Tuesday 30 April 2019

அனுபவங்கள்

நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்' ஶ்ரீசாயிநாதரின் இரண்டு மகத்தான உபதேசங்கள் நம்பிக்கையும் பொறுமையும். நம்பிக்கை இருந்தால் கல்லிலும் கடவுளைத் தரிசிக்கலாம். பாபா தாம் அனைத்து உயிர்களிலும் இருப்பவர் என்று கூறி இருக்கிறார். அவரே தொடர்ந்து என்னுடைய சித்திரத்திலும் நான் உயிருடன் இருப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.
Sai Baba Stories
இதை விவரிக்கும் வகையில் பாபாவின் பக்தை ஒருவரின் வாழ்க்கையில் சாயிநாதர் நிகழ்த்திய அனுபவத்தைப் பார்ப்போம்.
தார்க்காட் என்பவரின் மனைவியும், அவருடைய மகனும் தீவிரமான பாபா பக்தர்கள் ஆவார்கள். தார்க்காட் என்பவருக்கு பாபாவிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஒருமுறை திருமதி தார்க்காட்டும் அவருடைய மகனும் ஷீரடிக்குச் செல்ல விரும்பினர். ஆனால், அவர்களுக்குள் ஒரு தயக்கம். தாங்கள் இருவரும் ஷீரடிக்குச் சென்றுவிட்டால், தங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் திருவுருவப்படத்துக்கு தினசரி செய்யப்படும் நைவேத்தியம் தடைப்பட்டு விடுமே என்று அவர்கள் தயங்கினர்.
அவர்களுடைய விருப்பத்தைப் புரிந்துகொண்ட தார்க்காட், அவர்கள் இருவரும் தயங்காமல் ஷீரடிக்குச் செல்லலாம் என்றும், அவர்கள் சார்பில் தானே சாயிநாதருக்கு நைவேத்தியம் செய்வதாகவும் உறுதி அளித்தார். அதனால், தாயும் மகனும் ஷீரடிக்குச் சென்றனர்.
தார்க்காட் தினமும் தான் காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பாக ஏதேனும் பிரசாதம் தயாரிக்கச் சொல்லி, பாபாவுக்கு நைவேத்தியம் செய்துவிட்டுச் செல்வார். மதிய உணவில் பாபாவுக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியம் பிரசாதமாகப் பரிமாறப்படும். மூன்றாவது நாள் பாபாவுக்கு நைவேத்தியம் செய்ய மறந்துவிட்டார். மதியம் உணவுக்கு வந்தவர், உணவில் பாபாவின் பிரசாதம் பரிமாறாமல் போகவே, பணியாளிடம் விவரம் கேட்டார். பணியாள் சொல்லித்தான் அன்று தான் பாபாவுக்கு நைவேத்தியம் செய்யாமல் சென்றுவிட்டது தார்க்காட்டுக்குத் தெரியவந்தது. மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனது குறித்து மனம் வருந்திய தார்க்காட் அப்போதே ஷீரடியில் இருந்த தன் மனைவிக்கு நடந்த செய்தியைத் தெரிவித்து, இனிமேல் பாபாவின் நைவேத்திய விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பதாக உறுதி கூறி ஒரு கடிதம் எழுதினார்.
Sai Baba Stories
அவர் கடிதம் எழுதிக் கொண்டிருந்த அதே வேளையில், துவாரகாமாயியில் பாபாவின் முன்பாக தார்க்காட்டின் மனைவியும் மகனும் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களைப் புன்னகையுடன் பார்த்த பாபா, ''இன்று மதியம் நான் உங்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மிகுந்த பசியுடன் இருந்த எனக்கு அங்கே உணவு எதுவும் கிடைக்கவில்லை'' என்று கூறினார். சாயிநாதர் அப்படிச் சொன்ன காரணம் தார்க்காட்டின் மனைவிக்குப் புரியவில்லை. ஆனால், மகன் ஓரளவுக்கு விஷயத்தை ஊகித்துக்கொண்டான். தன்னுடைய தந்தை அன்றைக்கு பாபாவுக்கு நைவேத்தியம் எதுவும் செய்யவில்லை என்று தன்னுடைய தாயிடம் கூறினான்.
இப்போது இருப்பதுபோன்ற தகவல் தொடர்பு வசதிகள் அப்போது இல்லாத காரணத்தால், உடனே தார்க்காட்டிடம் பேசி விவரம் தெரிந்துகொள்ள முடியவில்லை. சம்பவம் நடந்த மூன்றாவது நாள் தார்க்காட்டின் கடிதம் ஷீரடிக்கு வந்து சேர்ந்தது. தார்க்காட்டின் மனைவி மகன் ஊகித்துச் சொன்னது சரிதான் என்பதைத் தெரிந்துகொண்டாள்.
தன்னுடைய படத்திலும் தான் உயிருடன் இருப்பேன் என்று சாயிநாதர் சொன்னதை, தன்னுடைய இந்த அருளாடல் மூலம் உணர்த்தி இருக்கிறார். நம்பிக்கையுடன் அவருடைய திருவுருவப் படத்தை வணங்குபவர்களுக்கு, அவர் உடனுக்குடன் நன்மைகளை அருளவே செய்கிறார்.

No comments:

Post a Comment