பாபாவை, குறிப்பிட்ட ஆலயத்தில் மட்டுமே மிகவும் விசேஷமான சக்திகள்
கொண்டவராக உருவகப்படுத்துவது, மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளை பாபாவிடம்
எடுத்துக்கூறும் பிரதிநிதிகள் போன்ற மனப்போக்கில் பலர் ஈடுபடுகிறார்கள்.
உண்மை அதுவல்ல, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லோருடைய
வேண்டுதல்களும், துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார். பக்தர்களுடைய
வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாபா தமது
பக்தர்களை தமது சொந்தக் குழந்தைகள், சிசுக்கள் போலவே நேசித்தார்,
நேசித்தும் வருகிறார்.
ஒருசமயம், பாபா ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி, " இக் குழந்தை
தூங்கும் போது நாம் அருகிலிருக்க வேண்டும். விழித்திருந்து, கவனித்து,
சிரமம் ஏற்கவேண்டும் " எனக் கூறினார். பக்தர்களின்பால் பாபாவின் அக்கறை
அத்தகையது. எப்போதுமே பாபா, தமது பக்தர்களின் பின்னாலேயே இருந்து பக்தர்களை
தாங்கி வருகிறார். இதுவே உண்மை. இதில் முழுநம்பிக்கை கொள்ளுங்கள். இந்த
உண்மையை கிரகித்து கொள்ளும்போது உங்களது மனதில் அச்சம், கவலை
எதுவுமில்லாமல் போகும்.
" நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன
கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும்,
வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின்
எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."