Monday 29 April 2019

சத்குரு சாய்நாதர் அற்புதங்கள்

ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும்போது, மனம் கனிந்த பக்தியுடன்தான் செல்லவேண்டும்.அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப் பிரசாதமாகக் கிடைக்கப் பெறும்.
சென்னையைச் சேர்ந்த ராம பக்தர் ஒருவர், ஷீர்டி சாயிநாதரைப் பற்றியும், அவரை தரிசிக்கச் செல்லும் தன்னைப் போன்ற பஜனை கோஷ்டியினருக்கு அவர் மிகவும் தாராளமாகப் பணம் தருவதைப் பற்றியும் கேள்விப்பட்டு, தன் மனைவி, மகள், மைத்துனியுடன் ஷீர்டிக்குச் சென்று, பாபாவின் முன்னிலையில் ராமனின் புகழைப் போற்றும் பஜனைப் பாடல்களைப் பாடினார். பஜனை முடிந்ததும், பாபா அவர்களுக்கு ஏதேனும் பணம் கொடுப்பார். ஒருநாள் எதுவுமே கொடுக்கவில்லை. இதனால், பாபாவிடம் நிறைய பணம் பெற்றுச் செல்ல நினைத்து வந்த அந்த ராம பக்தர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்.
ஆனால், அவருடைய மனைவிக்கு ஆரம்பத்தில் பணத்தாசை இருந்தாலும், தினமும் பாபாவை தரிசித்து, அவர் முன்னிலையில் ராமனைப் போற்றி பஜனைப் பாடல்கள் பாடியதில், அன்றுதான் அவளுடைய மனதில் இருந்த பணத்தாசை அகன்றதுடன், பாபாவின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தியும் ஏற்பட்டுவிட்டது. அப்போதுதான் அவள் நாளும் வழிபடும் ஸ்ரீராமனாக அவளுக்கு தரிசனம் தந்து அருளினார் பாபா. எல்லோரும் சாயிநாதரை தரிசித்தனர் என்றால், அந்த ராம பக்தரின் மனைவியோ ஸ்ரீசாயிநாதரின் உருவத்தில், தான் தினமும் பூஜிக்கும் ஸ்ரீராமபிரானையே தரிசித்தாள்.
பாபாவை துவாரகாமாயியில் தரிசித்துவிட்டுத் திரும்பியதும், அந்த ராம பக்தரின் மனைவி, பாபாவினிடத்தில் தான் ராமரை தரிசித்ததாகக் கூறினாள். மனைவியின் சொல்லை அவர் கொஞ்சமும் நம்பாமல், அவள் சொன்னதை இழித்தும் பழித்தும் பேசினார். தம்மிடம் பரிபூரணமாக சரணாகதி அடைந்துவிட்ட அந்தப் பெண்மணியின் கணவரைத் திருத்தி ஆட்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு இப்பொழுது சாயிநாதருக்கு! அன்றைய இரவே, சாயிநாதர் தம்முடைய லீலையைத் தொடங்கிவிட்டார்.
அன்று இரவு, அந்த ராம பக்தர் உறங்கும்போது, தனது கைகள் இரண்டும் பின்புறமாகக் கட்டப்பட்டு, சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு, ஒரு காவலரால் துன்புறுத்தப்படுவதுபோல் கனவு கண்டார். கனவில், சிறைக்கம்பிகளுக்கு வெளியே பாபா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த அவர் பாபாவிடம், ''பாபா, நீங்கள்தான் என்னை எப்படியாவது இந்தச் சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும்' என்று மன்றாடினார்.
''இதில் நான் தலையிடுவதற்கு இல்லை. உன்னுடைய பாவங்கள்தான் உன்னைப் பின்தொடர்ந்து வந்து, உன்னைத் துன்புறுத்துகின்றன'' என்றார் பாபா.
''பாபா, உங்களைத் தரிசித்த மாத்திரத்திலேயே என்னுடைய பாவங்கள் நீங்கிவிட்டிருக்குமே..! அப்படியிருக்க, நீங்கள் இப்படிச் சொல்லலாமா?'' என்று கேட்டார் அவர்.
''அப்படியா சரி, உன் கண்களைக் கொஞ்சம் மூடிக் கொள்'' என்றார் பாபா. அவரும் அப்படியே கண்களை மூடிக்கொண்டு, சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தபோது, திடுக்கிட்டார். அவரைத் துன்புறுத்திய காவலர் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
ஏற்கெனவே பயந்து நடுங்கிக் கொண்டு இருந்த அந்த மனிதரை, ''நீ இப்போது வசமாக மாட்டிக் கொண்டாய். காவலனைக் கொன்றதற் காக நீ கடுமையாகத் தண்டிக்கப்படப் போகிறாய்'' என்று சொல்லி மேலும் பயமுறுத்தினார் பாபா.
''பாபா, ஏன் என்னை இப்படிக் கஷ்டப்படுத்து கிறீர்கள்? என்னை இந்தத் துன்பத்தில் இருந்து விடுவிக்க தங்களைத் தவிர யாரால் முடியும்? தாங்கள்தான் என்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்'' என்று மன்றாடினார் அவர்.
''என்னிடத்தில் பூரண நம்பிக்கை உனக்கு இருக்கிறதா?'' என்று பாபா கேட்க, அவரும், ''தங்களிடத்தில் இப்பொழுது எனக்குப் பூரண நம்பிக்கை உள்ளது' என்று கூறினார். அவருடைய மனமாற்றத்தை உணர்ந்துகொண்டவர்போல், திரும்பவும் அவரைக் கண்களை மூடிக்கொள்ளு மாறு கூறினார் பாபா. அதேபோல் அவரும் கண்களை மூடித் திறந்தபோது, அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபட்டதை அறிந்தார். பாபாவின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் அந்த ராம பக்தர்.
பின்னர் பாபா அவருடைய விருப்பப்படி சமர்த்த ராமதாசராக தரிசனம் கொடுக்க, அவ்வளவில் அந்தக் கனவும் முடிவுக்கு வந்தது.
மறுநாள் காலையில் உறக்கத்தில் இருந்து எழுந்தபோது, அந்த ராம பக்தருடைய மனதில் ஒரு தெளிவும், பரவசமும் நிறைந்திருந்தது. பின்னர் துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை தரிசித்து வணங்கியபோது, பாபா அவரை முழுமையாக ஆசீர்வதித்ததுடன், அவருக்குப் பணமும் இனிப்புகளும் கொடுத்து அனுப்பினார்.
Sai Baba Miracles
குடும்பத்தில் ஒரே ஒருவர் தன்னை நம்பிக்கையுடன் சரண் அடைந்திருந்தாலும்கூட அவர்பொருட்டு அந்தக் குடும்பத்தையே காப்பாற்றும் கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.
ஒரு பக்தருக்கு எந்த தெய்வத்திடம் பிரீதியோ, அந்தத் தெய்வத்தின் வடிவிலேயே பாபா அவருக்குக் காட்சி தந்த நிகழ்ச்சிகள் அவரின் திவ்விய சரிதத்தில் எத்தனையோ காணப்படுகின்றன.
சிறந்த சிவபக்தனான மேகாவுக்கு சிவபெருமானாக அருள் புரிந்தது, நானாசாஹேப் நிமோன்கரின் மகனான ஸோம்நாத் தேஷ்பாண்டேக்கு மாருதியாகக் காட்சி தந்தது, பாண்டு ரங்க விட்டலனின் பக்தர்களுக்கு பாண்டுரங்கனாக தரிசனம் தந்தது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிலிர்ப்பூட்டும் பிரசாதங்களாகும்.
சாயிநாதரின் ஜீவிதமும் சரி, அவருடைய உபதேசங்களும் சரி, அவருடைய லீலைகளும் சரி... எல்லாமே நம்முடைய மன மாசுகளை அகற்றி, மனித நிலையில் இருந்து தெய்விக நிலைக்கு நம்மை உயர்த்துகின்றன.
ஸ்ரீசாயி அஷ்டோத்திர சத நாமாவளிகளில்,
ஆனந்தாய நம: ஆனந்ததாய நம: - என இரண்டு நாமாவளிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம். ஆனால், அந்த ஒரு வித்தியாசத்தில்தான் எவ்வளவு பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது தெரியுமா?
இந்த இரண்டு நாமாவளிகளுக்கும் பொருத்த மாக பாபா எத்தகைய அதிசயங்களை நிகழ்த்தி யிருக்கிறார் தெரியுமா..?
தாம் ஞானம் பெற்றது பற்றி பாபா..!
ஆனந்தாய நம:
ஆனந்ததாய நம:
இந்த இரண்டு நாமாவளிகளும் ஶ்ரீநரசிம்ம ஸ்வாமிஜி அருளிய ஶ்ரீசாய் அஷ்டோத்திர சத நாமாவளியில் இருக்கும் நாமங்களாகும்.
முதல் நாமாவளியின் பொருள் 'ஆனந்தமாக இருப்பவர்’ என்பதாகும்; 'ஆனந்தத்தை வழங்குபவர்’ என்பது அடுத்த நாமாவளியின் பொருளாகும். நாம் ஒருவரிடம் ஒன்றைக் கேட்டால், நாம் கேட்பது அவரிடம் இருந்தால்தான், அவரால் அதை நமக்குக் கொடுக்க முடியும். தன்னிடம் இல்லாத ஒன்றை அவரால் நமக்குத் தரமுடியாது. அப்படியே இருந்து, அவர் நமக்கு அதைக் கொடுத்தாலும், அவரிடம் அது குறைந்துவிடும்.
ஆனால், சாயிநாதரிடம் நாம் கேட்பது நிச்சயமாகக் கிடைக்கும். அதேநேரத்தில், அவரிடம் அது குறைந்துவிடப்போவதும் இல்லை. எப்போதுமே ஆனந்தமாக இருக்கும் சாயிநாதர், நாம் வேண்டுகின்ற ஆனந்தத்தை நமக்கு வழங்குவதுடன், அவரும் ஆனந்தம் குறையாதவராகக் காணப்படுகிறார்.
சுக்ல யஜுர் வேதத்தில்,
Sai Baba Miracles
'ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே’
'அதுவும் பூர்ணம்; இதுவும் பூர்ணம்; அந்த பூர்ணத்தில் இருந்தே இந்த பூர்ணம் தோன்றி உள்ளது. பூர்ணத்தில் இருந்து பூர்ணத்தை எடுத்த நிலையிலும், பூர்ணம் அப்படியே இருக்கிறது’ என்று சொல்லியிருப்பதைப்போல, ஆனந்தமயமாகவும் ஆனந்த சொரூபியாகவும் இருக்கும் சாயிநாதரிடம் இருந்து, நாம் ஆனந்தத்தைக் கேட்டுப் பெற்றாலும்கூட, அவரிடம் இருக்கும் ஆனந்தம் அணுவளவும் குறைந்துவிடப் போவதில்லை.
இத்தகைய ஆனந்தம் குறைவின்றி அவரிடம் நிலைத்திருப்பதற்கு என்ன காரணம்? அந்த ஆனந்த அனுபவத்தை எந்த குருநாதரிடம் இருந்து, எந்த வகையில் அவர் பெற்றார்? இதுபற்றி, சாயிநாதரே ஓர் உருவகக் கதையின் மூலமாகக் கூறியிருக்கிறார்.
ஒருமுறை, புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த நான்கு பேர், பிரம்மஞானத்தை அடைவதற்காகக் காட்டு வழியில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களில் மூவர் பிரம்மத்தை அடைவதற்கான வழிகளைக் குறித்து வெவ்வேறு விதமான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். நான்காமவரோ, நம்முடைய அனைத்தையும் பரிபூரணமாக குருவின் திருவடிகளில் அர்ப்பணித்துவிட்டு, அவரைச் சரண் அடைவது ஒன்றே பிரம்மத்தை அடைவதற்கான சரியான உபாயமாகும் என்றார். இந்த நான்காவது நபராக பாபா குறிப்பிட்டது தம்மைத்தான்.
இப்படியாக அவர்கள் பேசிக்கொண்டு, காட்டுப் பாதையில் போய்க்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த காட்டுவாசி ஒருவன் அவர்களிடம், ''நீங்கள் யார்? இந்தக் காட்டுக்குள் ஏன் போகி றீர்கள்?'' என்று கேட்டான். அதற்கு அவர்கள், தாங்கள் பிரம்மஞானத்தைக் கண்டறிவதற்காகச் செல்லுவதாகச் சொன்னார்கள்.
பிரம்மஞானத்தைப் பற்றி காட்டுவாசிக்கு என்ன தெரியும்? எனவே அவன், ''உங்களைப் பார்த்தால் பசியால் களைத்துப் போனவர்களாகத் தெரிகிறது. என்னிடம் இருக்கும் உணவையும் தண்ணீரையும் தருகிறேன். சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். அப்போதுதான் உங்கள் களைப்பு நீங்கும். அடர்ந்த இந்தக் காட்டுக்குள் சென்றுவிட்டால், சென்ற வழியில் திரும்புவதற்கான தெளிவும் கிடைக்கும்'' என்றான். ஆனால், அவனைத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவனாகக் நினைத்து, அவன் தரும் உணவை ஏற்றுக்கொள்வதா என்ற எண்ணி, அவர்கள் மறுத்துவிட்டனர்.
Sai Baba Miracles
அடர்ந்த அந்த காட்டுக்குள் அலைந்து திரிந்து சோர்ந்துபோன அவர்கள், எப்படியோ கஷ்டப்பட்டு வந்த வழியைத் தெரிந்துகொண்டு திரும்பினர். வழியில் அதே காட்டுவாசி எதிர்ப்பட்டான்.
''நான் சொன்னதை நீங்கள் கேட்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்தக் கஷ்டம். நீங்கள் செல்லும் வழியில் யாரேனும் எதிரில் வந்து, உங்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தால், இறைவனே அதை அனுப்பியதாகத்தான் அர்த்தம். அதை உதாசீனப்படுத்திவிட்டுச் சென்றால், போகும் காரியம் நிறைவேறாது'' என்று கூறினான்.
அவன் மீண்டும் அவ்வளவு வற்புறுத்திச் சொல்லியும், அதை ஏற்றுக்கொள்ளாமல் முதல் மூன்று பேர் தங்கள் போக்கிலேயே போய்விட்டனர். ஆனால், நான்காமவரான பாபாவோ, அந்த மனிதனின் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டவராக, அவன் அன்புடன் கொடுத்த உணவையும் தண்ணீரையும் ஏற்றுக்கொண்டு, அவனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, பிரம்மஞானத்தைத் தேடி தமது பயணத்தைத் தொடர்ந்தார்.
சற்றைக்கெல்லாம், ஒரு குருநாதர் பாபாவின் எதிரில் வந்தார். பாபா அவரிடம், ''தாங்கள் எனக்கு பிரம்மஞானத்தை காட்டி அருளவேண்டும்'' என்று விநயத்துடன் கேட்டுக்கொண்டார்.
அந்த குருநாதர் ஒன்றும் பேசவில்லை. பாபாவின் கால்களை நீண்ட கயிற்றின் ஒரு முனையில் கட்டிவிட்டு, பாபாவை அங்கிருந்த ஒரு கிணற்றில் தலைகீழாகத் தொங்கவிட்டார். கயிற்றின் மறுமுனையை, கிணற்றின் அருகில் இருந்த மரத்தில் கட்டிவிட்டார். பிறகு, தன் போக்கில் சென்றுவிட்டார்.
கிணற்று நீருக்கும் பாபாவின் தலைக்கும் இடையில் சில அடிகளே இடைவெளி இருந்தன. சுமார் 5 மணி நேரம் பாபா அப்படியே தொங்கிக்கொண்டு இருந்தார். பிறகு அங்கே வந்த குருநாதர் பாபாவிடம், ''நீ இப்போது எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டதற்கு, ''நான் பேரானந்த நிலையில் திளைத்திருக்கிறேன்'' என்றார் பாபா. உடனே அந்த குரு, பாபாவைத் தம்முடைய சீடராக ஏற்றுக்கொண்டார். குருவின் அருகில் தாம் இருந்த காலத்தைப் பற்றிக் கூறுகையில், தாம் மிகுந்த பரமானந்தத்துடன் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் பாபா. அவர் சொன்ன இந்தக் கதையை ஓர் உருவகக் கதை என்றே கொள்ளலாம்.
தாமே சத்குருவாகத் தோன்றிய ஸ்ரீசாயிநாதருக்கு குருநாதர் ஏது? குருநாதரின் அருமையும் அவசியமும் பற்றி, குருவின் ஆணையை ஒரு சீடன் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிப் பாமரர்களாகிய நாமும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே பாபா இப்படி ஓர் உருவகக் கதையைக் கூறியிருப்பதாகக் கொள்ள வேண்டும்.
பிரம்மஞானமும் பேரானந்தமுமே வடிவமான ஸ்ரீசாயிநாதர், தம்மை முழுதும் நம்பி சரணடைந்த பக்தர்களின் குறைகளையெல்லாம் இல்லாமல் செய்து, அவர்களை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். இப்படியாக ஆனந்தமாகவும் இருந்தார், ஆனந்தத்தை வழங்குபவராகவும் இருந்தார் நம்முடைய ஸ்ரீசாயிநாதர்.
காலனையும் காலத்தையும் வசப்படுத்தும் அருளாளர்!
Sai Baba Miracles
ஸ்ரீசாயிநாதரின் நாமாவளிகளில் காலாய நம: கால காலாய நம: என இரண்டு நாமாவளிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில், 'கால’ என்ற ஒரு வார்த்தைதான் வித்தியாசம். ஆனால், அந்த ஒரு வார்த்தையில்தான் எத்தனை அர்த்தங்கள்... எத்தனை தத்துவங்கள்! சாயிநாதரின் வாழ்வும் சரி, வாக்கும் சரி... மறைபொருள் கொண்டதாகவே திகழ்கின்றன. அதை உணர்த்துவதுபோலவே அமைந்திருக் கின்றன அவருடைய நாமாவளிகளும்.
'காலாய’ என்றால், காலனைப் போன்றவர் என்று பொருள். 'கால காலாய’ என்றால், காலனுக்கும் காலனைப் போன்றவர் என்று பொருள். சாயிநாதரேகாலனைப் போன்றவர் என்றால், அவர் எப்படி காலனுக்குக் காலனாக இருக்க முடியும்? மேலோட்டமாகப் பார்க்கும்போது, இதில் உள்ள தத்துவம் நமக்குப் புரியாதுதான். ஆனால்,ஸ்ரீசாயிநாதரின் அருளால், அவருடைய லீலைகளைப் படித்து, நம்முடைய சிந்தனையை உள்முகமாகத் திருப்பும்போது, அவருடைய ஒவ்வொரு நாமாவளியிலும் பொதிந்து கிடக்கும் தத்துவங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
'காலாய’ என்னும் சொல், காலத்தையும் குறிக்கும். காலம் அறிந்து செயல் படுவதால்தானே யமதர்மனுக்கு 'காலன்’ என்ற பெயரே ஏற்பட்டது?! ஆக, சாயிநாதர் காலனாகவும் இருக்கிறார்; காலமாகவும் இருக்கிறார்; காலனுக்குக் காலனாகவும் இருக்கிறார்; காலத்தை இயற்கையைத் தன் வசப்படுத்துபவராகவும் திகழ்கிறார். இந்த ஒவ்வொரு நிலையிலும் அவர் நிகழ்த்தியிருக்கும் லீலைகளைப் பார்ப்போம்.
காலனாகத் திகழ்கிறார் பாபா என்றால், 'உயிர்களைக் கவர்பவர்' என்று பொருள் இல்லை; தம்மிடம் சரண் அடைபவர்களின் உயிர்களைத் தன்வசப்படுத்திக் கொள்பவர் என்பதே உண்மை. அப்படி நம்மைத் தன்வசப் படுத்திக்கொள்ளும் காலனாகத் திகழும் பாபா, நம் மனதில் உள்ள அசுர குணங்களை அகற்றி, நம்மைப் புனிதம் நிறைந்தவர்களாகச் செய்கிறார். காலன் நம்முடைய உயிர்களைக் கவர்பவன் என்றால், காலனாகத் திகழும் சாயிநாதர் நம்மிடம் உள்ள தீய குணங்களைக் கவர்ந்துவிடுகிறார்.
Sai Baba Miracles
தம்மிடம் பூரண நம்பிக்கையுடன் பக்தி செலுத்துபவர்களை எப்படிப்பட்ட ஆபத்தில் இருந்தும் காப்பாற்றும் அருளாளர் அவர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மட்டுமல்ல, இறந்துவிட்டவர்களையும்கூட அவர் உயிர்த்து எழச் செய்திருக்கிறார்.
அப்படி ஓர் அற்புத நிகழ்ச்சி...
பாபாவின் பக்தரான ஜோஷி தேவ்காங்கரின் மகளான மலன்பாய், கடுமையான காசநோயால்துன்புற்றுக் கொண்டிருந்தாள். எத்தனையோ மருத்துவம் செய்தும் பலனில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவளை, பாபாவிடம் அழைத்து வந்தனர். அவர்களிடம், ''கவலை வேண்டாம்.அவளுக்கு ஒன்றும் நேராது. அவளை வாடாவுக்கு (பக்தர்கள் தங்கும் இடம்) அழைத்துச் சென்று, ஒரு கம்பளியின்மேல் படுக்க வையுங்கள். தண்ணீரை மட்டுமே குடிக்கக் கொடுங்கள்'' என்று கூறினார் பாபா. பாபாவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு, அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால், ஒரு வாரத்துக்குப் பின்பு, மலன்பாய் இறந்துவிட்டாள். பாபாவின் வார்த்தைகள் பொய்யாகிப் போனதால், அந்தப் பெண்ணின் உறவினர்கள் எல்லோருக்கும் வருத்தத்துடன் ஏமாற்றமும் ஏற்பட்டது. பொழுது விடிந்ததும், வேதனையும் துயரமுமாக, மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை அவர்கள் கவனிக்கத் தொடங்கினர். அன்றைக்குப் பார்த்து, காலை 8 மணிக்குமேல் ஆகியும் பாபா சாவடியில் இருந்து திரும்பவில்லை. சாவடிக்கு வெளியில் நின்றுகொண்டு, தன் கையில் இருந்த தடியால் தரையை அடித்துக் கொண்டும், கடுமையான சொற்களால் திட்டிக்கொண்டும் இருந்தார். பாபாவின் இந்தப் போக்குக்கான காரணம் அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை. அவரிடம் நெருங்கவும் அச்சம் கொண்டனர்.
அதேநேரம், வாடாவில் இறந்து விட்ட மலன்பாய் மூச்சு விட்டபடி, மெள்ளக் கண் விழித்தாள். அப்போது தான் சாவடியில் இருந்து புறப்பட்ட பாபா, தடியைத் தரையில் தட்டிக் கொண்டும் கடுமையாகத் திட்டிக் கொண்டும், வாடா வழியாக துவாரகா மாயிக்குத் திரும்பினார்.
கண் விழித்த மலன்பாய், இரவு தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரித் தாள்... ''நான் கறுத்த மனிதன் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டேன். பயந்து போன நான் பாபாவிடம், 'என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினேன். உடனே, கையில் தடியுடன் வந்த பாபா, அந்த மனிதனின் பிடியில் இருந்து என்னைக் காப்பாற்றி, சாவடிக்குத் தூக்கிச் சென்றார். அப்போதே நான் பாபாவினால் காப்பாற்றப்பட்டதாக உணர்ந் தேன்'' என்றாள். தொடர்ந்து, அதுவரை சாவடிப் பக்கமே சென்றிராத அவள், சாவடியின் அமைப் பைப் பற்றியும் துல்லியமாகக் கூறினாள்.
Sai Baba Miracles
காலனால் கவர்ந்து செல்லப்பட்ட மலன்பாயைக்காப்பாற்றிய பாபாவின் இந்த லீலையானது, பாபா 'காலனுக்குக் காலனாக இருப்பவர்’ என்ற பொருள் தரும் 'கால காலாய நம:’ என்ற நாமாவளிக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறதுதானே!
இறந்துவிட்ட ஒருவளை உயிருடன் எழச் செய்த பாபாவின் இந்த லீலையானது, 'இது எப்படிச் சாத்தியமாகும்?’ என்று பலரையும் சந்தேகிக் கச் செய்யும். ஆனால், மகான்கள் நினைத்தால் சாத்தியம் இல்லாததையும் சாத்தியமாகச் செய்ய முடியும் என்பதே சத்திய சாசுவதமான உண்மை!
இந்த நிகழ்ச்சியின் பின்னணியில், மற்றுமொரு ஆழ்ந்த தத்துவமும் பொதிந்து இருக்கிறது. அதுபற்றி, இந்த இரண்டு நாமாவளிகளுக்கும் பொருந்தும் விதத்தில் பாபா நிகழ்த்தி இருக்கும் லீலைகளைத் தெரிந்துகொண்ட பிறகு பார்ப்போம்.
காலத்தை இயற்கையை வசப்படுத்துபவராக வும் பாபா பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். அத்தகைய அதிசய நிகழ்ச்சி இது...
ஒருநாள், மாலை நேரம். அதுவரை நிர்மலமாகக் காணப்பட்ட வானத்தில், எங்கிருந்துதான் வந்தது என்று சொல்லமுடியாதபடி கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. சற்றைக்கெல்லாம் பேய்க்காற்றுடன் பெருமழையும் கொட்டத் தொடங்கியது. புயலும் மழையும், இடியும் மின்னலும் ஷீர்டி மக்களை மட்டுமின்றி ஆடு மாடு போன்ற அனைத்து ஜீவன்களையும் அச்சுறுத் தின. ஊரெங்கும் வெள்ளம். பொழுது விடிந்தால் ஷீர்டி கிராமமே இருக்காது என்ற நிலை. மக்கள் துவாரகாமாயிக்கு வந்து, பாபாவிடம் முறையிட்டுக் கதறினர்.
Sai Baba Miracles
கருணையே வடிவான பாபா அவர்களிடம் இரக்கம் கொண்டவராக வெளியில் வந்தார். வானத்தைப் பார்த்துக் கடுமையான வசைமொழிகளை இடியென கர்ஜித்தார். அவருடைய அந்த முழக்கத்தைக் கேட்டு அங்கிருந்த கிராம மக்கள் பெருத்த அச்சம் கொண்டார்கள். பாபா அதைப் பொருட்படுத்தாமல், வசை மொழிகளை தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்தார். அவர் வசை பாடப்பாட, புயல் காற்றும் பேய் மழையும் மெள்ள மெள்ளக் குறைந்துகொண்டே வந்தன. முன்னிரவு நெருங்க நெருங்க, கருமேகங்கள் விலகி, விண்மீன்கள் கண் சிமிட்டின. வெண்ணிலவும் எட்டிப் பார்த்தது. கிராம மக்கள் பாபாவை நன்றியுடன் நமஸ்கரித்து,தங்கள் மாடுகன்றுகளுடன் வீடு திரும்பினர்.
சேவகனாக வந்த பாபா
கீதையில் பக்தர்களின் யோகக்ஷேமத்தை தாம் நிறைவேற்றுவதாகக் கூறிய கிருஷ்ணரைப் போலவே, ஸ்ரீ சாயிநாதரும் தம்முடைய பக்தர்களின் துன்பங் களைப் போக்குவதற்காக எந்த நிலைக்கும் தம்மைத் தாழ்த்திக் கொள்ளவோ, எந்த வேதனைக்கும் தம்மை உட்படுத்திக்கொள்ளவோ தயங்கியதே இல்லை.
எங்கோ ஓர் இடத்தில் நெருப்பில் தவறி விழப் போன ஒரு குழந்தையை, துவாரகாமாயியில் துனியில் (பாபா எப்போதும் அணையாமல் எரியவிட்டுக் கொண்டிருக்கும் அக்னி குண்டம்)
எரிந்துகொண்டு இருந்த அக்னியில் தம்முடைய கைகளை விட்டு, தாம் இருந்த இடத்தில் இருந்த படியே அந்தக் குழந்தையைக் காப்பாற்றியவர் பாபா. அதேபோல், பிரசவ வேதனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு தாயின் உயிரையும், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே காப்பாற்றிய லீலையையும் நிகழ்த்தியுள்ளார்.
நானாசாஹேப் சந்தோர்க்கர் என்ற தம்முடைய பக்தரின் மகளுக்காக பாபா நிகழ்த்திய அந்த அற்புத அருளாடல்...
1904ம் ஆண்டு, நானாசாஹேப் ஷீர்டியில் இருந்து சுமார் நூறு மைல்கள் தொலைவில் இருந்த ஜாம்னர் என்ற கிராமத்தில், முன்சீப்பாக வேலை பார்த்துவந்தார். அவருடைய மகள் மைனத்தாய், பிரசவத்துக்காகத் தாய்வீட்டுக்கு வந்திருந்தாள். மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த நாள் கடந்தும்கூட, குழந்தை பிறக்காமல், பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டு இருந்தாள் அவள். மருத்துவர்களும் அவள் அபாயகரமான நிலையில் இருப்பதாகக் கூறிவிட்டனர். வேறு வழியே இல்லை என்ற நிலையில், திக்கற்றவர் களுக்கு ஒரே புகலிடமான பாபாவிடம் தன் மகளைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்து கொண்டார் நானாசாஹேப்.
Sai Baba Miracles
அதே நேரத்தில், ஷீர்டியில் ராம்கீர்புவா என்ற பக்தர் பாபாவிடம் சென்று, தான் ஊருக்குப் புறப்பட விரும்புவதாகத் தெரிவித்து, பாபாவின் உத்தரவை எதிர்பார்த்து நின்றார். அந்த பக்தரை பாபா பாபுகீர்புவா என்றுதான் அழைப்பது வழக்கம். அவர் ஊருக்குச் செல்ல அனுமதி தந்த பாபா, அதற்கு முன்பாக ஜாம்னருக்குச் சென்று, நானாசாஹேப் சந்தோர்க்கரிடம் உதியையும், ஷாமா இயற்றிய ஆரத்தி பாடல் எழுதப்பட்ட ஒரு காகிதத்தையும் கொடுக்கும்படி சொன்னார். ராம்கீர்புவாவும் பாபா சொன்னபடியே செய்ய முடிவெடுத்தார். ஆனால், அவரிடம் அப்போது இருந்தது வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே! அந்தப் பணத்தைக் கொண்டு, ஜல்கான் என்ற இடம் வரை மட்டுமே போகமுடியும். அங்கிருந்து ஜாம்னர் 30 மைல் தொலைவில் இருந்தது. அங்கு செல்வதற்குப் போதிய பணம் இல்லை. பாபாவும் அவருக்குப் பணம் எதுவும் தரவில்லை. ஆனாலும், வழியில் அவருக்குத் தேவையானவை அனைத்தும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
பாபாவின் வார்த்தைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ராம்கீர்புவா, சற்றும் தாமதிக்காமல் இரவு ரயிலில் ஜாம்னருக்குப் புறப்பட்டார். அதிகாலை 3 மணிக்கு ரயில் ஜல்கானை அடைந்தது. அவரிடம் அப்போது இரண்டணாக்கள் மட்டுமே மீதி இருந்தது. மற்ற பயணிகள் வாடகை வண்டிகளை அமர்த்திக்கொண்டு அவரவர்களின் ஊர்களுக்குச் செல்வதைக் கண்ட ராம்கீர்புவா, தாம் 30 மைல்கள் நடந்து செல்லவேண்டும் என்பதுதான் பாபாவின் சங்கல்பம் போலும் என்று நினைத்துக்கொண்டு நடக்க யத்தனித்த வேளையில், ''ஷீர்டியில் இருந்து பாபுகீர்புவா என்று யாரேனும் வந்திருக்கிறீர் களா?'' என்று கேட்டுக்கொண்டே ராம்கீர்புவா இருந்த இடத்துக்கு வந்தான் ஒருவன்.
அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ராம்கீர்புவா, அவனைப் பற்றிய விவரம் கேட்டார். தான் நானாசாஹேப் சந்தோர்க்கரின் பணியாள் என்றும், அவர்தான் தன்னை அனுப்பி வைத்ததாகவும் கூறி, தான் கொண்டு வந்திருந்த குதிரை வண்டியில் ராம்கீர்புவாவை ஏற்றிக்கொண்டு, ஜாம்னர் செல்லும் பாதையில் ஓட்டிச் சென்றான்.
பாதி தூரம் சென்ற பிறகு, ஓர் ஓடை தெரிந்தது. அந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, குதிரைகளை அவிழ்த்து, தண்ணீர் பருக ஓடைக்கு அழைத்துச் சென்றான். பின்னர், ராம்கீர்புவாவிடம் சிற்றுண்டி அருந்துமாறு சொன்னான். ராம்கீர்புவா வேண்டாம் என மறுக்க, அவர் மறுப்பதற்கான காரணத்தை ஒருவாறு யூகித்துத் தெரிந்து கொண்டவன், தான் இந்து க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவன் என்று கூறியதுடன், அந்த உணவும்கூட நானா சாஹேபினால் அனுப்பிவைக்கப் பட்டதுதான் என்றும் சொல்லி, அவரைச் சாப்பிடச் சொன்னான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும், அங்கிருந்து புறப்பட்டனர்.
கருக்கல் வேளையில், ஓர் இடத்தில் ராம்கீர்புவா இயற்கை உபாதைகளைப் போக்கிக்கொள்ள, வண்டியில் இருந்து இறங்கினார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கே வண்டியும் இல்லை; வண்டியை ஓட்டி வந்தவனும் இல்லை. ஆனால், ஜாம்னர் கிராமத்தின் எல்லைக்குத் தான் வந்து விட்டதை அறிந்து கொண்ட ராம்கீர்புவா, சற்றும் தாமதிக்காமல் விரைவாக நடந்தே நானா சாஹேபின் வீட்டுக்குச் சென்று, பாபா தன்னிடம் கொடுத்தனுப்பிய உதியையும், ஆரத்திப் பாடல் எழுதப்பட்டு இருந்த காகிதத்தையும் கொடுத்தார்.
Sai Baba Miracles
நானாசாஹேப் பாபாவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தபடியே, உதியை தன் மகளுக்குக் கொடுத்து, பாபாவின் ஆரத்தி பாடலைப் பாடினார். அடுத்த சில நிமிடங்களில், அவருடைய மகளுக்கு சுகப் பிரசவத்தில் அழகான குழந்தை பிறந்தது. அதன் பிறகு, பாபாவின் ஆற்றல் பற்றியும், பக்தர்களின் நலனில் அவர் எவ்வளவு கருணையுடன் அருள்புரிகிறார் என்பது பற்றியும் பெரிதும் வியப்புடன் பேசிக்கொண்டனர். பேச்சினிடையே ராம்கீர்புவா நானாசாஹேபிடம், அவர் தன்னை அழைத்து வர ரயில்வே ஸ்டேஷனுக்குக் குதிரை வண்டியை அனுப்பி இருக்காவிட்டால், தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் வந்திருக்க முடியாது என்று சொல்லவும், நானாசாஹேப் பெரிதும் வியப்பு அடைந்தார். காரணம், அவர் அப்படி யாரையும் ரயில் நிலையத்துக்கு அனுப்பவில்லை. அதைக் கேட்டு, ராம்கீர்புவாவும் திகைத்துப் போனார். எனில், குதிரை வண்டியுடன் வந்த அந்தச் சேவகன் யார்? அவனை எங்கிருந்து பாபா அனுப்பி வைத்தார்?
நானாசாஹேபும் ராம்கீர்புவாவும், குதிரை வண்டியில் வந்தது யார் என்று தெரியாமல் திகைத்து நின்ற போது, ரயிலடியில் நடந்த ஒரு விஷயம் ராம்கீர்புவாவின் நினைவுக்கு வந்தது.
ரயிலடியில் இருந்து நானாசாஹேபின் வீட்டுக்கு எப்படிப் போவது என்று தவித்துக்கொண்டு இருந்தபோது, தன்னை அழைத்துப் போக வந்த நபர், ''இங்கே ஷீர்டியில் இருந்து வந்திருக்கும் பாபுகீர்புவா யார்?'' என்று கேட்டார் அல்லவா? ராம்கீர்புவாவின் பெயரை பாபுகீர்புவா என்று மாற்றி அழைப்பது பாபா மட்டும்தான். இதை நானாசாஹேபிடம் தெரிவித்த ராம்கீர்புவா, பாபாவே குதிரை வண்டியுடன் ரயிலடிக்கு வந்து, தன்னை ஜம்னாரில் இறக்கிவிட்டுச் சென்றதாகத்தான் தான் உணர்வதாகக் கூறினார். பாபாவின் அளப்பரிய கருணைத் திறம் கண்டு இருவருமே மெய்சிலிர்த்துப் போனார்கள்.

No comments:

Post a Comment