Thursday 20 June 2019

உன் பணம் எனக்கு வேண்டாம்





சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம் என்பதை கேள்வியுற்றார். 

உடனே அந்த நபர்,  தன்னிடம் இருந்த 18 ரூபாய்களை மசூதியில் அமர்ந்திருந்த கொலாம்பே என்பவரிடம் கொடுத்து , "இதை பத்திரமாக வைத்திரு !  நான் ஊருக்கு போகும்போது வாங்கிக் கொள்கிறேன்!" என்றார். 

பாபா தக்ஷிணை கேட்டால் தம்மிடம் காசே இல்லையென்று சொல்லிவிடலாமென திட்டமிட்டிருந்தார்.   தன்னுடைய புறப்படும் நேரம் வந்ததும் பாபாவிற்கு வந்தனம் செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப பாபாவிடம் உத்தரவு கேட்டு நின்றார்.

பாபா அந்த பக்தரிடம், "தக்ஷிணை கொடுக்காமல் போகக் கூடாது !  உன் பணம் எனக்கு வேண்டாம் !  அதோ..!  அவனிடமிருந்து வேண்டுமானால் வாங்கிக் கொடு!" என்று பாபா கையைக் காட்டிச்  சொன்னார்.  அவர் கையைக்  காட்டிய இடத்தில் கொலாம்பே உட்கார்ந்திருந்தார்.

அதைப் பார்த்த அந்த நபர் வெலவெலத்துப் போய், "ஆஹா !  பாபாவிடம் எந்தத் தந்திரமும் மந்திரமும் பலிக்காது போலவே !"  என்று ஆச்சர்யமுற்ற அவர்‌ உடனடியாக  தன்னுடைய செய்கைக்கு மன்னிப்பு கோரி,  கொலாம்பேயிடம் இருந்த தனது தொகையில் இரண்டு ரூபாயை வாங்கி தக்ஷிணையாக பாபாவிடம் சமர்ப்பித்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த கொலாம்பேவோ, "நான் பயங்கரமான மதுப்பிரியன்.  பாபாவுக்காக பெருந்தன்மையாக குடியை வெகு சிரமப்பட்டு விட்டுவிட்டேன். அதனால் பாபா என்னிடம் தக்ஷிணையே கேட்பதில்லை " என்று எல்லோரிடமும் பெருமை பேசிக்கொண்டிருந்தான். 

அடுத்த முறை பாபாவின் தரிசனத்துக்கு வந்த கொலாம்பேயிடம் பாபா, "இங்கு எதுவும் இலவசத்திற்கல்ல !  ம்ம்ம்... இரண்டு ரூபாய் தக்ஷிணை கொடு !" என்று கேட்டார்.  அதைக் கேட்டு தலைகுனிந்த கொலாம்பே , "மானுட ஜம்பம் மஹானிடம் செல்லுபடியாகாது போலவே !" என்று நினைத்து தனது தக்ஷிணையை சமர்ப்பித்தார்..

 மீண்டும் பாபா ,  "தீயவன் திருந்தியதற்கு சலுகை கொடுத்தால் நல்லவனாகவே வாழ்கின்றவனுக்கு என்ன கொடுத்தாலும் போதாதே ?" என்றார்.

No comments:

Post a Comment