Monday 1 July 2019

பாபா உதியின் மகிமை


தொடர்புடைய படம்

கர்னூல் மாவட்டத்திலுள்ள தோன் என்ற ஊரைச் சேர்ந்தவர் திரு.எம்.கே. ஆனந்த வெங்கடேஸ்வரலு (ஆனந்த்), திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்தார்.  இவருக்கு மூன்று சகோதரர்கள்.  அவரது மூன்றாவது சகோதரர் சேஷுமணிக்கு பிறந்த மூன்றாவது மாதத்தில் இளம்பிள்ளைவாதம் நோய் ஏற்பட்டது.  அதனால், சேஷுமணியின் இடதுபக்க உறுப்புகள் செயலிழந்து போயின.  பத்து வயதாகியும் சேஷுமணியால் நிற்கக் கூட முடியவில்லை.

வித்யா நகரில் சாயி பக்தர் ஸ்ரீபரத்வாஜா வந்திருந்ததாக கேள்விப்பட்டு,  அங்கே நடக்கும் வியாழக்கிழமை சாயிபஜனையில் கலந்து கொள்ள நண்பருடன் சென்றார். அந்த சமயம் ஹரிஹரைச் சேர்ந்த ஸ்ரீசமர்த்த நாராயண மகராஜூம் அங்கு வந்திருந்தார்.

ஆனந்த வெங்கடேஸ்வரலு,  தன் தம்பியின் நிலைமையைப் பற்றி அவர்களிடம் வருத்தத்துடன் கூறி காலில் விழுந்து வணங்கினார்.

"ஹனுமான் சாலீஸாவைப் படித்தபடி இந்த விபூதியை உன் தம்பியின் உடலில் தடவு.  குணமாகிவிடும் !" என்று விபூதி அளித்தார் ஸ்ரீசமர்த்த நாராயண மகராஜ். 

"அந்த சாயிபாபாவே இவரின் ரூபத்திலிருந்து விபூதி அளிக்கிறார்! நம்பிக்கையுடன்  பெற்றுக்கொள்!  மற்றதை பாபா பார்த்துக் கொள்வார்!"  என்றார் பரத்வாஜா.

தன் இரண்டாவது சகோதரர் மூலமாக அந்த சக்தி வாய்ந்த விபூதியை வீட்டிற்கு அனுப்பி விபரத்தை சொல்லி அனுப்பினார். அவரின் ஊரோ ஒரு குக்கிராமம், அவர்கள் வீட்டிலோ "ஹனுமான் சாலீஸா" இல்லை.  அதைப் படிக்காமல் விபூதியை தடவக்கூடாது என்று நினைத்து, வீட்டில் உள்ளவர்கள் அந்த விபூதி பொட்டலத்தைப் பிரிக்கவே இல்லை.  அப்படியே சேஷுமணியின் தலையணைக்கடியில் வைத்துவிட்டனர்.

மறுநாள் ஆனந்த வெங்கடேஸ்வரலு கனவில் பாபா தோன்றி , தன்னைச் சுற்றி சூழ்ந்திருந்த பக்தர்களிடம் "இவனை நான் நடக்க வைத்தேன்  !  ஆனால் இன்னும் இவன் நம்பவில்லை!"  என்று ஆனந்தைச் சுட்டிக் காட்டினார்.  ஆனந்துக்கு எதுவும் புரியாமல் கனவிலிருந்து விடுபட்டார்.

அதற்கடுத்த வாரம் ஊருக்குப் போகும்போது தன் சகோதரன் சேஷுமணி நடந்து கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தோடு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.  அப்போதுதான் தான் கண்ட கனவுக்குப் பொருள் புரிந்தது.   "தடவாவிட்டாலும் தலையணைக்கடியிலிருந்த சாயியின் விபூதியே நடக்கும் ஆற்றலைத் தந்திருந்ததை நினைத்து வியப்புற்றார்."

No comments:

Post a Comment