Friday, 28 June 2019

நம்பிக்கையுடன் சரணாகதி அடைந்தவரை ஆசிர்வதித்த பாபா


     

ஆந்திராவில் புகழ்பெற்ற எழுத்தாளரான கோபிசந்த் ஒரு தீவிர நாஸ்திகர்.  கடவுள், பூஜை, வழிபாடு, பிரார்த்தனை இவற்றிலெல்லாம் துளியும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்.

1954-ல் அவர் கர்நூலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது அவர் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட, அவளை பிரசவத்திற்காக அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.  பனிக்குடம் உடைந்து மூன்று நாட்களாகியும் குழந்தை பிறக்கவில்லை.  அவரது மனைவியின் நிலைமையும் கவலைக்கிடமானது.  டாக்டர்கள் கையை விரித்து விட்டனர்.

கோபிசந்த் மனம் நொறுங்கிப்போனார்.  செய்வதறியாது விழிபிதுங்கி நின்றார்.  இரவு முழுவதும் தூங்கவில்லை.  மறுநாள் காலை வீட்டிலிருந்து காபி எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் ஒரு பாபா கோவில் இருப்பதைக் கண்டு  தன்னையறியாமல் ஒருகணம் நின்றார்.

தன்னுடைய நாஸ்திகம், கடவுளுக்கெதிரான அஹங்காரம் ஆணவம் ஆகிய வீம்புகளையெல்லாம் சுருட்டிவிட்டு,  பாபாவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார். 

"பாபா !  உங்களுக்கு அபார சக்தி இருப்பதாக பலரும் கூற கேட்டிருக்கிறேன்.  நீங்கள் கொடுக்க நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்கிறார்கள்.  மரணத்தின் பிடியிலிருக்கும் எனது மனைவிக்கு சுகப்பிரசவம் கொடுத்து சிசுவையும் சேர்த்து காப்பாற்றுவீர்களானால், நானும் உங்களை நம்புவேன் !" என்று கண்ணீர் விட்டு  கதறி அழுது ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்தார்.

ஆஸ்பத்திரிக்குப் போனதும் அவர் மனைவிக்குச் சற்று முன் ஆண்குழந்தை பிறந்ததாக நர்ஸ்கள் கூறினர்.  அதைக் கேட்டுப் புல்லரித்துப் போன கோபிசந்த், மகிழ்ச்சியின் மிகுதியால் அப்படியே இருக்கையில் உட்கார்ந்து விட்டார்.

சற்று நேரம் கழித்து பிரசவ மயக்கம் தெளிந்த தனது மனைவியை கோபிசந்த் சந்தித்தபோது  அவள்,  கப்னி அணிந்த ஒரு பக்கீர் எனது நெற்றியில் விபூதி இட்டார்.  கொஞ்சம் விபூதியை தண்ணீரில் கலந்து குடிக்கச் சொன்னார்.  "சுகப்பிரசவமாகிவிடும்  பயப்படாதே !" என்றார்.  அடுத்த நிமிடமே குழந்தை பிறந்துவிட்டது என்றாள்.

"தன்னிடம் நம்பிக்கையுடன் சரணாகதியடைந்து வைத்த பிரார்த்தனையை அடுத்த நிமிடமே ஆசீர்வாதித்துக் கொடுத்த பாபாவிற்கு" நன்றிக் கடனாக தனது குழந்தைக்கு "சாயிபாபா" என்றே பெயர் சூட்டினார் கோபிசந்த்.  அதோடு நின்றுவிடாமல் வியாழக்கிழமை தோறும் தனது வீட்டிலும் சாயிபஜனையை செய்தார்.  தவறாமல் சாயி ஆலயம் சென்று தியானம் செய்வார்.  எந்த இடத்தில் சாயி பஜனை, பூஜை நடந்தாலும் முதல் ஆளாக இருப்பார்.  இப்படியாக தீவிர சாயி பக்தரானார் கோபிசந்த்.

Thursday, 27 June 2019

ஆபரேஷன் எதுவும் தேவையில்லை


Image result for shirdi saibaba hd painting

ஆலந்தி எனும் கிராமத்தில் வசித்தவர் ஒரு துறவி.  என்னதான் சம்சார வாழ்க்கையில் துறவறம் பூண்டிருந்தாலும்,  ஊழ்வினை காரணமாக அவர் காதில் தாளமுடியாத வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். 

துறவியின் வேதனையைக் கேள்விப்பட்ட அந்த கிராமத்து விவசாயி ஒருவர்  துறவியிடம் சென்று,  "அய்யா !  ஷீரடி என்றொரு கிராமம் இருக்கிறது.  அங்கே சாய்பாபா எனும் சாது ஒருவர் இருக்கிறார்.  அவர் தரும் உதியே பக்தர்களின் கடும் நோய்களையும் தீர்த்து விடுவதாக பலனடைந்தோர் கூறுகின்றனர்.  தாங்களும் அங்கு சென்றுதான் பாருங்களேன்!" என்றார்.

அதைக் கேட்ட துறவி உடனடியாக ஷீரடிக்கு சென்றார்.  அங்கே இருந்த ஷாமாவை அணுகி விபரத்தைக் கூற, ஷாமாவும் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்.

ஷாமா பாபாவிடம் மெதுவாக , "பாபா !  இவருக்கு காதில் சொல்லமுடியாத வலியும் வீக்கமும் பல வருடங்களாக இருந்ததால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.  ஆனாலும் அந்த வலியும் வீக்கமும் இன்னும் குறைந்தபாடில்லை !  டாக்டரிடம் கேட்டால் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறுகிறாராம். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அரற்றுகிறார்.  தாங்கள் உதி அளித்து ஆசி அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார். !" என்றார்.

பாபா அந்த துறவியை அருகில் அழைத்து, "அல்லாஹ் அச்சா கராஹே !" என்று கூறி தனது உதியை அவரது காதில் ஊதினார்.  துறவியும் பாபாவை பணிவுடன் வணங்கிவிட்டு ஊர் திரும்பினார்.

ஒருவாரம் கழித்து ஆலந்தி சுவாமிகள் ஷாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.  அதில் "தனக்கிருந்த  காது வலியும் வீக்கமும் பாபா ஊதிய காற்றிலேயே பறந்துவிட்டதாகவும் ,   ஆபரேஷன் எதுவும் தேவையில்லை என்று டாக்டர் தீர்க்கமாக சொல்லிவிட்டதாகவும்,  பாபாவே எனது கண்கண்ட தெய்வம் !"  என்றும் எழுதி இருந்தார்.

Wednesday, 26 June 2019

எண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு



Image may contain: one or more people
 "ஒரு பக்தன் அல்லது பக்தனாய் உயர நினைப்பவன், முதலில் தன்னைக் கற்புடையவனாகவும், சுத்தமானவனாகவும் அடியார்க்கு அடியவனாகவும் நேர் கொண்ட சத்திய பார்வை கொண்டவனாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குருவருளைப் பெறத் தகுதி உண்டாகும்.

இரண்டாவதாக, அன்புக்குரிய குருவின் மீது தரங்குறையா நம்பிக்கை மிக மிக அத்தியாவசியம். இது பலதரப்பட்ட தெய்வீக உயர்ந்த அனுபவங்களுக்குக் கொண்டு சென்று கடைசியாய் வெகு உயரத்திலிருக்கும் "சத்_சித் _ஆனந்தம்" (சச்சிதானந்தம்) எனப்படும் இறைமை பொங்கும் பேரானந்த இலக்கிற்குக் கொண்டு போய் விடும். 

"ஓரடி உயர்ந்தால் அதுவே எனக்குப் போதும்" என்பது மட்டுமே பக்தனுக்குரிய சரியான குணாதிசயமாகும்.
ஆனால்,  எல்லாம் வல்ல இறைவனை விளக்கும் சிக்கலான வேதாந்தத்தைப் பற்றியும் சித்தாந்தத்தைப் பற்றியும் முடிவு பண்ணிக்கொள்ளும் தேவையே அப்போது எழாது.  சீடனாயிருக்கும் நிலையில் இவற்றைப் பிரித்து அறியும் மூளையெல்லாம் அவனுக்கு இருக்காது. 

ஆனால் இந்த ஆன்மீக விசயத்தில்,  தன்னிடம் முழுமையாக சரணடைந்த ஒருவனை ஸத்குரு தூக்கிவிடுகிறார். இவற்றைப் புரிந்து கொள்ளும் மேம்பட்ட ஞானத்தை அவனுக்குப் புகட்டுவார்.  அவனுக்கு உள்ளேயுள்ள விசாலமான மெய்ஞ்ஞானத்துக்கு ஒளியூட்டுவார். இப்படியெல்லாம் சத்தியத்தின் புரிதலுக்கு பாதை வகுப்பார். சித்தாந்தத்தையும் , வேதாந்தத்தையும் அப்போது அவன் உணரலாம். உணர்ந்து அதற்குள் ஐக்கியமாகி வாழ்ந்தும் விடலாம் !" 


பாபா ஒருபக்தரிடம் சொன்னார்:

"ஆன்மீக உயர்வுக்குப் புத்தகங்களாய் படித்துக் கொண்டிருக்காதே !  அதற்குப் பதிலாய், என்னை உன் மனதில் வை ! உள்மனதில் வை !  வைத்ததோடு நின்றுவிடாமல்  எண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு!  அதுவே போதும் !  உன் உயர்வு நிச்சயம் !"

Monday, 24 June 2019

நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்களேன் ! நல்லது நடக்கும் !





1947-ல் நெல்லூரில் வாழ்ந்த ஸ்ரீராமுலு என்பவர் தனது மனைவியை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.  அங்கே அவளுக்கு குளிர்காய்ச்சலும், வலிப்பும் வந்துவிட்டது.  குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறி ஆபரேஷன் செய்து வெளியே எடுத்தனர்.  ஸ்ரீராமுலு மிகவும் மனமுடைந்துவிட்டார்.

மனைவிக்கு பிரசவம் ஆன மறுநாள் அவர்  வகித்த வேலையின் பதவிக்காலமும் முடிவடைந்தது.  நண்டும் சுண்டுமாக மூன்று குழந்தைகள்.  ஆஸ்பத்திரி படுக்கையிலேயே கிடக்கும் நோயாளி மனைவி.  வேலையில்லாத அவலம்.  வறுமையின் பிடியில் ஸ்ரீராமுலு மிகவும் கஷ்டப்பட்டார்.  ஏதோ இரக்கமுள்ள சில நண்பர்கள் ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கொடுத்து உதவினர்.  பதிமூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி மனைவி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.

வீட்டுக்கு வந்த மனைவிக்கோ கால்களின் வீக்கம் வற்றவில்லை.  நிற்ககூட முடியாத பலகீனம்.  இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட தனது மனைவியை தானே கைத்தாங்கலாக தூக்கி வைக்கும் தர்மசங்கடமான நிலைமை ஸ்ரீராமுலுவுக்கு.

தன்னுடைய கர்மவினையை நினைத்து கலங்கிப் போயிருந்த ஸ்ரீராமுலுவின் பரிதாபமான நிலைமையைப் பார்த்த ஒரு நண்பர், அவரிடம் வந்து, "ஷீரடி சாய்பாபா என்று ஒரு மகான் இருக்கிறார்.  அவர் எளியோர்களின் இறைவன்.  அவரை நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்களேன் !  நல்லது நடக்கும் !" என்றார்.  தனது நண்பரின் வழிகாட்டுதலை ஏற்று, தனது குடும்பத்தின் நிலைமையை விரைவில் சீராக்குமாறு பாபாவிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்தார்.

மறுநாள் வழக்கம்போல காய்கறிகள் வாங்க வீட்டைவிட்டு வெளியே வந்தபோது அவர் முன்னே பாபா எதிர்பட்டார்.  ஒரு கணம் 'இது கனவா நனவா' என ஆச்சர்யத்தோடு பாபாவை உற்று நோக்கிய ஸ்ரீராமுலு , "பாபா சமாதியாகி 29 ஆண்டுகள் ஆகிவிட்டன.  பாபாவாவது நேரில் வருவதாவது" என்று மனதுக்குள் நினைத்தார்.

இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு ஒருவித தயக்கத்துடன் பாபாவை நோக்கி "அய்யா !  நீங்கள் யார்?"  என்று கேட்டார்.  "நீ யார் என்று உணர்ந்து கொண்டால் நான் யார் என்பது தன்னால் தெரியும்" என்று பதிலளித்தார் பாபா.

பாபாவின் லீலைகளை பலர் சொல்லக் கேட்டிருந்த ஸ்ரீராமுலு உடனே சுதாரித்துக் கொண்டு, "தாங்களே பாபா என்றால் இன்று எங்கள் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் !" என்றார்.  பாபாவும் சற்றும் தாமதிக்காமல் சிரித்துக் கொண்டே , "அதற்காகத்தானே வந்திருக்கிறேன்!". என்றார்.

பாபாவை கையோடு வீட்டுக்கு அழைத்து வந்த ஸ்ரீராமுலு,  தன் வீட்டிலிருந்த பழைய துணிகளையெல்லாம் சுருட்டி மெத்தை தயார் செய்து அதை கயிற்றுக் கட்டிலில் போட்டு பாபாவை அதன் மீது அமர வைத்து ,  தனது கண்ணீர் கலந்த தண்ணீரால் பாதபூஜை செய்தார். ஸ்ரீராமுலுவின்  எளிமையான பக்தியில் இரக்கம் கொண்ட பாபா,  பாதபூஜை செய்த தண்ணீரை எடுத்து , "ம்ம்.. இந்தாருங்கள் !  அனைவரும் அருந்தி மகிழுங்கள் !" என்றார். ஸ்ரீராமுலு, குழந்தைகள்,  மனைவி அனைவரும் பயபக்தியுடன் அருந்தினார்கள்.

ஸ்ரீராமுலு விரைந்து கடைக்குச் சென்று வாழைப்பழங்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் பாபாவைக் காணவில்லை.  எழுந்திருக்ககூட முடியாமல் எந்நேரமும் படுத்தே இருக்கும் தனது மனைவி நின்று கொண்டிருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்து , "பாபாவை எங்கே?" என்று கேட்டார்.

அவரது மனைவியோ, பாபா என்னை நோக்கி,  "அம்மா !  எழுந்திரு! உணவை நீ பரிமாறு !  அசாத்தியப் பசி !"  என்றார்.  தட்டுத் தடுமாறி எழுந்து வந்து அவருக்கு பரிமாறினேன்.  ஒரு பிடிதான் சாப்பிட்டார்.   "ஆஹா ! மனது நிறைந்தது !  இதோ வருகிறேன்!" என்று கூறிவிட்டு போய்விட்டார்!' என்றாள்.

அதைக் கேட்ட ஸ்ரீராமுலுவோ பாபாவின் விந்தையை நினைத்து வியப்பில் ஆழ்ந்தார்.  அதற்கடுத்த நிமிடத்திலிருந்து அவரது மனைவி அடிக்கடி சிறுநீர் கழிக்கலானாள்.  அன்று மாலைக்குள் கால்களில் வீக்கம் வற்றி சகஜமாக நடமாட ஆரம்பித்தாள்.  அதன்பிறகு அவர்களின் குடும்பத்தின் வறுமை நிலையும் அடியோடு மாறி சுபிட்சமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

Sunday, 23 June 2019

எதிலும் நம்பிக்கையும் உறுதியும் வேண்டும்


Image may contain: 1 person

சாவித்திரிபாய் டெண்டுல்கர் என்பவர் பாபாவின் பக்தை.  "ஸ்ரீஸாயிநாத் பஜன்மேளா" என்ற 800 பாடல்களைக் கொண்ட நூலைப் பதிப்பித்திருக்கிறார்.   பாபாவின் லீலைகளை விளக்கும் அற்புதமான புத்தகம் இது.

அப்படிப்பட்ட தீவிரமான பாபா பக்தையான சாவித்திரிபாய், தன் மகனிடம், "பாபு !  உன் முகம் ஏன் வாட்டமாய் இருக்கிறது பரீட்சைக்கு படிக்கலையா?" என்று கேட்டாள். 

அதற்கு அவள் மகன் பாபுவோ,  "இல்லைம்மா !  நான் என்ன கஷ்டப்பட்டு படித்தாலும் இந்த வருஷம் பாஸ் பண்ணமாட்டேன் என்று கைரேகை நிபுணரும் நாடி ஜோசியரும் உறுதியாக சொல்கிறார்கள். அஷ்டமத்து சனி நாளிலே குரு என்று கிரகங்கள் பாதகமாக இருக்கிறதாம் !  அப்புறம் ஏன் கண்முழிச்சுப் படிக்கணும் ?" என்றான்.

அதைக் கேட்ட சாவித்திரிபாய் மகனின் நிலையை பாபாவிடம் கூறி தீர்வு பெறுவதற்காக உடனே சீரடிக்கு புறப்பட்டாள்.  மசூதியில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று,  அவரது பாதங்களை வணங்கி,  தனது மகனின் நிலைமையைக் கூறினார். 

"எதிலும் நம்பிக்கையும் உறுதியும் வேண்டும் !  உன் பிள்ளையை நன்றாகப் படிக்கச் சொல் !  நிதானமான அமைதியோடு பரிட்சை எழுதட்டும் !  கவலை என்கிறது மனதை அரிக்கும் கறையான், அதைக் கழுவிவிடு ! கைரேகைக்காரர், ஜோதிடர் உரைகளைத் தூக்கி எறி ! அவன் நிச்சயம் தேர்வில் வெற்றி பெறுவான் !"  என்று பாபா அவளிடம் உறுதியளித்து, சிறிது உதியையும் அளித்து அவளை ஆசீர்வதித்தார். 

சாவித்திரியும் மனநிறைவோடு ஷீர்டியில் இருந்து கிளம்பி ஊருக்கு திருப்பினாள்.  பாபா சொன்னதை அப்படியே தனது மகன் பாபுவிடம் சொல்லி,  பாபா கொடுத்த உதியையும் அவனுக்கு பூசிவிட்டாள்.

பாபுவும், "பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து" இரவுபகல் பாராமல் படித்து பரிட்சை எழுதி மருத்துவ தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றான்.

பாபாவின் மீதான நம்பிக்கையும்,  பாபாவின் பரிபூரண ஆசிகளும் கிரகங்களின் கெடுதல்களையும் நீக்கிவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி.

Saturday, 22 June 2019

என்னை நம்பு ! நான் எல்லையில்லாக் கருணையுள்ளவன்


          Image may contain: 1 person, smiling

பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் புரந்தரே என்பவர் தீவிர பாபா பக்தர்.  அவருடைய மனைவியோ பக்தியில் நாட்டமில்லாதவர்.

ஒருமுறை புரந்தரேயின் மனைவியை பிளேக் நோய் தாக்கியது.  பிளேக்கின் தாக்கம் தீவிரமாக இருப்பதாகவும்,  இனிமேல் மருத்துவத்தால் பலனில்லை என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர்.

மனமுடைந்து போன புரந்தரே, ஒருநாள் ஊரிலிருந்த தத்தரின் ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்வதற்காக சென்றார்.  அப்போது தத்தரின் கோயில் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பக்கீர்,  ரகுவீர் பரந்தரேயை அழைத்து, சிறிது  உதியும் தீர்த்தமும் கொடுத்து, "என்னை நம்பு !  நான் எல்லையில்லாக் கருணையுள்ளவன் !  என்னை அறியாமல் உன் மனைவியின் உயிர் போகாது !" என்றார்.

அதைக் கொடுத்தது சாட்சாத் பாபாவேதான் ! என்று உணர்ந்து கொண்ட ரகுவீர்,  வீட்டிற்கு சென்று உதியை மனைவியின் உடல் முழுவதும் பூசிவிட்டு,  அவளது வாயிலும் சிறிது போட்டு தீர்த்தத்தையும் பலவந்தமாக கொடுத்தார்.

அடுத்த நிமிடமே புரந்தரேயின் மனைவிக்கு கிட்டியிருந்த பற்கள் நெகிழ்ந்தன. குளிர்ந்த உடல் கதகதப்பாய் ஆனது.  அவளும் சாதாரண நிலைக்கு வந்தாள்.

அன்று மாலையில் தினப்படி செக்-அப்பிற்காக  அவர்கள் வீட்டிற்கு வந்த டாக்டர், ரகுவீரின் மனைவி படுக்கையில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பதை கண்டு வியந்தார்.  நடந்தது என்ன என்பதையும் புரந்தரேயிடம் விவரமாகக் கேட்டறிந்து,  பாபாவின் அற்புத லீலையை எண்ணி வியந்து திரும்பினார்.

மருத்துவம் கைவிட்டபோதிலும் ஷீரடி மஹானின் உதி தன் விதியை மாற்றியதை நினைத்து, குற்றவுணர்வுடன் உருகிய புரந்தரேயின் மனைவி, "பரப்பிரம்மமே பாபாதான் !" என்று தீர்க்கமாக உணர்ந்தாள்.  

முழுவதுமாக  குணமடைந்த அவள்,  சீரடிக்குக் கணவருடன் சென்று பாபாவை தரிசனம் செய்து,  தன்னுடைய நன்றியை பாபாவின் பாதங்களில் கண்ணீரால் நமஸ்கரித்து செலுத்தினாள்.

Friday, 21 June 2019

தத்தரை தரிசித்துவிட்டு போகலாமே?


                       shirdi saibaba hd க்கான பட முடிவு

நானா சாகேப் சாந்தோர்கர் தனது நண்பர் ஷட்டகர் பினிவாலேயுடன் ஷீரடிக்கு  புறப்பட்டார்.  கோபர்கானில்  இறங்கிய அவர்கள் இருவரும் கோதாவரியில்  குளித்தனர். 

அவருடைய நண்பர் பினிவாலே என்பவர் தத்தாத்ரேயரின் தீவிரமான பக்தர்.  அக்கரையிலிருந்த  தத்தர் கோவிலைப் பார்த்ததும், "தத்தரை தரிசித்துவிட்டு போகலாமே?" என்றார்.  ஆனால்,  அதற்கு நானாவோ ,  "நாம் ஏற்கனவே பார்த்த கோவில்தானே!    ஒவ்வொன்றுக்கும் தாமதித்தால் நேரம் ஆகிவிடும் !  ம்ம்.. கிளம்பலாம் !"  என்று கூறிக்கொண்டே கரை ஏறினார்.  

கரையேறும்போதே ஒரு முள் நறுக்கென்று அவருடைய காலில் குத்தியது. " ஓ! பாபா!" என்று கூறிக்கொண்டே அந்த முள்ளை பிடுங்கி தூர எறிந்து விட்டு,  அப்படியே அங்கிருந்த எருக்கஞ்செடிப் பாலை, முள் குத்திய இடத்தில் பிழிந்து விட்டு , அவசர அவசரமாக கிளம்பினார்.

ஷீரடிக்கு  வந்ததும் நேராக மசூதிக்கு சென்ற அவர்கள்,  பாபாவின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர். 

அப்போது பாபா , "ஓ ! நானா !  எல்லாம் தெரிந்த நீயே இப்படி செய்யலாமா?  தத்தரும் நானும் வேறு வேறா?  இன்று உனக்குக் கிடைத்தது லேசான தண்டனை !  கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஒருவரின் ஆர்வத்தைத் தடுப்பது தெய்வக்குற்றம் !  எதிர்காலத்தில் ஜாக்கிரதையாக இரு !" என்றார்.

இதைக் கேட்ட நானாவின் நண்பர் பினிவாலே பாபாவை மீண்டும் ஒருமுறை ஆச்சர்யத்துடன் வணங்கினார்.   ஆனால் நானாவோ,  பாபாவின் முன்னர் தலைகுனிந்து மன்னிப்பு கோரினார்.

Thursday, 20 June 2019

உன் பணம் எனக்கு வேண்டாம்





சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம் என்பதை கேள்வியுற்றார். 

உடனே அந்த நபர்,  தன்னிடம் இருந்த 18 ரூபாய்களை மசூதியில் அமர்ந்திருந்த கொலாம்பே என்பவரிடம் கொடுத்து , "இதை பத்திரமாக வைத்திரு !  நான் ஊருக்கு போகும்போது வாங்கிக் கொள்கிறேன்!" என்றார். 

பாபா தக்ஷிணை கேட்டால் தம்மிடம் காசே இல்லையென்று சொல்லிவிடலாமென திட்டமிட்டிருந்தார்.   தன்னுடைய புறப்படும் நேரம் வந்ததும் பாபாவிற்கு வந்தனம் செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப பாபாவிடம் உத்தரவு கேட்டு நின்றார்.

பாபா அந்த பக்தரிடம், "தக்ஷிணை கொடுக்காமல் போகக் கூடாது !  உன் பணம் எனக்கு வேண்டாம் !  அதோ..!  அவனிடமிருந்து வேண்டுமானால் வாங்கிக் கொடு!" என்று பாபா கையைக் காட்டிச்  சொன்னார்.  அவர் கையைக்  காட்டிய இடத்தில் கொலாம்பே உட்கார்ந்திருந்தார்.

அதைப் பார்த்த அந்த நபர் வெலவெலத்துப் போய், "ஆஹா !  பாபாவிடம் எந்தத் தந்திரமும் மந்திரமும் பலிக்காது போலவே !"  என்று ஆச்சர்யமுற்ற அவர்‌ உடனடியாக  தன்னுடைய செய்கைக்கு மன்னிப்பு கோரி,  கொலாம்பேயிடம் இருந்த தனது தொகையில் இரண்டு ரூபாயை வாங்கி தக்ஷிணையாக பாபாவிடம் சமர்ப்பித்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த கொலாம்பேவோ, "நான் பயங்கரமான மதுப்பிரியன்.  பாபாவுக்காக பெருந்தன்மையாக குடியை வெகு சிரமப்பட்டு விட்டுவிட்டேன். அதனால் பாபா என்னிடம் தக்ஷிணையே கேட்பதில்லை " என்று எல்லோரிடமும் பெருமை பேசிக்கொண்டிருந்தான். 

அடுத்த முறை பாபாவின் தரிசனத்துக்கு வந்த கொலாம்பேயிடம் பாபா, "இங்கு எதுவும் இலவசத்திற்கல்ல !  ம்ம்ம்... இரண்டு ரூபாய் தக்ஷிணை கொடு !" என்று கேட்டார்.  அதைக் கேட்டு தலைகுனிந்த கொலாம்பே , "மானுட ஜம்பம் மஹானிடம் செல்லுபடியாகாது போலவே !" என்று நினைத்து தனது தக்ஷிணையை சமர்ப்பித்தார்..

 மீண்டும் பாபா ,  "தீயவன் திருந்தியதற்கு சலுகை கொடுத்தால் நல்லவனாகவே வாழ்கின்றவனுக்கு என்ன கொடுத்தாலும் போதாதே ?" என்றார்.

Sunday, 16 June 2019

சீரடி சாய்பாபா சிலை மகத்துவம்

சீரடி சாய்பாபா சிலை மகத்துவம்
சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து, நல்வழிபடுத்துகிறார். அவர் மீது மாறாத நம்பிக்கையும் அன்பும், பக்தியும் கொண்ட வர்கள் அவரது தரிசனத்தைப் பெற்றுள்ளனர். நிறைய பேரிடம் அசரீரியாக பேசியுள்ளார். லட்சக்கணக்கான பக்தர்கள் என்ன வேண்டுகிறார்களோ... அதையெல்லாம் நிறை வேற்றி கண்கண்ட தெய்வ மாக அவர் திகழ்கிறார். தன் பக்தனை அவர் ஒரு போதும் கைவிட்டதே இல்லை. இதுவே இறை அவதாரங்களில் சாய்பாபா தனித்துவம் மிக்கவர் என்பதற்கு உதாரணமாகும்.

பாபா இப்போதும், இந்த வினாடி கூட நம்மோடு தான் இருக்கிறார். அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதங்களில் இருந்து இதை உணரலாம்.
1918-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி அவர்தம் உடலில் இருந்து பிரிந்து எல்லைத்தாண்டியதும் சிலரது கனவில் தோன்றி பேசினார். தாஸ்கானு என்ற பக்தர் கனவிலும் தோன்றினார்.

“இப்போது மசூதி சிதைந்து விட்டது. வியாபாரிகளும், கடைக்காரர்களும் என்னை மிக, மிக கொடுமைப்படுத்தி விட்டார்கள். எனவே நான் மசூதியை விட்டுப் போகிறேன். இதை உனக்குத் தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன். வா... வந்து என்னை வாசனை மலர்களால் நிரப்பு” என்று தாஸ்கானுவிடம் பாபா தெரிவித்தார்.
இந்த கனவைக் கண்டபோது தாஸ்கானு பண்டரிபுரத்தில் இருந்தார். பாபா விடைபெற்று விட்டார் என்பதைப் புரிந்து கொண்ட அவர், தனது பக்தர்களுடன் உடனே சீரடிக்குப் புறப்பட்டு வந்தார்.

பாபாவின் மகாசமாதி மீது மிக அழகான, பிரமாண்ட மலர் மாலையை போர்த்தினார். பிறகு அவர் அங்கேயே அமர்ந்து பஜனை செய்தார். பாபா மகாசமாதி ஆகியிருந்த மூன்றாவது நாள் அதாவது அக்டோபர் 18-ந்தேதி ஏராளமான ஏழை-எளியவர்களுக்கு அன்னதானம் செய்தார். 13-ம் நாள் முக்கிய சடங்குகள் நடந்தன.
உபாசினி கங்கை கரைக்கு சென்று ஆயிரக்கணக்கான வர்களுக்கு உடை வழங்கி அன்னதானம் செய்தார். சீரடியில் இருந்த முஸ்லிம்கள் சந்தனக் கூடு ஊர்வலம் மேற்கொண்டனர்.

இப்படி சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்த நிலையில் கோபர்கவுன் கோர்ட்டு, சாய்பாபாவின் உடமைகளை கையகப்படுத்திக் கொண்டது. பாபா சட்டைப் பையில் இருந்த 16 ரூபாயையும் கோர்ட்டு எடுத்துக் கொண்டது. இதையடுத்து பாபாவின் மகா சமாதியை பராமரித்து, நிர்வகிக்க ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. அதுதான் பல்வேறு மாற்றங்களைக் கண்டு, இன்று “சீரடி சாய்சன்ஸ்தான்” ஆக வளர்ச்சிப் பெற்றுள்ளது.

பாபா மகாசமாதி அடைந்த முதல் சில ஆண்டுகளுக்கு அவர் சமாதி மீது பக்தர்கள் மலர் வைத்து வழிபட்டனர். இந்த நிலையில் பிரபல ஓவியரும், பாபாவின் தலை சிறந்த பக்தர்களில் ஒருவருமான சாம்ராவ் ஜேகர் என்பவர் சாய்பாபா படத்தை வரைந்தார். அந்த படம் அச்சு அசல் அப்படியே சாய்பாபா உயிருடன் இருப்பது போல இருந்தது.

சாய் கமிட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த படம் மிகவும் பிடித்துப் போனது. அந்த படத்தை பாபா மகாசமாதி முன்பு பீடத்தில் வைத்து வழிபட தொடங்கினார்கள். சுமார் 35 ஆண்டுகள் அந்த படம் பாபாவின் மகா சமாதியை அலங்கரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று சமாதி மந்திரில் உயிரோட்டமாக இருக்கும் பளிங்கு கல் சிலை தயாராகத் தொடங்கியது. பாபா சிலைக்கான அந்த பளிங்கு கல் கிடைத்த விதம், சிலை உருவான விதம் எல்லாமே ஆச்சரியத்துக்குரியதாகும்.

ஒருநாள்.... இத்தாலி நாட்டில் இருந்து பால் வெள்ளை நிற பளிங்கு கல் ஒன்று மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கியது. அந்த கல் தரத்தில் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. எனவே யாராவது கோடீசுவரர் அதை இறக்குமதி செய்திருப்பார் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் அந்த பளிங்கு கல்லைக் கேட்டு யாருமே வரவில்லை. மும்பைத் துறைமுக அதிகாரிகள் பல்வேறு வகைகளில் ஆய்வு செய்தும், அந்த பளிங்கு கல்லை இத்தாலியில் இருந்து அனுப்பியது யார்? மும்பைக்கு ஏன் வந்தது? எப்படி மாறி வந்தது? என்பன போன்ற எந்த தகவல்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அந்த பளிங்கு கல்லை மும்பை துறைமுக அதிகாரிகள் ஏலம் விட்டனர். பணக்காரர் ஒருவர் அந்த கல்லை ஏலத்தில் எடுத்தார். பிறகு அதை அப்படியே சீரடி சாய் தேவஸ்தானத்துக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அந்த பளிங்கு கல்லை பெற்ற பிறகே, அதில் சாய்பாபாவுக்கு சிலை செய்து வைக்கலாம் என்ற எண்ணம் சாய் கமிட்டி உறுப்பினர்களுக்குத் தோன்றியது. சிலை வடிக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று ஆலோசித்தனர்.

மும்பையைச் சேர்ந்த பிரபல சிற்பி பாலாஜி வசந்தராவ் தாலிம் என்பவரிடம், சிலை செதுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. ஐதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி சிலை வடிவமைப்புக்காக ஏராளமான விருதுகள் பெற்றிருந்தார். மும்பையில் செட்டில் ஆகி இருந்த அவரிடம் பாபாவின் கருப்பு - வெள்ளை படம் ஒன்றை மட்டும் கொடுத்து, சிலை தயாரிக்க கூறியிருந்தனர்.

முதலில் களி மண்ணில் பாபா சிலையை பாலாஜி செய்து காண்பித்தார். பிறகு பளிங்கு கல்லை செதுக்கி பாபாவின் சிலை தயாராகத் தொடங்கியது. பாபாவின் உடல் அமைப்பை வடிவமைக்க பாலாஜி சற்று சிரமத்தை சந்தித்தார். தேர்ந்த சிற்பியான அவருக்கு பாபாவின் ஒவ்வொரு அங்கத்தையும் செதுக்குவது சவாலாக தெரிந்தது.

ஒரு கட்டத்தில் அவருக்கு மலைப்பாகி விட்டது. என்றாலும் பாபா சிலை செதுக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவரிடம் குறையவில்லை. கண்ணீர் மல்க அவர் பாபாவிடம் வேண்டினார். “பாபா... இது உங்கள் சிலை. தத்ரூபமாக நீங்களே அதில் காட்சியளிக்க வேண்டும். எனக்கு உதவி செய்யுங்கள்” என்று மனம் உருக கேட்டுக் கொண்டார்.

அன்றிரவு அவர் கனவில் பாபா தோன்றி னார். “நம்பிக்கையும் பொறுமையும் கொண்டால் வெற்றி நிச்சயம்” என்றார். பாபாவின் இந்த ஆசீர்வாதத்தால் சிலை தயாரிப்பு பணியில் வேகம் பிடித்தது. மிக வேகமாக சிலை தயாரானது. பாபாவின் முகத்தை வடிக்கும்போது, பாலாஜி மீண்டும் திணற வேண்டியதிருந்தது. பாபாவின் மூக்கு, கண்களை செதுக்க திணறினார். அன்றிரவு அவர் கனவில் பாபா தோன்றினார்.

தனது முகத்தை மட்டும் பல்வேறு கோணங்களில் காட்டினார். என் முகத்தின் அமைப்பை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு சிலையை செய் என்று கூறி மறைந்தார். மறுநாள் காலை விழித்த போது பாபாவின் அற்புதத்தை எண்ணி, எண்ணி சிற்பி பாலாஜி வியந்தார். காலை 7 மணிக்கு சிற்பக் கூடத்துக்கு சென்றபோது அவருக்கு மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

சிற்பக் கூடத்தின் கதவைத் திறந்ததும் அங்கு ஒரு ஒளி வெள்ளம் உருவானது. அந்த ஓளியில் சாய்பாபா தோன்றினார். ஆச்சரியத்தில் உறைந்த பாலாஜி, கைக்கூப்பி வணங்கி விட்டு, பாபாவைப் பார்த்து அவர் கண், புருவம், காது, மூக்கு உள்ளிட்ட முக அமைப்பை அப்படியே தத்ரூபமாக செதுக்கினார். முக வடிவமைப்பு பணி முடிந்ததும், சாய்பாபா, அந்த பளிங்கு கல் சிலைக்குள் ஊடுருவி மறைந்தார். ஆக பாபா, அந்த சிலைக்குள் புகுந்து விட்டதை சிற்பி பாலாஜி உணர்ந்தார். ஆச்சரியத்தில் இருந்து மீள அவருக்கு நீண்ட நேரமானது.

1952-ம் ஆண்டு பாபா சிலையின் 99 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அப்போது எதிர்பாராத ஒரு சிக்கலை சிற்பி பாலாஜி எதிர்கொள்ள நேரிட்டது.
பாபாவின் சிலையை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் அவர் இடது காலை ஊன்றி, அதன் மீது தனது வலது காலை தூக்கிப் போட்டு அமர்ந்திருப்பதை பார்த்து இருப்பீர்கள். அந்த வலது காலின் மீது இடது கையை பாபா ஊன்றியிருப்பார்.

அந்த இடது கால் முழங்கால் பகுதியில் மட்டும் ஒரே ஒரு இடத்தை செதுக்கினால், சிலை செதுக்கும் பணி முடிந்து விடும். அந்த இடத்தில் ஏதோ காற்று இடைவெளி ஏற்பட்டிருந்தது போல காணப்பட்டது. அதில் கவனக்குறைவாகச் செதுக்கினால், ஒட்டு மொத்த சிலைக்கும் சேதம் ஏற்பட்டு விடலாம் என்ற அபாயம் இருந்தது. சிற்பக் கூடத்தின் பணியாளர்கள் அனைவரும், சிலையின் அந்த பகுதியில் உளியைக் கொண்டு செல்லப் பயந்தனர்.

எனவே பாலாஜியே உளியை கையில் எடுத்து பாபாவை நினைத்துக் கொண்டே, அந்த பகுதியை செதுக்கத் தொடங்கினார். அடுத்த வினாடி..... அந்த பகுதியில் முழங்கால் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமோ அதே மாதிரி சிலை வடிவத்துக்கு வந்தது. தேவை இல்லாத பகுதி மட்டும் கீழே விழுந்தது. இப்போது பாபா சிலை கன கச்சிதமாக தயாராகி விட்டது. அப்போது பாலாஜி வசந்தராவ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

அன்றிரவு சிற்பி பாலாஜி கனவில் பாபா மீண்டும் தோன்றினார். “இனி இது போன்று என் உருவில் நீ எந்த சிலையையும் செய்யக்கூடாது. இது ஒன்றே போதும். நலமாக வாழ்வாய்” என்று கூறி மறைந்தார். பாபாவின் உத்தரவை பாலாஜி வசந்தராவ் அப்படியே ஏற்றுக் கொண்டார். 1970--ம் ஆண்டு தனது 82-வது வயதில் மரணம் அடைந்த அவர் தம் வாழ்நாளில் வேறு எந்த பாபா சிலையையும் செய்யவில்லை.

அவர் செதுக்கிய பாபா சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது. பாபா உயிருடன் இருப்பது போலவே தோன்றும் அற்புத சிலை. 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி விஜயதசமி திருநாளில் பாபாவின் 36-வது சமாதி தினத்தன்று அந்த சிலை சமாதி மந்திரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சமாதி மந்திருக்குள் நாம் நுழைந்ததும், அந்த சிலையில் உள்ள பாபா நம்மை பார்ப்பது போலவே இருக்கும். சமாதி மந்திரின் எந்த மூலையில் நின்றாலும் பாபாவின் அன்பு பொங்கும் அந்த கருணைப் பார்வை நம்மைத்தான் பார்க்கும்.

சுவாமி சரனானந்தா என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாபா சிலை தற்போது 205 கிலோ வெள்ளி பீடத்தில் வீற்றிருக்கிறது. கடந்த 63 ஆண்டுகளாக அந்த சிலையில் கோடிக்கணக்கான பக்தர்கள் பாபாவை ஆத்மார்த்தமாக கண்டு வணங்கி அருளாசிப் பெற்றுள்ளனர்.

இந்த சிலை பிரதிஷ்டைக்குப் பிறகு அவர் எதிரே நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாபா சொன்னது போல அவர் சமாதி இன்றும் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறது. சமாதி மந்திரில் உள்ள சிலையில் வீற்றிருந்து பாபா நம் ஒவ்வொருவரையும் வழி நடத்தி கொண்டிருக்கிறார்.

சீரடியின் இதயமாக அந்த சமாதி மந்திர் திகழ்கிறது. அங்கு தரிசனம் முடிந்ததும் அருகில் உள்ள துவாரகாமயிக்கு செல்ல வேண்டும். 60 ஆண்டுகள் அந்த மசூதியில்தான் பாபா வாழ்ந்தார். அந்த மசூதியில்தான் பாபா ஏற்றி வைத்த துனி தீபம் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.

Friday, 14 June 2019

ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்

சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
 
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.
 
தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
 
2. ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:
 
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.

 
 
3. ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:
 
"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".
 
4. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:
 
சாயிநாதர் திருவடி
 
ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே.



Monday, 10 June 2019

பாபாவின் சத்திய வாக்கு

* எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.
 
* என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.
 
* எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.
 
* எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.
 
* கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.
 
* இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்.