பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் புரந்தரே என்பவர் தீவிர பாபா பக்தர். அவருடைய மனைவியோ பக்தியில் நாட்டமில்லாதவர்.
ஒருமுறை புரந்தரேயின் மனைவியை பிளேக்
நோய் தாக்கியது. பிளேக்கின் தாக்கம் தீவிரமாக இருப்பதாகவும், இனிமேல்
மருத்துவத்தால் பலனில்லை என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர்.
மனமுடைந்து போன புரந்தரே, ஒருநாள்
ஊரிலிருந்த தத்தரின் ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்வதற்காக சென்றார்.
அப்போது தத்தரின் கோயில் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பக்கீர், ரகுவீர்
பரந்தரேயை அழைத்து, சிறிது உதியும் தீர்த்தமும் கொடுத்து, "என்னை நம்பு ! நான் எல்லையில்லாக் கருணையுள்ளவன் ! என்னை அறியாமல் உன் மனைவியின் உயிர் போகாது !" என்றார்.
அதைக் கொடுத்தது சாட்சாத் பாபாவேதான் !
என்று உணர்ந்து கொண்ட ரகுவீர், வீட்டிற்கு சென்று உதியை மனைவியின் உடல்
முழுவதும் பூசிவிட்டு, அவளது வாயிலும் சிறிது போட்டு தீர்த்தத்தையும்
பலவந்தமாக கொடுத்தார்.
அடுத்த நிமிடமே புரந்தரேயின் மனைவிக்கு
கிட்டியிருந்த பற்கள் நெகிழ்ந்தன. குளிர்ந்த உடல் கதகதப்பாய் ஆனது.
அவளும் சாதாரண நிலைக்கு வந்தாள்.
அன்று மாலையில் தினப்படி
செக்-அப்பிற்காக அவர்கள் வீட்டிற்கு வந்த டாக்டர், ரகுவீரின் மனைவி
படுக்கையில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பதை கண்டு வியந்தார்.
நடந்தது என்ன என்பதையும் புரந்தரேயிடம் விவரமாகக் கேட்டறிந்து, பாபாவின்
அற்புத லீலையை எண்ணி வியந்து திரும்பினார்.
மருத்துவம் கைவிட்டபோதிலும் ஷீரடி
மஹானின் உதி தன் விதியை மாற்றியதை நினைத்து, குற்றவுணர்வுடன் உருகிய
புரந்தரேயின் மனைவி, "பரப்பிரம்மமே பாபாதான் !" என்று தீர்க்கமாக
உணர்ந்தாள்.
முழுவதுமாக குணமடைந்த அவள்,
சீரடிக்குக் கணவருடன் சென்று பாபாவை தரிசனம் செய்து, தன்னுடைய நன்றியை
பாபாவின் பாதங்களில் கண்ணீரால் நமஸ்கரித்து செலுத்தினாள்.
No comments:
Post a Comment