சாய்பாபா என்பவர் யார்? அவர்
எப்பேர்ப்பட்ட அவதாரம் ? அவரிடம் எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும் என்பதைப்
பற்றி ராமகிருஷ்ண ஸ்வாமிஜி என்பவருக்கு அவரது ஆன்மீக குருவான பூஜ்யஸ்ரீ
நரசிம்மசுவாமிஜி அருளி போதித்த உரை :
"அமைதியாய் அமர்" எனும் சாய்பாபாவின்
அறிவுரையை என்றும் மறக்காதே ! பொறுமை, பொறுமை, காத்திரு ! இந்தப்
பொறுமை இறுதியில் கனி தரும்.
"முதலில் சாய்பாபாவின்
பாதாரவிந்தங்களில் கவனம் வை! பின் அப்படியே மேல்நோக்கி கவனத்தைக் கொண்டு
போ ! சாய்பாபா பொன்னுடலின் ஒவ்வொரு பாகமாய் கவனத்தைக் குவித்தபடி
தியானித்து இறுதியில் அத்திருவுருவம் முழுக்கவும் நினை!
இப்படியே அவதாரத் திருவுருவின்
கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும், ஆனால், "முழு விடுதலை தேவை!"
என்ற ஒரே நோக்கோடு மனம் முழுவதையும் பாபாவின் பாதாரவிந்தங்களில் மட்டுமே
குவித்து வைத்து பிரார்த்தி !. அந்த "இறைமகனாரின் முழுக் கருணையும்
உனக்கு கிடைக்கும் !". முழு ஆனந்தம் - சச்சிதானந்தம் - உன்னை மேவும்.
பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும்,
சிவனுக்கும், சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது. சாய்பாபா எனும்
பரிசுத்தமான மாசுமறுவற்ற எங்கும் நிறைந்த ஒரே பரப்பிரம்மத்தில்
மும்மூர்த்திகளையும் ஒருங்கே நீ காணலாம்.
கட்டுப்படுத்தி பூட்டி மறைத்து
வைக்காமல், அவருக்குள் இருக்கும் ஆனந்தமயமான இறைமையை, அங்கெங்கனாதபடி
எங்கெங்கிலும் காட்டி ஆடிக் கொண்டிருக்கிறார் சாய்பாபா. இது உன்
நினைவிலிருக்கட்டும் !
நிஜ சாதுக்களும் சந்நியாசிகளும் அப்படி
எங்கும் நிறைந்துள்ள அந்த ஆனந்தத் தாண்டவத்தைக் கண்குளிர காணுவதிலேயே
ஆனந்தமடைந்துக் கொண்டிருக்கின்றனர். நீயும் அதை முழுமையாக உணரலாம்.
அவரது பாதங்களுக்குள் வந்து, முழுமையாக அடைக்கலம் அடைந்துவிடுவோருக்கு அவரது கருணை மழையைக் கட்டுக்கடங்காது பொழிந்து தள்ளுவார்.
"சாய்பாபா"தான் உன் தாய் ! அவளுக்கு
உன் பசி தெரியும். ஊட்டுவார். ஆன்மீகப் பசியெடுத்துக் கதறும் உன்
கூக்குரலைப் பசியில் அழும் குழந்தையின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டு உடனே
தீர்க்கும் தாயாய் வந்து அவர் தீர்த்துவிடுவார்.
No comments:
Post a Comment