Wednesday 10 July 2019

காப்பாற்றுங்கள் பாபா, எங்களை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்



முதல் உலகப் போர் நடந்த சமயம்.... இந்திய கடற்படை தளபதியாக இருந்த கைகன்சிரி தருவாலாவும் போரில் பங்கேற்றார்.

அவருடன் சென்ற கப்பல்கள் அனைத்தையும் எதிரி நாட்டு விமானங்கள் குண்டு வீசி அழித்து கடலில் மூழ்க செய்து விட்டன. அடுத்து தன் கப்பல் மீதும் குண்டு வீசப்படும் என்று தருவாலாவுக்கு தெரிய வந்தது. அந்த கப்பலில் இருந்த அனைவரும் மரண பீதியில் அழுதனர். ஆனால் தருவாலா மனம் கலங்கவில்லை. சாய்நாதரை கண் கண்ட தெய்வமாக வழிபட்டு வந்த அவர் நம்பிக்கையோடு பாபா படத்தை தன் சட்டைப் பையில் இருந்து எடுத்தார். 

பாபாவின் கண்களை உன்னிப்பாகப் பார்த்தப்படி, ‘‘எங்களை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். காப்பாற்றுங்கள் பாபா. தொலைவில் இருந்தாலும் பாபா நம்மை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்’’ என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரடி மசூதியில் அப்போது பக்தர்களிடம் பேசிக் கொண்டிருந்த சாய்பாபா திடீரென அலறியபடி கீழே விழுந்தார். அனைவரும் ஓடோடி வந்து பாபாவை தூக்கினார்கள். 

பாபா சட்டையில் இருந்து தண்ணீர் வழிந்தது. அவர் தலை, உடல் அனைத்தும் தொப்பலாக நனைந்திருந்தது. ஏதோ தண்ணீருக்குள் மூழ்கி எழுந்தவர் போல பாபா காணப்பட்டார். அவர் இருந்த இடத்தில் தண்ணீர் வழிந்தோடி சிறு குளம் போல தேங்கி விட்டது. இதைப் பார்த்து பக்தர்கள் எல்லாரும் ஆச்சரியம் அடைந்தனர். ‘‘என்ன நடந்தது. பாபா’’ என்று கேட்டார். 

அப்போது ‘‘அவர் 3 கப்பல்களையும் காப்பாற்றி விட்டேன்’’ என்றார். வேறு எதுவும் அவர் சொல்லவில்லை. இதனால் சீரடியில் இருந்த யாருக்கும் அவர் சொன்னது புரியவில்லை. 

3 நாள் கழித்து மசூதிக்கு ஒரு தந்தி வந்தது. தளபதி தருவாலா அதை அனுப்பியிருந்தார். ‘‘பாபா உங்கள் அருளால் 3 கப்பல்களில் இருந்த நாங்கள் குண்டு வீச்சில் சிக்காமல் தப்பி விட்டோம். உங்களுக்கு கோடான கோடி நன்றி’’ என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அதன் பிறகே தொலை தூரத்தில் கடலுக்குள் தளபதி தருவாலாவை பாபா காப்பாற்றி இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வந்தது. எத்தனை மைல் தொலைவில் இருந்தாலும் பாபா நம்மை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார் என்பதை இந்த அற்புதம் உறுதிபடுத்தியது.

No comments:

Post a Comment