடத்தை தரிசிப்போம்.

அனுபவங்கள்

நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்' ஶ்ரீசாயிநாதரின் இரண்டு மகத்தான உபதேசங்கள் நம்பிக்கையும் பொறுமையும். நம்பிக்கை இருந்தால் கல்லிலும் கடவுளைத் தரிசிக்கலாம். பாபா தாம் அனைத்து உயிர்களிலும் இருப்பவர் என்று கூறி இருக்கிறார். அவரே தொடர்ந்து என்னுடைய சித்திரத்திலும் நான் உயிருடன் இருப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.
Sai Baba Stories
இதை விவரிக்கும் வகையில் பாபாவின் பக்தை ஒருவரின் வாழ்க்கையில் சாயிநாதர் நிகழ்த்திய அனுபவத்தைப் பார்ப்போம்.
தார்க்காட் என்பவரின் மனைவியும், அவருடைய மகனும் தீவிரமான பாபா பக்தர்கள் ஆவார்கள். தார்க்காட் என்பவருக்கு பாபாவிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஒருமுறை திருமதி தார்க்காட்டும் அவருடைய மகனும் ஷீரடிக்குச் செல்ல விரும்பினர். ஆனால், அவர்களுக்குள் ஒரு தயக்கம். தாங்கள் இருவரும் ஷீரடிக்குச் சென்றுவிட்டால், தங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் திருவுருவப்படத்துக்கு தினசரி செய்யப்படும் நைவேத்தியம் தடைப்பட்டு விடுமே என்று அவர்கள் தயங்கினர்.
அவர்களுடைய விருப்பத்தைப் புரிந்துகொண்ட தார்க்காட், அவர்கள் இருவரும் தயங்காமல் ஷீரடிக்குச் செல்லலாம் என்றும், அவர்கள் சார்பில் தானே சாயிநாதருக்கு நைவேத்தியம் செய்வதாகவும் உறுதி அளித்தார். அதனால், தாயும் மகனும் ஷீரடிக்குச் சென்றனர்.
தார்க்காட் தினமும் தான் காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பாக ஏதேனும் பிரசாதம் தயாரிக்கச் சொல்லி, பாபாவுக்கு நைவேத்தியம் செய்துவிட்டுச் செல்வார். மதிய உணவில் பாபாவுக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியம் பிரசாதமாகப் பரிமாறப்படும். மூன்றாவது நாள் பாபாவுக்கு நைவேத்தியம் செய்ய மறந்துவிட்டார். மதியம் உணவுக்கு வந்தவர், உணவில் பாபாவின் பிரசாதம் பரிமாறாமல் போகவே, பணியாளிடம் விவரம் கேட்டார். பணியாள் சொல்லித்தான் அன்று தான் பாபாவுக்கு நைவேத்தியம் செய்யாமல் சென்றுவிட்டது தார்க்காட்டுக்குத் தெரியவந்தது. மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனது குறித்து மனம் வருந்திய தார்க்காட் அப்போதே ஷீரடியில் இருந்த தன் மனைவிக்கு நடந்த செய்தியைத் தெரிவித்து, இனிமேல் பாபாவின் நைவேத்திய விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பதாக உறுதி கூறி ஒரு கடிதம் எழுதினார்.
Sai Baba Stories
அவர் கடிதம் எழுதிக் கொண்டிருந்த அதே வேளையில், துவாரகாமாயியில் பாபாவின் முன்பாக தார்க்காட்டின் மனைவியும் மகனும் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களைப் புன்னகையுடன் பார்த்த பாபா, ''இன்று மதியம் நான் உங்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மிகுந்த பசியுடன் இருந்த எனக்கு அங்கே உணவு எதுவும் கிடைக்கவில்லை'' என்று கூறினார். சாயிநாதர் அப்படிச் சொன்ன காரணம் தார்க்காட்டின் மனைவிக்குப் புரியவில்லை. ஆனால், மகன் ஓரளவுக்கு விஷயத்தை ஊகித்துக்கொண்டான். தன்னுடைய தந்தை அன்றைக்கு பாபாவுக்கு நைவேத்தியம் எதுவும் செய்யவில்லை என்று தன்னுடைய தாயிடம் கூறினான்.
இப்போது இருப்பதுபோன்ற தகவல் தொடர்பு வசதிகள் அப்போது இல்லாத காரணத்தால், உடனே தார்க்காட்டிடம் பேசி விவரம் தெரிந்துகொள்ள முடியவில்லை. சம்பவம் நடந்த மூன்றாவது நாள் தார்க்காட்டின் கடிதம் ஷீரடிக்கு வந்து சேர்ந்தது. தார்க்காட்டின் மனைவி மகன் ஊகித்துச் சொன்னது சரிதான் என்பதைத் தெரிந்துகொண்டாள்.
தன்னுடைய படத்திலும் தான் உயிருடன் இருப்பேன் என்று சாயிநாதர் சொன்னதை, தன்னுடைய இந்த அருளாடல் மூலம் உணர்த்தி இருக்கிறார். நம்பிக்கையுடன் அவருடைய திருவுருவப் படத்தை வணங்குபவர்களுக்கு, அவர் உடனுக்குடன் நன்மைகளை அருளவே செய்கிறார்.

Monday, 29 April 2019

சத்குரு சாய்நாதர் அற்புதங்கள்

ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும்போது, மனம் கனிந்த பக்தியுடன்தான் செல்லவேண்டும்.அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப் பிரசாதமாகக் கிடைக்கப் பெறும்.
சென்னையைச் சேர்ந்த ராம பக்தர் ஒருவர், ஷீர்டி சாயிநாதரைப் பற்றியும், அவரை தரிசிக்கச் செல்லும் தன்னைப் போன்ற பஜனை கோஷ்டியினருக்கு அவர் மிகவும் தாராளமாகப் பணம் தருவதைப் பற்றியும் கேள்விப்பட்டு, தன் மனைவி, மகள், மைத்துனியுடன் ஷீர்டிக்குச் சென்று, பாபாவின் முன்னிலையில் ராமனின் புகழைப் போற்றும் பஜனைப் பாடல்களைப் பாடினார். பஜனை முடிந்ததும், பாபா அவர்களுக்கு ஏதேனும் பணம் கொடுப்பார். ஒருநாள் எதுவுமே கொடுக்கவில்லை. இதனால், பாபாவிடம் நிறைய பணம் பெற்றுச் செல்ல நினைத்து வந்த அந்த ராம பக்தர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்.
ஆனால், அவருடைய மனைவிக்கு ஆரம்பத்தில் பணத்தாசை இருந்தாலும், தினமும் பாபாவை தரிசித்து, அவர் முன்னிலையில் ராமனைப் போற்றி பஜனைப் பாடல்கள் பாடியதில், அன்றுதான் அவளுடைய மனதில் இருந்த பணத்தாசை அகன்றதுடன், பாபாவின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தியும் ஏற்பட்டுவிட்டது. அப்போதுதான் அவள் நாளும் வழிபடும் ஸ்ரீராமனாக அவளுக்கு தரிசனம் தந்து அருளினார் பாபா. எல்லோரும் சாயிநாதரை தரிசித்தனர் என்றால், அந்த ராம பக்தரின் மனைவியோ ஸ்ரீசாயிநாதரின் உருவத்தில், தான் தினமும் பூஜிக்கும் ஸ்ரீராமபிரானையே தரிசித்தாள்.
பாபாவை துவாரகாமாயியில் தரிசித்துவிட்டுத் திரும்பியதும், அந்த ராம பக்தரின் மனைவி, பாபாவினிடத்தில் தான் ராமரை தரிசித்ததாகக் கூறினாள். மனைவியின் சொல்லை அவர் கொஞ்சமும் நம்பாமல், அவள் சொன்னதை இழித்தும் பழித்தும் பேசினார். தம்மிடம் பரிபூரணமாக சரணாகதி அடைந்துவிட்ட அந்தப் பெண்மணியின் கணவரைத் திருத்தி ஆட்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு இப்பொழுது சாயிநாதருக்கு! அன்றைய இரவே, சாயிநாதர் தம்முடைய லீலையைத் தொடங்கிவிட்டார்.
அன்று இரவு, அந்த ராம பக்தர் உறங்கும்போது, தனது கைகள் இரண்டும் பின்புறமாகக் கட்டப்பட்டு, சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு, ஒரு காவலரால் துன்புறுத்தப்படுவதுபோல் கனவு கண்டார். கனவில், சிறைக்கம்பிகளுக்கு வெளியே பாபா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த அவர் பாபாவிடம், ''பாபா, நீங்கள்தான் என்னை எப்படியாவது இந்தச் சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும்' என்று மன்றாடினார்.
''இதில் நான் தலையிடுவதற்கு இல்லை. உன்னுடைய பாவங்கள்தான் உன்னைப் பின்தொடர்ந்து வந்து, உன்னைத் துன்புறுத்துகின்றன'' என்றார் பாபா.
''பாபா, உங்களைத் தரிசித்த மாத்திரத்திலேயே என்னுடைய பாவங்கள் நீங்கிவிட்டிருக்குமே..! அப்படியிருக்க, நீங்கள் இப்படிச் சொல்லலாமா?'' என்று கேட்டார் அவர்.
''அப்படியா சரி, உன் கண்களைக் கொஞ்சம் மூடிக் கொள்'' என்றார் பாபா. அவரும் அப்படியே கண்களை மூடிக்கொண்டு, சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தபோது, திடுக்கிட்டார். அவரைத் துன்புறுத்திய காவலர் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
ஏற்கெனவே பயந்து நடுங்கிக் கொண்டு இருந்த அந்த மனிதரை, ''நீ இப்போது வசமாக மாட்டிக் கொண்டாய். காவலனைக் கொன்றதற் காக நீ கடுமையாகத் தண்டிக்கப்படப் போகிறாய்'' என்று சொல்லி மேலும் பயமுறுத்தினார் பாபா.
''பாபா, ஏன் என்னை இப்படிக் கஷ்டப்படுத்து கிறீர்கள்? என்னை இந்தத் துன்பத்தில் இருந்து விடுவிக்க தங்களைத் தவிர யாரால் முடியும்? தாங்கள்தான் என்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்'' என்று மன்றாடினார் அவர்.
''என்னிடத்தில் பூரண நம்பிக்கை உனக்கு இருக்கிறதா?'' என்று பாபா கேட்க, அவரும், ''தங்களிடத்தில் இப்பொழுது எனக்குப் பூரண நம்பிக்கை உள்ளது' என்று கூறினார். அவருடைய மனமாற்றத்தை உணர்ந்துகொண்டவர்போல், திரும்பவும் அவரைக் கண்களை மூடிக்கொள்ளு மாறு கூறினார் பாபா. அதேபோல் அவரும் கண்களை மூடித் திறந்தபோது, அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபட்டதை அறிந்தார். பாபாவின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் அந்த ராம பக்தர்.
பின்னர் பாபா அவருடைய விருப்பப்படி சமர்த்த ராமதாசராக தரிசனம் கொடுக்க, அவ்வளவில் அந்தக் கனவும் முடிவுக்கு வந்தது.
மறுநாள் காலையில் உறக்கத்தில் இருந்து எழுந்தபோது, அந்த ராம பக்தருடைய மனதில் ஒரு தெளிவும், பரவசமும் நிறைந்திருந்தது. பின்னர் துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை தரிசித்து வணங்கியபோது, பாபா அவரை முழுமையாக ஆசீர்வதித்ததுடன், அவருக்குப் பணமும் இனிப்புகளும் கொடுத்து அனுப்பினார்.
Sai Baba Miracles
குடும்பத்தில் ஒரே ஒருவர் தன்னை நம்பிக்கையுடன் சரண் அடைந்திருந்தாலும்கூட அவர்பொருட்டு அந்தக் குடும்பத்தையே காப்பாற்றும் கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.
ஒரு பக்தருக்கு எந்த தெய்வத்திடம் பிரீதியோ, அந்தத் தெய்வத்தின் வடிவிலேயே பாபா அவருக்குக் காட்சி தந்த நிகழ்ச்சிகள் அவரின் திவ்விய சரிதத்தில் எத்தனையோ காணப்படுகின்றன.
சிறந்த சிவபக்தனான மேகாவுக்கு சிவபெருமானாக அருள் புரிந்தது, நானாசாஹேப் நிமோன்கரின் மகனான ஸோம்நாத் தேஷ்பாண்டேக்கு மாருதியாகக் காட்சி தந்தது, பாண்டு ரங்க விட்டலனின் பக்தர்களுக்கு பாண்டுரங்கனாக தரிசனம் தந்தது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிலிர்ப்பூட்டும் பிரசாதங்களாகும்.
சாயிநாதரின் ஜீவிதமும் சரி, அவருடைய உபதேசங்களும் சரி, அவருடைய லீலைகளும் சரி... எல்லாமே நம்முடைய மன மாசுகளை அகற்றி, மனித நிலையில் இருந்து தெய்விக நிலைக்கு நம்மை உயர்த்துகின்றன.
ஸ்ரீசாயி அஷ்டோத்திர சத நாமாவளிகளில்,
ஆனந்தாய நம: ஆனந்ததாய நம: - என இரண்டு நாமாவளிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம். ஆனால், அந்த ஒரு வித்தியாசத்தில்தான் எவ்வளவு பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது தெரியுமா?
இந்த இரண்டு நாமாவளிகளுக்கும் பொருத்த மாக பாபா எத்தகைய அதிசயங்களை நிகழ்த்தி யிருக்கிறார் தெரியுமா..?
தாம் ஞானம் பெற்றது பற்றி பாபா..!
ஆனந்தாய நம:
ஆனந்ததாய நம:
இந்த இரண்டு நாமாவளிகளும் ஶ்ரீநரசிம்ம ஸ்வாமிஜி அருளிய ஶ்ரீசாய் அஷ்டோத்திர சத நாமாவளியில் இருக்கும் நாமங்களாகும்.
முதல் நாமாவளியின் பொருள் 'ஆனந்தமாக இருப்பவர்’ என்பதாகும்; 'ஆனந்தத்தை வழங்குபவர்’ என்பது அடுத்த நாமாவளியின் பொருளாகும். நாம் ஒருவரிடம் ஒன்றைக் கேட்டால், நாம் கேட்பது அவரிடம் இருந்தால்தான், அவரால் அதை நமக்குக் கொடுக்க முடியும். தன்னிடம் இல்லாத ஒன்றை அவரால் நமக்குத் தரமுடியாது. அப்படியே இருந்து, அவர் நமக்கு அதைக் கொடுத்தாலும், அவரிடம் அது குறைந்துவிடும்.
ஆனால், சாயிநாதரிடம் நாம் கேட்பது நிச்சயமாகக் கிடைக்கும். அதேநேரத்தில், அவரிடம் அது குறைந்துவிடப்போவதும் இல்லை. எப்போதுமே ஆனந்தமாக இருக்கும் சாயிநாதர், நாம் வேண்டுகின்ற ஆனந்தத்தை நமக்கு வழங்குவதுடன், அவரும் ஆனந்தம் குறையாதவராகக் காணப்படுகிறார்.
சுக்ல யஜுர் வேதத்தில்,
Sai Baba Miracles
'ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே’
'அதுவும் பூர்ணம்; இதுவும் பூர்ணம்; அந்த பூர்ணத்தில் இருந்தே இந்த பூர்ணம் தோன்றி உள்ளது. பூர்ணத்தில் இருந்து பூர்ணத்தை எடுத்த நிலையிலும், பூர்ணம் அப்படியே இருக்கிறது’ என்று சொல்லியிருப்பதைப்போல, ஆனந்தமயமாகவும் ஆனந்த சொரூபியாகவும் இருக்கும் சாயிநாதரிடம் இருந்து, நாம் ஆனந்தத்தைக் கேட்டுப் பெற்றாலும்கூட, அவரிடம் இருக்கும் ஆனந்தம் அணுவளவும் குறைந்துவிடப் போவதில்லை.
இத்தகைய ஆனந்தம் குறைவின்றி அவரிடம் நிலைத்திருப்பதற்கு என்ன காரணம்? அந்த ஆனந்த அனுபவத்தை எந்த குருநாதரிடம் இருந்து, எந்த வகையில் அவர் பெற்றார்? இதுபற்றி, சாயிநாதரே ஓர் உருவகக் கதையின் மூலமாகக் கூறியிருக்கிறார்.
ஒருமுறை, புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த நான்கு பேர், பிரம்மஞானத்தை அடைவதற்காகக் காட்டு வழியில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களில் மூவர் பிரம்மத்தை அடைவதற்கான வழிகளைக் குறித்து வெவ்வேறு விதமான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். நான்காமவரோ, நம்முடைய அனைத்தையும் பரிபூரணமாக குருவின் திருவடிகளில் அர்ப்பணித்துவிட்டு, அவரைச் சரண் அடைவது ஒன்றே பிரம்மத்தை அடைவதற்கான சரியான உபாயமாகும் என்றார். இந்த நான்காவது நபராக பாபா குறிப்பிட்டது தம்மைத்தான்.
இப்படியாக அவர்கள் பேசிக்கொண்டு, காட்டுப் பாதையில் போய்க்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த காட்டுவாசி ஒருவன் அவர்களிடம், ''நீங்கள் யார்? இந்தக் காட்டுக்குள் ஏன் போகி றீர்கள்?'' என்று கேட்டான். அதற்கு அவர்கள், தாங்கள் பிரம்மஞானத்தைக் கண்டறிவதற்காகச் செல்லுவதாகச் சொன்னார்கள்.
பிரம்மஞானத்தைப் பற்றி காட்டுவாசிக்கு என்ன தெரியும்? எனவே அவன், ''உங்களைப் பார்த்தால் பசியால் களைத்துப் போனவர்களாகத் தெரிகிறது. என்னிடம் இருக்கும் உணவையும் தண்ணீரையும் தருகிறேன். சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். அப்போதுதான் உங்கள் களைப்பு நீங்கும். அடர்ந்த இந்தக் காட்டுக்குள் சென்றுவிட்டால், சென்ற வழியில் திரும்புவதற்கான தெளிவும் கிடைக்கும்'' என்றான். ஆனால், அவனைத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவனாகக் நினைத்து, அவன் தரும் உணவை ஏற்றுக்கொள்வதா என்ற எண்ணி, அவர்கள் மறுத்துவிட்டனர்.
Sai Baba Miracles
அடர்ந்த அந்த காட்டுக்குள் அலைந்து திரிந்து சோர்ந்துபோன அவர்கள், எப்படியோ கஷ்டப்பட்டு வந்த வழியைத் தெரிந்துகொண்டு திரும்பினர். வழியில் அதே காட்டுவாசி எதிர்ப்பட்டான்.
''நான் சொன்னதை நீங்கள் கேட்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்தக் கஷ்டம். நீங்கள் செல்லும் வழியில் யாரேனும் எதிரில் வந்து, உங்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தால், இறைவனே அதை அனுப்பியதாகத்தான் அர்த்தம். அதை உதாசீனப்படுத்திவிட்டுச் சென்றால், போகும் காரியம் நிறைவேறாது'' என்று கூறினான்.
அவன் மீண்டும் அவ்வளவு வற்புறுத்திச் சொல்லியும், அதை ஏற்றுக்கொள்ளாமல் முதல் மூன்று பேர் தங்கள் போக்கிலேயே போய்விட்டனர். ஆனால், நான்காமவரான பாபாவோ, அந்த மனிதனின் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டவராக, அவன் அன்புடன் கொடுத்த உணவையும் தண்ணீரையும் ஏற்றுக்கொண்டு, அவனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, பிரம்மஞானத்தைத் தேடி தமது பயணத்தைத் தொடர்ந்தார்.
சற்றைக்கெல்லாம், ஒரு குருநாதர் பாபாவின் எதிரில் வந்தார். பாபா அவரிடம், ''தாங்கள் எனக்கு பிரம்மஞானத்தை காட்டி அருளவேண்டும்'' என்று விநயத்துடன் கேட்டுக்கொண்டார்.
அந்த குருநாதர் ஒன்றும் பேசவில்லை. பாபாவின் கால்களை நீண்ட கயிற்றின் ஒரு முனையில் கட்டிவிட்டு, பாபாவை அங்கிருந்த ஒரு கிணற்றில் தலைகீழாகத் தொங்கவிட்டார். கயிற்றின் மறுமுனையை, கிணற்றின் அருகில் இருந்த மரத்தில் கட்டிவிட்டார். பிறகு, தன் போக்கில் சென்றுவிட்டார்.
கிணற்று நீருக்கும் பாபாவின் தலைக்கும் இடையில் சில அடிகளே இடைவெளி இருந்தன. சுமார் 5 மணி நேரம் பாபா அப்படியே தொங்கிக்கொண்டு இருந்தார். பிறகு அங்கே வந்த குருநாதர் பாபாவிடம், ''நீ இப்போது எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டதற்கு, ''நான் பேரானந்த நிலையில் திளைத்திருக்கிறேன்'' என்றார் பாபா. உடனே அந்த குரு, பாபாவைத் தம்முடைய சீடராக ஏற்றுக்கொண்டார். குருவின் அருகில் தாம் இருந்த காலத்தைப் பற்றிக் கூறுகையில், தாம் மிகுந்த பரமானந்தத்துடன் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் பாபா. அவர் சொன்ன இந்தக் கதையை ஓர் உருவகக் கதை என்றே கொள்ளலாம்.
தாமே சத்குருவாகத் தோன்றிய ஸ்ரீசாயிநாதருக்கு குருநாதர் ஏது? குருநாதரின் அருமையும் அவசியமும் பற்றி, குருவின் ஆணையை ஒரு சீடன் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிப் பாமரர்களாகிய நாமும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே பாபா இப்படி ஓர் உருவகக் கதையைக் கூறியிருப்பதாகக் கொள்ள வேண்டும்.
பிரம்மஞானமும் பேரானந்தமுமே வடிவமான ஸ்ரீசாயிநாதர், தம்மை முழுதும் நம்பி சரணடைந்த பக்தர்களின் குறைகளையெல்லாம் இல்லாமல் செய்து, அவர்களை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். இப்படியாக ஆனந்தமாகவும் இருந்தார், ஆனந்தத்தை வழங்குபவராகவும் இருந்தார் நம்முடைய ஸ்ரீசாயிநாதர்.
காலனையும் காலத்தையும் வசப்படுத்தும் அருளாளர்!
Sai Baba Miracles
ஸ்ரீசாயிநாதரின் நாமாவளிகளில் காலாய நம: கால காலாய நம: என இரண்டு நாமாவளிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில், 'கால’ என்ற ஒரு வார்த்தைதான் வித்தியாசம். ஆனால், அந்த ஒரு வார்த்தையில்தான் எத்தனை அர்த்தங்கள்... எத்தனை தத்துவங்கள்! சாயிநாதரின் வாழ்வும் சரி, வாக்கும் சரி... மறைபொருள் கொண்டதாகவே திகழ்கின்றன. அதை உணர்த்துவதுபோலவே அமைந்திருக் கின்றன அவருடைய நாமாவளிகளும்.
'காலாய’ என்றால், காலனைப் போன்றவர் என்று பொருள். 'கால காலாய’ என்றால், காலனுக்கும் காலனைப் போன்றவர் என்று பொருள். சாயிநாதரேகாலனைப் போன்றவர் என்றால், அவர் எப்படி காலனுக்குக் காலனாக இருக்க முடியும்? மேலோட்டமாகப் பார்க்கும்போது, இதில் உள்ள தத்துவம் நமக்குப் புரியாதுதான். ஆனால்,ஸ்ரீசாயிநாதரின் அருளால், அவருடைய லீலைகளைப் படித்து, நம்முடைய சிந்தனையை உள்முகமாகத் திருப்பும்போது, அவருடைய ஒவ்வொரு நாமாவளியிலும் பொதிந்து கிடக்கும் தத்துவங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
'காலாய’ என்னும் சொல், காலத்தையும் குறிக்கும். காலம் அறிந்து செயல் படுவதால்தானே யமதர்மனுக்கு 'காலன்’ என்ற பெயரே ஏற்பட்டது?! ஆக, சாயிநாதர் காலனாகவும் இருக்கிறார்; காலமாகவும் இருக்கிறார்; காலனுக்குக் காலனாகவும் இருக்கிறார்; காலத்தை இயற்கையைத் தன் வசப்படுத்துபவராகவும் திகழ்கிறார். இந்த ஒவ்வொரு நிலையிலும் அவர் நிகழ்த்தியிருக்கும் லீலைகளைப் பார்ப்போம்.
காலனாகத் திகழ்கிறார் பாபா என்றால், 'உயிர்களைக் கவர்பவர்' என்று பொருள் இல்லை; தம்மிடம் சரண் அடைபவர்களின் உயிர்களைத் தன்வசப்படுத்திக் கொள்பவர் என்பதே உண்மை. அப்படி நம்மைத் தன்வசப் படுத்திக்கொள்ளும் காலனாகத் திகழும் பாபா, நம் மனதில் உள்ள அசுர குணங்களை அகற்றி, நம்மைப் புனிதம் நிறைந்தவர்களாகச் செய்கிறார். காலன் நம்முடைய உயிர்களைக் கவர்பவன் என்றால், காலனாகத் திகழும் சாயிநாதர் நம்மிடம் உள்ள தீய குணங்களைக் கவர்ந்துவிடுகிறார்.
Sai Baba Miracles
தம்மிடம் பூரண நம்பிக்கையுடன் பக்தி செலுத்துபவர்களை எப்படிப்பட்ட ஆபத்தில் இருந்தும் காப்பாற்றும் அருளாளர் அவர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மட்டுமல்ல, இறந்துவிட்டவர்களையும்கூட அவர் உயிர்த்து எழச் செய்திருக்கிறார்.
அப்படி ஓர் அற்புத நிகழ்ச்சி...
பாபாவின் பக்தரான ஜோஷி தேவ்காங்கரின் மகளான மலன்பாய், கடுமையான காசநோயால்துன்புற்றுக் கொண்டிருந்தாள். எத்தனையோ மருத்துவம் செய்தும் பலனில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவளை, பாபாவிடம் அழைத்து வந்தனர். அவர்களிடம், ''கவலை வேண்டாம்.அவளுக்கு ஒன்றும் நேராது. அவளை வாடாவுக்கு (பக்தர்கள் தங்கும் இடம்) அழைத்துச் சென்று, ஒரு கம்பளியின்மேல் படுக்க வையுங்கள். தண்ணீரை மட்டுமே குடிக்கக் கொடுங்கள்'' என்று கூறினார் பாபா. பாபாவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு, அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால், ஒரு வாரத்துக்குப் பின்பு, மலன்பாய் இறந்துவிட்டாள். பாபாவின் வார்த்தைகள் பொய்யாகிப் போனதால், அந்தப் பெண்ணின் உறவினர்கள் எல்லோருக்கும் வருத்தத்துடன் ஏமாற்றமும் ஏற்பட்டது. பொழுது விடிந்ததும், வேதனையும் துயரமுமாக, மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை அவர்கள் கவனிக்கத் தொடங்கினர். அன்றைக்குப் பார்த்து, காலை 8 மணிக்குமேல் ஆகியும் பாபா சாவடியில் இருந்து திரும்பவில்லை. சாவடிக்கு வெளியில் நின்றுகொண்டு, தன் கையில் இருந்த தடியால் தரையை அடித்துக் கொண்டும், கடுமையான சொற்களால் திட்டிக்கொண்டும் இருந்தார். பாபாவின் இந்தப் போக்குக்கான காரணம் அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை. அவரிடம் நெருங்கவும் அச்சம் கொண்டனர்.
அதேநேரம், வாடாவில் இறந்து விட்ட மலன்பாய் மூச்சு விட்டபடி, மெள்ளக் கண் விழித்தாள். அப்போது தான் சாவடியில் இருந்து புறப்பட்ட பாபா, தடியைத் தரையில் தட்டிக் கொண்டும் கடுமையாகத் திட்டிக் கொண்டும், வாடா வழியாக துவாரகா மாயிக்குத் திரும்பினார்.
கண் விழித்த மலன்பாய், இரவு தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரித் தாள்... ''நான் கறுத்த மனிதன் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டேன். பயந்து போன நான் பாபாவிடம், 'என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினேன். உடனே, கையில் தடியுடன் வந்த பாபா, அந்த மனிதனின் பிடியில் இருந்து என்னைக் காப்பாற்றி, சாவடிக்குத் தூக்கிச் சென்றார். அப்போதே நான் பாபாவினால் காப்பாற்றப்பட்டதாக உணர்ந் தேன்'' என்றாள். தொடர்ந்து, அதுவரை சாவடிப் பக்கமே சென்றிராத அவள், சாவடியின் அமைப் பைப் பற்றியும் துல்லியமாகக் கூறினாள்.
Sai Baba Miracles
காலனால் கவர்ந்து செல்லப்பட்ட மலன்பாயைக்காப்பாற்றிய பாபாவின் இந்த லீலையானது, பாபா 'காலனுக்குக் காலனாக இருப்பவர்’ என்ற பொருள் தரும் 'கால காலாய நம:’ என்ற நாமாவளிக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறதுதானே!
இறந்துவிட்ட ஒருவளை உயிருடன் எழச் செய்த பாபாவின் இந்த லீலையானது, 'இது எப்படிச் சாத்தியமாகும்?’ என்று பலரையும் சந்தேகிக் கச் செய்யும். ஆனால், மகான்கள் நினைத்தால் சாத்தியம் இல்லாததையும் சாத்தியமாகச் செய்ய முடியும் என்பதே சத்திய சாசுவதமான உண்மை!
இந்த நிகழ்ச்சியின் பின்னணியில், மற்றுமொரு ஆழ்ந்த தத்துவமும் பொதிந்து இருக்கிறது. அதுபற்றி, இந்த இரண்டு நாமாவளிகளுக்கும் பொருந்தும் விதத்தில் பாபா நிகழ்த்தி இருக்கும் லீலைகளைத் தெரிந்துகொண்ட பிறகு பார்ப்போம்.
காலத்தை இயற்கையை வசப்படுத்துபவராக வும் பாபா பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். அத்தகைய அதிசய நிகழ்ச்சி இது...
ஒருநாள், மாலை நேரம். அதுவரை நிர்மலமாகக் காணப்பட்ட வானத்தில், எங்கிருந்துதான் வந்தது என்று சொல்லமுடியாதபடி கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. சற்றைக்கெல்லாம் பேய்க்காற்றுடன் பெருமழையும் கொட்டத் தொடங்கியது. புயலும் மழையும், இடியும் மின்னலும் ஷீர்டி மக்களை மட்டுமின்றி ஆடு மாடு போன்ற அனைத்து ஜீவன்களையும் அச்சுறுத் தின. ஊரெங்கும் வெள்ளம். பொழுது விடிந்தால் ஷீர்டி கிராமமே இருக்காது என்ற நிலை. மக்கள் துவாரகாமாயிக்கு வந்து, பாபாவிடம் முறையிட்டுக் கதறினர்.
Sai Baba Miracles
கருணையே வடிவான பாபா அவர்களிடம் இரக்கம் கொண்டவராக வெளியில் வந்தார். வானத்தைப் பார்த்துக் கடுமையான வசைமொழிகளை இடியென கர்ஜித்தார். அவருடைய அந்த முழக்கத்தைக் கேட்டு அங்கிருந்த கிராம மக்கள் பெருத்த அச்சம் கொண்டார்கள். பாபா அதைப் பொருட்படுத்தாமல், வசை மொழிகளை தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்தார். அவர் வசை பாடப்பாட, புயல் காற்றும் பேய் மழையும் மெள்ள மெள்ளக் குறைந்துகொண்டே வந்தன. முன்னிரவு நெருங்க நெருங்க, கருமேகங்கள் விலகி, விண்மீன்கள் கண் சிமிட்டின. வெண்ணிலவும் எட்டிப் பார்த்தது. கிராம மக்கள் பாபாவை நன்றியுடன் நமஸ்கரித்து,தங்கள் மாடுகன்றுகளுடன் வீடு திரும்பினர்.
சேவகனாக வந்த பாபா
கீதையில் பக்தர்களின் யோகக்ஷேமத்தை தாம் நிறைவேற்றுவதாகக் கூறிய கிருஷ்ணரைப் போலவே, ஸ்ரீ சாயிநாதரும் தம்முடைய பக்தர்களின் துன்பங் களைப் போக்குவதற்காக எந்த நிலைக்கும் தம்மைத் தாழ்த்திக் கொள்ளவோ, எந்த வேதனைக்கும் தம்மை உட்படுத்திக்கொள்ளவோ தயங்கியதே இல்லை.
எங்கோ ஓர் இடத்தில் நெருப்பில் தவறி விழப் போன ஒரு குழந்தையை, துவாரகாமாயியில் துனியில் (பாபா எப்போதும் அணையாமல் எரியவிட்டுக் கொண்டிருக்கும் அக்னி குண்டம்)
எரிந்துகொண்டு இருந்த அக்னியில் தம்முடைய கைகளை விட்டு, தாம் இருந்த இடத்தில் இருந்த படியே அந்தக் குழந்தையைக் காப்பாற்றியவர் பாபா. அதேபோல், பிரசவ வேதனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு தாயின் உயிரையும், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே காப்பாற்றிய லீலையையும் நிகழ்த்தியுள்ளார்.
நானாசாஹேப் சந்தோர்க்கர் என்ற தம்முடைய பக்தரின் மகளுக்காக பாபா நிகழ்த்திய அந்த அற்புத அருளாடல்...
1904ம் ஆண்டு, நானாசாஹேப் ஷீர்டியில் இருந்து சுமார் நூறு மைல்கள் தொலைவில் இருந்த ஜாம்னர் என்ற கிராமத்தில், முன்சீப்பாக வேலை பார்த்துவந்தார். அவருடைய மகள் மைனத்தாய், பிரசவத்துக்காகத் தாய்வீட்டுக்கு வந்திருந்தாள். மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த நாள் கடந்தும்கூட, குழந்தை பிறக்காமல், பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டு இருந்தாள் அவள். மருத்துவர்களும் அவள் அபாயகரமான நிலையில் இருப்பதாகக் கூறிவிட்டனர். வேறு வழியே இல்லை என்ற நிலையில், திக்கற்றவர் களுக்கு ஒரே புகலிடமான பாபாவிடம் தன் மகளைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்து கொண்டார் நானாசாஹேப்.
Sai Baba Miracles
அதே நேரத்தில், ஷீர்டியில் ராம்கீர்புவா என்ற பக்தர் பாபாவிடம் சென்று, தான் ஊருக்குப் புறப்பட விரும்புவதாகத் தெரிவித்து, பாபாவின் உத்தரவை எதிர்பார்த்து நின்றார். அந்த பக்தரை பாபா பாபுகீர்புவா என்றுதான் அழைப்பது வழக்கம். அவர் ஊருக்குச் செல்ல அனுமதி தந்த பாபா, அதற்கு முன்பாக ஜாம்னருக்குச் சென்று, நானாசாஹேப் சந்தோர்க்கரிடம் உதியையும், ஷாமா இயற்றிய ஆரத்தி பாடல் எழுதப்பட்ட ஒரு காகிதத்தையும் கொடுக்கும்படி சொன்னார். ராம்கீர்புவாவும் பாபா சொன்னபடியே செய்ய முடிவெடுத்தார். ஆனால், அவரிடம் அப்போது இருந்தது வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே! அந்தப் பணத்தைக் கொண்டு, ஜல்கான் என்ற இடம் வரை மட்டுமே போகமுடியும். அங்கிருந்து ஜாம்னர் 30 மைல் தொலைவில் இருந்தது. அங்கு செல்வதற்குப் போதிய பணம் இல்லை. பாபாவும் அவருக்குப் பணம் எதுவும் தரவில்லை. ஆனாலும், வழியில் அவருக்குத் தேவையானவை அனைத்தும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
பாபாவின் வார்த்தைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ராம்கீர்புவா, சற்றும் தாமதிக்காமல் இரவு ரயிலில் ஜாம்னருக்குப் புறப்பட்டார். அதிகாலை 3 மணிக்கு ரயில் ஜல்கானை அடைந்தது. அவரிடம் அப்போது இரண்டணாக்கள் மட்டுமே மீதி இருந்தது. மற்ற பயணிகள் வாடகை வண்டிகளை அமர்த்திக்கொண்டு அவரவர்களின் ஊர்களுக்குச் செல்வதைக் கண்ட ராம்கீர்புவா, தாம் 30 மைல்கள் நடந்து செல்லவேண்டும் என்பதுதான் பாபாவின் சங்கல்பம் போலும் என்று நினைத்துக்கொண்டு நடக்க யத்தனித்த வேளையில், ''ஷீர்டியில் இருந்து பாபுகீர்புவா என்று யாரேனும் வந்திருக்கிறீர் களா?'' என்று கேட்டுக்கொண்டே ராம்கீர்புவா இருந்த இடத்துக்கு வந்தான் ஒருவன்.
அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ராம்கீர்புவா, அவனைப் பற்றிய விவரம் கேட்டார். தான் நானாசாஹேப் சந்தோர்க்கரின் பணியாள் என்றும், அவர்தான் தன்னை அனுப்பி வைத்ததாகவும் கூறி, தான் கொண்டு வந்திருந்த குதிரை வண்டியில் ராம்கீர்புவாவை ஏற்றிக்கொண்டு, ஜாம்னர் செல்லும் பாதையில் ஓட்டிச் சென்றான்.
பாதி தூரம் சென்ற பிறகு, ஓர் ஓடை தெரிந்தது. அந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, குதிரைகளை அவிழ்த்து, தண்ணீர் பருக ஓடைக்கு அழைத்துச் சென்றான். பின்னர், ராம்கீர்புவாவிடம் சிற்றுண்டி அருந்துமாறு சொன்னான். ராம்கீர்புவா வேண்டாம் என மறுக்க, அவர் மறுப்பதற்கான காரணத்தை ஒருவாறு யூகித்துத் தெரிந்து கொண்டவன், தான் இந்து க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவன் என்று கூறியதுடன், அந்த உணவும்கூட நானா சாஹேபினால் அனுப்பிவைக்கப் பட்டதுதான் என்றும் சொல்லி, அவரைச் சாப்பிடச் சொன்னான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும், அங்கிருந்து புறப்பட்டனர்.
கருக்கல் வேளையில், ஓர் இடத்தில் ராம்கீர்புவா இயற்கை உபாதைகளைப் போக்கிக்கொள்ள, வண்டியில் இருந்து இறங்கினார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கே வண்டியும் இல்லை; வண்டியை ஓட்டி வந்தவனும் இல்லை. ஆனால், ஜாம்னர் கிராமத்தின் எல்லைக்குத் தான் வந்து விட்டதை அறிந்து கொண்ட ராம்கீர்புவா, சற்றும் தாமதிக்காமல் விரைவாக நடந்தே நானா சாஹேபின் வீட்டுக்குச் சென்று, பாபா தன்னிடம் கொடுத்தனுப்பிய உதியையும், ஆரத்திப் பாடல் எழுதப்பட்டு இருந்த காகிதத்தையும் கொடுத்தார்.
Sai Baba Miracles
நானாசாஹேப் பாபாவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தபடியே, உதியை தன் மகளுக்குக் கொடுத்து, பாபாவின் ஆரத்தி பாடலைப் பாடினார். அடுத்த சில நிமிடங்களில், அவருடைய மகளுக்கு சுகப் பிரசவத்தில் அழகான குழந்தை பிறந்தது. அதன் பிறகு, பாபாவின் ஆற்றல் பற்றியும், பக்தர்களின் நலனில் அவர் எவ்வளவு கருணையுடன் அருள்புரிகிறார் என்பது பற்றியும் பெரிதும் வியப்புடன் பேசிக்கொண்டனர். பேச்சினிடையே ராம்கீர்புவா நானாசாஹேபிடம், அவர் தன்னை அழைத்து வர ரயில்வே ஸ்டேஷனுக்குக் குதிரை வண்டியை அனுப்பி இருக்காவிட்டால், தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் வந்திருக்க முடியாது என்று சொல்லவும், நானாசாஹேப் பெரிதும் வியப்பு அடைந்தார். காரணம், அவர் அப்படி யாரையும் ரயில் நிலையத்துக்கு அனுப்பவில்லை. அதைக் கேட்டு, ராம்கீர்புவாவும் திகைத்துப் போனார். எனில், குதிரை வண்டியுடன் வந்த அந்தச் சேவகன் யார்? அவனை எங்கிருந்து பாபா அனுப்பி வைத்தார்?
நானாசாஹேபும் ராம்கீர்புவாவும், குதிரை வண்டியில் வந்தது யார் என்று தெரியாமல் திகைத்து நின்ற போது, ரயிலடியில் நடந்த ஒரு விஷயம் ராம்கீர்புவாவின் நினைவுக்கு வந்தது.
ரயிலடியில் இருந்து நானாசாஹேபின் வீட்டுக்கு எப்படிப் போவது என்று தவித்துக்கொண்டு இருந்தபோது, தன்னை அழைத்துப் போக வந்த நபர், ''இங்கே ஷீர்டியில் இருந்து வந்திருக்கும் பாபுகீர்புவா யார்?'' என்று கேட்டார் அல்லவா? ராம்கீர்புவாவின் பெயரை பாபுகீர்புவா என்று மாற்றி அழைப்பது பாபா மட்டும்தான். இதை நானாசாஹேபிடம் தெரிவித்த ராம்கீர்புவா, பாபாவே குதிரை வண்டியுடன் ரயிலடிக்கு வந்து, தன்னை ஜம்னாரில் இறக்கிவிட்டுச் சென்றதாகத்தான் தான் உணர்வதாகக் கூறினார். பாபாவின் அளப்பரிய கருணைத் திறம் கண்டு இருவருமே மெய்சிலிர்த்துப் போனார்கள்.

Saturday, 27 April 2019

சத்குரு சாய்நாதர் சரிதம்

முன்னர், நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பத்ரி என்ற ஊரில், வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்த ஹரிஸாதே என்ற அந்தணர், தன் மனைவி லக்ஷ்மியுடன் வசித்து வந்தார். வறுமையிலும் செம்மையாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு, குழந்தை இல்லையே என்னும் கவலை பெரிதும் வாட்டியது. இதற்காக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததன் பயனாக, விரைவிலேயே அவர்களுக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
சில நாட்களில் அந்தக் குழந்தையைப் பார்க்க வந்த ஜோதிட நண்பர் ஒருவர், குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தார். அந்தக் குழந்தை ஒரு தெய்விகக் குழந்தை என்பதையும், அந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் விரைவிலேயே இறந்து விடுவார்கள் எனவும், அந்தக் குழந்தை வேறு இடத்தில் வளரும் என்றும் அவர் தெரிந்துகொண்டார். இந்த விஷயம் தெரிந்து, குழந்தையைப் பெற்றவர்கள் பெரிதும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஒருநாள் இரவு, அவர்களுடைய கனவில் தோன்றிய இறைவன், 'முற்பிறவியில் இஸ்லாமியகுடும்பத்தில் பிறந்து, பிராமண குடும்பத்தில் வளர்ந்து, ராம நாம தாரக மந்திரத்தை பாரெங்கும் பரப்பிய கபீர்தாஸரே இப்போது உங்களுக்குக் குழந்தையாகப் பிறந்து இருக்கிறார். வருங்காலத்தில் இந்தக் குழந்தை ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே ஸ்தாபிக்க இருக்கிறது. உங்கள் மகனைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.நாளைக் காலையில் பக்கீர் ஒருவர் வந்து, உங்கள் குழந்தையைக் கொடுக்குமாறு கேட்பார். தயங்காமல் உங்கள் குழந்தையை அவரிடம் கொடுத்து விடுங்கள். அதுதான் அந்தக் குழந்தைக்கு நல்லது!’ என்று சொல்லி மறைந்தார்.
மறுநாள் காலையில் இருந்தே, அந்தக் குழந்தை வீறிட்டு அழுதபடி இருந்தது. குழந்தையின் தாயார் லக்ஷ்மி, யாரும் வந்து குழந்தையைக் கேட்டு விடக் கூடாது என்று மனதுக்குள் அழுதபடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். கலங்கி நின்ற மனைவியிடம் ஹரிஸாதே, 'ஏன் கவலைப் படுகிறாய்? நம் கனவில் இறைவன் சொன்னது போல், பக்கீர் வந்து குழந்தையைக் கேட்டால், கொடுத்துவிடுவோம். எங்கிருந்தாலும் நம் குழந்தை நன்றாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு வேண்டும்!’ என்று ஆறுதல் கூறினார். அவர் அப்படிச் சொல்லி முடிக்கவும், வாசலில் பக்கீர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வாசலில் வந்து நின்ற பக்கீரைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வீறிட்டு அழுதபடி இருந்த அந்தக் குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்தி, அழகாகச் சிரித்தது. பக்கீர் தன்னிடம் அந்தக் குழந்தையைத் தந்துவிடுமாறு கேட்க, மறுப்புச் சொல்லாமல் அவ்விதமே கொடுத்துவிட்டார்கள் அந்தத் தம்பதி. அதன் பிறகு, அந்தக் குழந்தை போன வழி அவர்களுக்குத் தெரியாது.
குழந்தையை வாங்கிக்கொண்ட பக்கீர், தன் வீட்டுக்குச் சென்று அதை மனைவியிடம் கொடுத்தார். குழந்தைப்பேறு இல்லாத தங்களுக்கு இறைவனே அந்தக் குழந்தையைக் கொடுத்ததாக எண்ணி, அவர்கள் அதைச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். பிராமண குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தை இஸ்லாமிய தம்பதியரிடம் இனிதே வளர்ந்து வந்தது.
சில வருடங்கள் கடந்தன. பக்கீரின் உடல்நலம் குன்றியது. தாம் இனி நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட பக்கீர், அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவரான ஜமீன்தார் கோபால் ராவ் தேஷ்முக் என்பவர்தான் சட்டென அவர் நினைவுக்கு வந்தார். உடனே பக்கீர் தன் மனைவியை அழைத்து, 'இப்போது நான் சொல்லப் போவது உனக்கு வருத்தம் தரத்தான் செய்யும். ஆனாலும், சொல்லித்தான் ஆகவேண்டும். இனி, நான் சில நாள்களே உயிருடன் இருக்க முடியும். நான் மறைந்ததும், நீ நம் மகனைஅழைத்துக்கொண்டு, சேலு என்ற இடத்தில் வசித்து வரும் கோபால்ராவ் தேஷ்முக் என்னும் வெங்கூசாவிடம் சென்று, அடைக்கலம் கேள். பிராமண குலத்தில் பிறந்து, வேத சாஸ்திரங்களில் நிபுணராகவும், தர்மசிந்தனை கொண்டவராகவும் விளங்கும் அவர் உங்களுக்கு அடைக்கலம் தருவார்'' என்றார். அது போலவே, அடுத்த சில நாள்களில் அவர் மறைந்ததும், அவருடைய மனைவி, வெங்கூசாவிடம் சென்று அடைக்கலம் கேட்டாள். பெரும் ஞானியான அவருக்கு அந்தச் சிறுவன் உண்மையில் யார் என்பது விளங்கிவிட்டது. அவர் அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பக்கீரின் மனைவிக்கும் தனியாக ஓர் இடத்தில் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்து, அவளுடைய வாழ்க்கைக்கும் வழி செய்துகொடுத்தார். இப்படியாக, பிராமண குடும்பத்தில் பிறந்து, சில வருடங்கள் இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, மறுபடியும் பிராமணரான வெங்கூசாவிடம் வந்து சேர்ந்த அந்தச் சிறுவன்தான், 16 வயது பாலகனாக ஷீர்டி கிராமத்தின் எல்லையில் யோக நிஷ்டையில் ஆழ்ந்தவராக கிராம மக்களுக்குக் காட்சி தந்த ஸ்ரீசாயிநாதர்.
ஹரிஸாதே தம்பதிக்குக் குழந்தையாகப் பிறந்து, பின்னர் பக்கீர் ஒருவரால் வளர்க்கப்பட்டு, சில வருடங்களில் வெங்கூசாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிறுவன்தான் சாயிநாதர் என்று பார்த்தோம். வெங்கூசாவினால் சீடனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தச் சிறுவன் ஏன் அவரை விட்டுப் பிரியவேண்டும்? அதற்கான அவசியம் என்ன?
வெங்கூசா தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்த்ததுமே, அவன் பிற்காலத்தில் ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே சிருஷ்டிப்பான் என்பதைத் தமது தீர்க்க தரிசனத்தால் தெரிந்துகொண்டார். சதாசர்வ காலமும் ராமனின் புகழ் பாடுவதையே பிறவிப்பயனாகக் கருதி வாழ்ந்த கபீரின் மறு அவதாரமே அந்தச் சிறுவன் என்றும் அவர் உறுதியாக நம்பினார். எனவே, அவர் அந்தச் சிறுவனை மிகுந்த பரிவுடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தார்.
தாம் பூஜை செய்யும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும்... எப்போதும் அந்தச் சிறுவனைத் தம்முடனே வைத்துக்கொண்டார். அதுமட்டும் இல்லாமல், தாம் பெற்றிருக்கக்கூடிய அத்தனை ஞானத்தையும் அவனுக்கு உபதேசிக்கவும் செய்தார். இப்படியாகப் பல வருஷங்கள் சென்றன. அந்தச் சிறுவனுக்கு 15 வயது நெருங்கிவிட்டது. எங்கிருந்தோ வந்த அந்தச் சிறுவனுக்கு வெங்கூசா இத்தனை முக்கியத்துவம் தருவது, பலவருஷங்களாக அவருடனேயே இருந்துவரும் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் உள்ளத்தில் பொறாமை என்னும் பொல்லாத பேய் தலைவிரித்து ஆடியது. ஒருவர் எத்தனைதான் நல்லவராக இருந்தாலும், அவரின் மனத்தில் பொறாமை எப்போது இடம்பெறுகிறதோ, அப்போதே அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த அத்தனை நல்ல குணங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. அப்படி, வெங்கூசாவின் தொடர்பினால் நல்ல பண்புகளுடன் திகழ்ந்த அவர்களுடைய மனத்தில் பொறாமை ஏற்பட்டதுமே, அவர்களின் நல்ல பண்புகள் காணாமல் போய்விட்டன.
Sai Baba History
அவர்கள் அந்தச் சிறுவனை எப்படியும் வெங்கூசாவிடம் இருந்து விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தனர். அவர்களுக்கெல்லாம் மூத்தவனாக இருந்த ஒருவன், 'அதெல்லாம் சரிப்பட்டு வராது. அந்தப் பையனைக் கொன்றுவிடுவதே சரியான வழி! அவனைக் கொன்றால், ஏனென்று கேட்பதற்கு எவரும் இல்லை. குருநாதர் கேட்டால், நமக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடலாம்’ என்று கூறினான். அனைவரும் அதற்கு உடன்பட்டனர். தகுந்த நேரத்துக்குக் காத்திருந்தனர்.
ஒருநாள், வெங்கூசா அந்தச் சிறுவனுடன் சேலுவுக்கு அருகில் இருந்த தம்முடைய தோட்டத்துக்குச் சென்றிருந்தார். இனி நடக்கப்போவது என்ன என்பது அவருடைய உள்ளத்துக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. 'எல்லாம் இறைவனின் ஆணைப்படியே நடக்கும்’ என்று தம்மைத் தேற்றிக்கொண்டவராக, நடக்கப்போகும் விபரீதத்தை எதிர்பார்த்தபடி, ஒரு மரத்தின் அடியில் இருந்த பாறையில் படுத்துக்கொண்டு, தமக்கு அருகில் பணிவுடன் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனுக்கு ஞான உபதேசம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது, அருகில் புதர் மறைவில் மறைந்திருந்த அந்தப் பொறாமைக்காரர்களின் தலைவன், ஒரு செங்கல்லை எடுத்து அந்தச் சிறுவனின் தலையைக் குறிபார்த்து வீசினான். வெங்கூசா, தம் கரங்களை உயர்த்தி, அந்தச் செங்கல்லை அந்தரத்திலேயே நிற்கும்படி செய்தார். அவர்கள் மற்றொரு செங்கல்லை எடுத்து வீசினார்கள். அது வெங்கூசாவின் நெற்றியில் பட்டு, ரத்தம் பெருகியது. அதைப் பார்த்து மிகுந்த அச்சம் கொண்ட அந்தச் சிறுவன், ''ஐயனே, தாங்கள் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், அனைத்துக்கும் மேலான குருவாகவும் இருந்து, என்னிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறீர்கள். அதன் காரணமாகவே தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஞான வலிமையும் செல்வ வளமையும் பெற்றிருக்கும் உங்களுக்கு என் காரணமாக இந்த விபரீதம் ஏற்பட்டது கண்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் உங்களை விட்டுப் பிரிந்துவிட்டால் இப்படியான விபரீதங்கள் நடக்காது அல்லவா? எனவே, உங்களிடம் இருந்து பிரிந்து செல்ல, என்னை நீங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று மன்றாடி கேட்டுக்கொண்டான்.
Sai Baba History
தம் தலையில் ரத்தம் பெருக்கெடுத்த அந்த நிலையிலும், வெங்கூசா அந்தச் சிறுவனின் தலையைப் பரிவுடன் வருடிக் கொடுத்தபடி, ''நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்தே அமைந்ததுதான் இந்த உலகம். இதற்கெல்லாம் அச்சப்பட்டால், இந்த உலகத்தில் பிறந்த நாம் நமக்கான கடமைகளைச் செய்ய முடியாமலேயே போய்விடும்'' என்றவர், சற்றுத் தொலைவில் ஒருவன் காராம்பசு ஒன்றை ஓட்டிச் செல்வதைப் பார்த்து, அந்தச் சிறுவனிடம் தம்முடைய கமண்டலத்தைக் கொடுத்து, அந்த மாட்டுக்காரனிடம் சென்று, பால் கறந்து பெற்று வருமாறு சொல்லி அனுப்பினார். அந்தச் சிறுவனும் அந்த மாட்டுக்காரனிடம் சென்று, பால் கறந்து தரும்படி கேட்டுக் கொண்டான். அதைக் கேட்டு அந்த மாட்டுக் காரன் விரக்தியான குரலில், ''இந்த மாடு மலடாகிவிட்டது. இதனிடமிருந்து நான் எப்படிப் பால் கறந்து தருவது?'' என்றான். அவன் இப்படிச் சொன்னாலும், அந்தச் சிறுவன் சமாதானம் அடையவில்லை. 'பெரும் ஞானியான தம் குருநாதருக்கு இது மலட்டு மாடு என்று தெரியாதா என்ன?’ என்று நினைத்து, அந்த மாட்டுக்காரனிடம், ''இந்த விஷயத்தை நீயே என் குருநாதரிடம் வந்து சொல்'' என்று சொன்னான். அதன்படியே மாட்டுக்காரனும் வெங்கூசாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னான்.
அதைக் கேட்டுச் சிரித்த வெங்கூசா, ''எல்லாமே இறைவனின் திருவுள்ளப்படியே நடக்கும். இறைவனின் அருள் பெற்றவர்கள் நினைத்தால், கறவை நின்ற மாட்டை யும் பால் கொடுக்கச் செய்ய முடியும்'' என்று சொன்னதுடன், அந்த மாட்டின் அருகில் சென்று, வானத்தைப் பார்த்துப் பிரார்த்தித்து, அந்த மாட்டை மூன்று முறை தடவிக் கொடுத்தார். அதன் மடிக்காம்புகளை வருடி னார். பின்பு, அவனிடம் பால் கறந்து தருமாறு கூறினார். மாட்டுக் காரனும் சிறுவனிடம் இருந்த கமண்டலத்தைப் பெற்று, பால் கறக்கத் தொடங்க, கமண்டலத்தில் நுரையுடன் பால் நிரம்பித் தளும்பியது. வியப்பும் சந்தோஷமும் கொண்ட அந்த மாட்டுக்காரன், வெங்கூசாவை மிகப் பணிவுடன் வணங்கி, நன்றி தெரிவித்து, தனது மாட்டுடன் புறப்பட்டுச் சென்றான். வெங்கூசா தமக்கு அருகில் இருந்த அந்தச் சிறுவனைப் பார்த்துக் கைகளை நீட்டச் சொன்னார். நீட்டிய அவன் கைகளில் கமண்டலத்தில் இருந்த பாலை விட்டு, அவனைப் பருகும்படிச் சொன்னார். அந்தச் சிறுவனும் அப்படியே பயபக்தியுடன் வாங்கிப் பருகினான். மூன்று முறை அப்படிப் பருகிய பின்பு, அந்தச் சிறுவனிடம் வெங்கூசா, ''குழந்தாய்! என்னுடைய பூஜைகளாலும், தியானத்தாலும், தவத்தாலும் நான் பெற்றிருக்கக்கூடிய அத்தனை யோக ஸித்திகளையும் இதோ இப்போது உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். நான் இதுவரை உன்னைக் குழந்தையாகவே நினைத்துவிட்டேன். உண்மையில் நீ இப்போது வாலிபப் பருவத்தை அடைந்துவிட்டாய். இனியும் நீ என்னிடம் இருப்பது சரியில்லை. உன்னால் இந்த உலகத்துக்கு அநேக நன்மைகள் ஏற்பட உள்ளன. நீ என்னை விட்டுப் பிரியும் தருணம் வந்துவிட்டது!'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அதைக் கேட்டு அந்தச் சிறுவன் கலங்கவில்லை என்றாலும், தன் குருநாதரிடம், ''நான் முதலில் உங்களை விட்டுப் பிரிந்து செல்வதாகச் சொன்ன போது, வேண்டாம் என மறுத்த தாங்கள், இப்போது நான் உங்களை விட்டுச் செல்லவேண்டும் என்று சொல்கிறீர்களே, ஏன்?'' என்று கேட்டான். அதற்கு வெங்கூசா, ''நீ என்னை விட்டுச் செல்லப்போவதாகச் சொன்னது உன்னுடைய அச்சத்தினால்தான். ஆனால், இப்போது நான் உன்னைப் போகச்சொல்வது விதியின் வலிமையினால். இதுவரை எனக்குக் குழந்தையாக இருந்த நீ, இனிமேல் கோடானுகோடி பேர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், தனிப்பெரும் குருவாகவும் திகழப் போகிறாய். இந்த உலகத்தில் உள்ள எல்லாவிதமான பேதங்களையும் கடந்து, தனிப்பெரும் தெய்வமாகத் திகழப்போகிறாய். உன்னை நாடிச் சரண் அடைபவர்களின் சகல துன்பங்களையும் அகற்றி, அவர்களுடைய உள்ளங்களில் சந்தோஷம் என்னும் அமிர்தம் தளும்பச் செய்யப் போகிறாய்!'' என்று அந்தச் சிறுவனைத் தேற்றி, அவன் செல்லவேண்டிய பாதைக்கு அவனை ஆற்றுப்படுத்தினார். பின்னாளில் பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே சிருஷ்டித்த ஸ்ரீசாயிநாதர்தான் அந்தச் சிறுவன் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அவரின் தெய்வாம்சத்தை வெங்கூசாவுக்குப் பிறகு, முதலில் தெரிந்து கொண்டவர்கள் யார், யார்?

Friday, 26 April 2019

நான் அன்புக்கு கட்டுப்பட்டு

நான் அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பவன். என்னிடம் உன்னை சேர்க்கும் எளிய வழி இதுவே. உண்மையை சொல்கிறேன். என் வார்த்தைகளை நம்பு. -ஷிர்டி சாய்பாபா

Tuesday, 23 April 2019

சாயி-யின் முன்னால் எவன்

சாயி-யின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்பிக்கிறானோ, அவன் வாழ்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம் (தருமம்), பொருள் (செல்வம்), இன்பம் (ஆசை), வீடு (முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்- ஷிர்டி சாய்பாபா (சாயி சத்ச்சரித்ரா 6 )

அந்தரங்க வழிபாடு

 அந்தரங்க வழிபாடு, ஒரு நூதன வழிபாட்டை ஹேமத்பந்த் நமக்கு கொடுத்திருக்கிறார். சத்குரு வின் பாதங்களை  கழுவும் வென்நீராக நமது ஆனந்தக் கண்ணீரை உபயோகித்து, பரிசுத்தமான அன்பு என்னும் சந்தனத்தை அவர் மேனியில் பூசிவிட்டு, உண்மை, நம்பிக்கை என்னும் உடை
யை அவர் மேனிக்கு உடுத்தி. "ஒருமை மனது" என்னும் கனியை அவருக்கு சமர்பிப்போம். சத்ச்சரித்ரா - 26

 

 

 

 

Saturday, 20 April 2019

சாய்பாபா என்பவர் யார்?

சாய்பாபா என்பவர் யார்?  அவர் எப்பேர்ப்பட்ட அவதாரம் ? ‌அவரிடம் எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி ராமகிருஷ்ண ஸ்வாமிஜி என்பவருக்கு அவரது ஆன்மீக குருவான பூஜ்யஸ்ரீ நரசிம்மசுவாமிஜி அருளி போதித்த உரை :


"அமைதியாய் அமர்" எனும் சாய்பாபாவின் அறிவுரையை என்றும் மறக்காதே !  பொறுமை,  பொறுமை, காத்திரு !   இந்தப் பொறுமை இறுதியில் கனி தரும்.

"முதலில் சாய்பாபாவின் பாதாரவிந்தங்களில் கவனம் வை!  பின் அப்படியே மேல்நோக்கி கவனத்தைக் கொண்டு போ !  சாய்பாபா பொன்னுடலின் ஒவ்வொரு பாகமாய் கவனத்தைக் குவித்தபடி தியானித்து இறுதியில் அத்திருவுருவம் முழுக்கவும் நினை! 

இப்படியே அவதாரத் திருவுருவின் கீழிருந்து மேலும்,  மேலிருந்து கீழும்,  ஆனால்,  "முழு விடுதலை தேவை!" என்ற ஒரே நோக்கோடு மனம் முழுவதையும் பாபாவின் பாதாரவிந்தங்களில் மட்டுமே குவித்து வைத்து பிரார்த்தி !.   அந்த "இறைமகனாரின் முழுக் கருணையும் உனக்கு கிடைக்கும் !".  முழு ஆனந்தம் - சச்சிதானந்தம் - உன்னை மேவும்.

பிரம்மாவுக்கும்,  விஷ்ணுவுக்கும், சிவனுக்கும்,  சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது.  சாய்பாபா எனும் பரிசுத்தமான மாசுமறுவற்ற எங்கும் நிறைந்த ஒரே பரப்பிரம்மத்தில் மும்மூர்த்திகளையும் ஒருங்கே நீ காணலாம்.

கட்டுப்படுத்தி பூட்டி மறைத்து வைக்காமல்,  அவருக்குள் இருக்கும் ஆனந்தமயமான இறைமையை,  அங்கெங்கனாதபடி எங்கெங்கிலும் காட்டி ஆடிக் கொண்டிருக்கிறார் சாய்பாபா.  இது உன் நினைவிலிருக்கட்டும் !

நிஜ சாதுக்களும் சந்நியாசிகளும் அப்படி எங்கும் நிறைந்துள்ள அந்த ஆனந்தத் தாண்டவத்தைக் கண்குளிர காணுவதிலேயே ஆனந்தமடைந்துக் கொண்டிருக்கின்றனர்.  நீயும் அதை முழுமையாக உணரலாம்.  

அவரது பாதங்களுக்குள் வந்து, முழுமையாக அடைக்கலம் அடைந்துவிடுவோருக்கு அவரது கருணை மழையைக் கட்டுக்கடங்காது பொழிந்து தள்ளுவார்.

"சாய்பாபா"தான் உன் தாய் !  அவளுக்கு உன் பசி தெரியும்.  ஊட்டுவார்.  ஆன்மீகப் பசியெடுத்துக் கதறும் உன் கூக்குரலைப் பசியில் அழும் குழந்தையின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டு உடனே தீர்க்கும் தாயாய் வந்து அவர் தீர்த்துவிடுவார்.

ஆனால் ஒன்றினை மட்டும் மனதில் எழுதிக்கொள் !... "மிக உயர்ந்த ஆன்மீக பலாபலன்களை எட்ட வேண்டுமென்றால்,  எல்லா வகையிலும் பரிசுத்தத்தைக் கடைப்பிடித்து ஒழுகாது முடியாது!"

எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்

உலகில்  உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்  . பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த கருணாமூர்த்தி , "மக்களிடம் காட்டியதைப் போலவே மாக்களிடமும் கருணை மழை பொழிந்தார்!"

பாபாவின் பார்வையில் "அனைத்து உயிரினமும் ஒன்றே !" என்று அவர் நிலைநாட்டியதன் நோக்கம்,  நாம் இவ்வுலகில் காணப்படும் ஜீவராசிகள் அனைத்திடமும்  கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ! "பிற உயிர்களிடத்தில் நாம் காட்டும் அன்பே பாபாவிற்கு செய்யும் சேவை !" என்பதை தனது  பக்தர் மூலம் மக்களுக்கு உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம் .

சீரடியில்  பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஒருமுறை,  அவள் தங்கியிருந்த வீட்டில் பாபாவுக்கான மதிய உணவைத் தயார் செய்துகொண்டிருந்தாள்.  மும்முரமாக சமையல் செய்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த பசியுள்ள நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு விடாமல் குரைக்கத் தொடங்கியது. 

வீட்டுக்கார அம்மாள், "சூ ! போ !" என்று விரட்டினாள்.  திருமதி.தர்கட்டோ அவளைத் தடுத்து , "பாவம் ! பசி போலும் !  அதுதான் இப்படி தொடர்ந்து குரைக்கிறது!". என்று கூறியபடியே,  சமையற்கட்டிலிருந்த  காய்ந்த ரொட்டி இரண்டை எடுத்து வந்து நாய்க்கு போட்டாள்.  நாயும் அதை வயிறார சாப்பிட்டு விட்டு திருமதி.தர்கட்டைப் பார்த்து நன்றியுடன் வாலை ஆட்டிவிட்டு சென்றது.

பேச்சு மும்முரத்திலிருந்த திருமதி.தர்கட் , "அடடா!  மதிய ஆரத்திக்கு நேரமாயிற்றே !" என்று அவசரமாக பாபாவுக்காக தயார் செய்த உணவை எடுத்துக் கொண்டு மசூதிக்குள் வேகவேகமாக சென்றார்.  பாபா அவளிடம், "அம்மா !   பொறு! பொறு!  ஏன் இந்த அவசரம் !   அதுதான், நீ தந்த உணவு தொண்டைவரை நிற்கிறதே?  அப்போதே நல்ல பசி!  சரியான நேரத்தில் என் பசியாற்றினாய்.  இந்தக் கருணை உள்ளத்தை கடைசி வரை மாற்றிக் கொள்ளாதே !" என்றார்.

திருமதி.தர்கட்டோ , "பாபா! நான் இப்போதுதானே மசூதிக்கே வருகிறேன்!  பிறகு நான் எப்படி உங்களுக்கு சாப்பாடு போட்டேன் !  நானே வேறொருவர் வீட்டில் இருக்கிறேன்!" என்று ஆச்சர்யத்தோடு கேட்டாள்..

"அம்மா !  சற்று நேரத்திற்கு முன் உன் வீட்டு வாசலில் வந்து குரைத்த நாய்க்கு இரண்டு காய்ந்த ரொட்டித்துண்டைப் போட்டாயே,  அந்த நாய்க்குள் நானே இருந்தேன் !  எறும்புக்கும் பசிக்குமே என்று கவலைப்பட்டு தோட்டத்திலே தானியங்களைப் போட்டு வைத்திருக்கிற புண்ணியவதி ஆயிற்றே நீ !" என்றார் பாபா.

அதைக் கேட்ட திருமதி.தர்கட்,  "ஓ !  பாபா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி !  அனைத்து உயிரினங்களிலும் உறைந்துள்ள சர்வவியாபி இவரே!"  என்று தனக்குள் நினைத்துக் கொண்டு மெய்சிலிர்த்து நின்றாள்.

Friday, 19 April 2019

ஓம் சாய் ராம்.

எவ்வளவு உலக விவகாரங்களில் ஈடுபட்டு இருப்பினும், ஓய்ந்த நேரங்களில் குருவின் பால் அன்பைச் செலுத்தி குருத்தியானம் செய்தல் அவசியம். இப்படி குரு வழிபாட்டைச் சிரமேற் கொள்வதால் சத்குருவின் பார்வை நம் மீது விழுந்து நமது பாவங்களை தகிக்கும்.