ஆந்திராவில் புகழ்பெற்ற எழுத்தாளரான
கோபிசந்த் ஒரு தீவிர நாஸ்திகர். கடவுள், பூஜை, வழிபாடு, பிரார்த்தனை
இவற்றிலெல்லாம் துளியும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்.
1954-ல் அவர் கர்நூலில் வேலை
பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட,
அவளை பிரசவத்திற்காக அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பனிக்குடம்
உடைந்து மூன்று நாட்களாகியும் குழந்தை பிறக்கவில்லை. அவரது மனைவியின்
நிலைமையும் கவலைக்கிடமானது. டாக்டர்கள் கையை விரித்து விட்டனர்.
கோபிசந்த் மனம் நொறுங்கிப்போனார்.
செய்வதறியாது விழிபிதுங்கி நின்றார். இரவு முழுவதும் தூங்கவில்லை.
மறுநாள் காலை வீட்டிலிருந்து காபி எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச்
செல்லும் வழியில் ஒரு பாபா கோவில் இருப்பதைக் கண்டு தன்னையறியாமல் ஒருகணம்
நின்றார்.
தன்னுடைய நாஸ்திகம், கடவுளுக்கெதிரான
அஹங்காரம் ஆணவம் ஆகிய வீம்புகளையெல்லாம் சுருட்டிவிட்டு, பாபாவின்
பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.
"பாபா ! உங்களுக்கு அபார சக்தி
இருப்பதாக பலரும் கூற கேட்டிருக்கிறேன். நீங்கள் கொடுக்க நினைத்தால்
முடியாதது எதுவும் இல்லை என்கிறார்கள். மரணத்தின் பிடியிலிருக்கும் எனது
மனைவிக்கு சுகப்பிரசவம் கொடுத்து சிசுவையும் சேர்த்து
காப்பாற்றுவீர்களானால், நானும் உங்களை நம்புவேன் !" என்று கண்ணீர் விட்டு
கதறி அழுது ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்தார்.
ஆஸ்பத்திரிக்குப் போனதும் அவர்
மனைவிக்குச் சற்று முன் ஆண்குழந்தை பிறந்ததாக நர்ஸ்கள் கூறினர். அதைக்
கேட்டுப் புல்லரித்துப் போன கோபிசந்த், மகிழ்ச்சியின் மிகுதியால் அப்படியே
இருக்கையில் உட்கார்ந்து விட்டார்.
சற்று நேரம் கழித்து பிரசவ மயக்கம்
தெளிந்த தனது மனைவியை கோபிசந்த் சந்தித்தபோது அவள், கப்னி அணிந்த ஒரு
பக்கீர் எனது நெற்றியில் விபூதி இட்டார். கொஞ்சம் விபூதியை தண்ணீரில்
கலந்து குடிக்கச் சொன்னார். "சுகப்பிரசவமாகிவிடும் பயப்படாதே !"
என்றார். அடுத்த நிமிடமே குழந்தை பிறந்துவிட்டது என்றாள்.
"தன்னிடம் நம்பிக்கையுடன்
சரணாகதியடைந்து வைத்த பிரார்த்தனையை அடுத்த நிமிடமே ஆசீர்வாதித்துக்
கொடுத்த பாபாவிற்கு" நன்றிக் கடனாக தனது குழந்தைக்கு "சாயிபாபா" என்றே
பெயர் சூட்டினார் கோபிசந்த். அதோடு நின்றுவிடாமல் வியாழக்கிழமை தோறும்
தனது வீட்டிலும் சாயிபஜனையை செய்தார். தவறாமல் சாயி ஆலயம் சென்று தியானம்
செய்வார். எந்த இடத்தில் சாயி பஜனை, பூஜை நடந்தாலும் முதல் ஆளாக
இருப்பார். இப்படியாக தீவிர சாயி பக்தரானார் கோபிசந்த்.
No comments:
Post a Comment