Friday, 21 June 2019

தத்தரை தரிசித்துவிட்டு போகலாமே?


                       shirdi saibaba hd க்கான பட முடிவு

நானா சாகேப் சாந்தோர்கர் தனது நண்பர் ஷட்டகர் பினிவாலேயுடன் ஷீரடிக்கு  புறப்பட்டார்.  கோபர்கானில்  இறங்கிய அவர்கள் இருவரும் கோதாவரியில்  குளித்தனர். 

அவருடைய நண்பர் பினிவாலே என்பவர் தத்தாத்ரேயரின் தீவிரமான பக்தர்.  அக்கரையிலிருந்த  தத்தர் கோவிலைப் பார்த்ததும், "தத்தரை தரிசித்துவிட்டு போகலாமே?" என்றார்.  ஆனால்,  அதற்கு நானாவோ ,  "நாம் ஏற்கனவே பார்த்த கோவில்தானே!    ஒவ்வொன்றுக்கும் தாமதித்தால் நேரம் ஆகிவிடும் !  ம்ம்.. கிளம்பலாம் !"  என்று கூறிக்கொண்டே கரை ஏறினார்.  

கரையேறும்போதே ஒரு முள் நறுக்கென்று அவருடைய காலில் குத்தியது. " ஓ! பாபா!" என்று கூறிக்கொண்டே அந்த முள்ளை பிடுங்கி தூர எறிந்து விட்டு,  அப்படியே அங்கிருந்த எருக்கஞ்செடிப் பாலை, முள் குத்திய இடத்தில் பிழிந்து விட்டு , அவசர அவசரமாக கிளம்பினார்.

ஷீரடிக்கு  வந்ததும் நேராக மசூதிக்கு சென்ற அவர்கள்,  பாபாவின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர். 

அப்போது பாபா , "ஓ ! நானா !  எல்லாம் தெரிந்த நீயே இப்படி செய்யலாமா?  தத்தரும் நானும் வேறு வேறா?  இன்று உனக்குக் கிடைத்தது லேசான தண்டனை !  கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஒருவரின் ஆர்வத்தைத் தடுப்பது தெய்வக்குற்றம் !  எதிர்காலத்தில் ஜாக்கிரதையாக இரு !" என்றார்.

இதைக் கேட்ட நானாவின் நண்பர் பினிவாலே பாபாவை மீண்டும் ஒருமுறை ஆச்சர்யத்துடன் வணங்கினார்.   ஆனால் நானாவோ,  பாபாவின் முன்னர் தலைகுனிந்து மன்னிப்பு கோரினார்.

No comments:

Post a Comment