Saturday, 20 April 2019

எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்

உலகில்  உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்  . பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த கருணாமூர்த்தி , "மக்களிடம் காட்டியதைப் போலவே மாக்களிடமும் கருணை மழை பொழிந்தார்!"

பாபாவின் பார்வையில் "அனைத்து உயிரினமும் ஒன்றே !" என்று அவர் நிலைநாட்டியதன் நோக்கம்,  நாம் இவ்வுலகில் காணப்படும் ஜீவராசிகள் அனைத்திடமும்  கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ! "பிற உயிர்களிடத்தில் நாம் காட்டும் அன்பே பாபாவிற்கு செய்யும் சேவை !" என்பதை தனது  பக்தர் மூலம் மக்களுக்கு உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம் .

சீரடியில்  பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஒருமுறை,  அவள் தங்கியிருந்த வீட்டில் பாபாவுக்கான மதிய உணவைத் தயார் செய்துகொண்டிருந்தாள்.  மும்முரமாக சமையல் செய்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த பசியுள்ள நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு விடாமல் குரைக்கத் தொடங்கியது. 

வீட்டுக்கார அம்மாள், "சூ ! போ !" என்று விரட்டினாள்.  திருமதி.தர்கட்டோ அவளைத் தடுத்து , "பாவம் ! பசி போலும் !  அதுதான் இப்படி தொடர்ந்து குரைக்கிறது!". என்று கூறியபடியே,  சமையற்கட்டிலிருந்த  காய்ந்த ரொட்டி இரண்டை எடுத்து வந்து நாய்க்கு போட்டாள்.  நாயும் அதை வயிறார சாப்பிட்டு விட்டு திருமதி.தர்கட்டைப் பார்த்து நன்றியுடன் வாலை ஆட்டிவிட்டு சென்றது.

பேச்சு மும்முரத்திலிருந்த திருமதி.தர்கட் , "அடடா!  மதிய ஆரத்திக்கு நேரமாயிற்றே !" என்று அவசரமாக பாபாவுக்காக தயார் செய்த உணவை எடுத்துக் கொண்டு மசூதிக்குள் வேகவேகமாக சென்றார்.  பாபா அவளிடம், "அம்மா !   பொறு! பொறு!  ஏன் இந்த அவசரம் !   அதுதான், நீ தந்த உணவு தொண்டைவரை நிற்கிறதே?  அப்போதே நல்ல பசி!  சரியான நேரத்தில் என் பசியாற்றினாய்.  இந்தக் கருணை உள்ளத்தை கடைசி வரை மாற்றிக் கொள்ளாதே !" என்றார்.

திருமதி.தர்கட்டோ , "பாபா! நான் இப்போதுதானே மசூதிக்கே வருகிறேன்!  பிறகு நான் எப்படி உங்களுக்கு சாப்பாடு போட்டேன் !  நானே வேறொருவர் வீட்டில் இருக்கிறேன்!" என்று ஆச்சர்யத்தோடு கேட்டாள்..

"அம்மா !  சற்று நேரத்திற்கு முன் உன் வீட்டு வாசலில் வந்து குரைத்த நாய்க்கு இரண்டு காய்ந்த ரொட்டித்துண்டைப் போட்டாயே,  அந்த நாய்க்குள் நானே இருந்தேன் !  எறும்புக்கும் பசிக்குமே என்று கவலைப்பட்டு தோட்டத்திலே தானியங்களைப் போட்டு வைத்திருக்கிற புண்ணியவதி ஆயிற்றே நீ !" என்றார் பாபா.

அதைக் கேட்ட திருமதி.தர்கட்,  "ஓ !  பாபா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி !  அனைத்து உயிரினங்களிலும் உறைந்துள்ள சர்வவியாபி இவரே!"  என்று தனக்குள் நினைத்துக் கொண்டு மெய்சிலிர்த்து நின்றாள்.

No comments:

Post a Comment