Saturday 27 July 2019

பாபாவின் அருளால் நிச்சயமாக நல்லதே நடக்கும்


சுலோச்சனா கல்லூரி மாணவி.  வித்யா நகரில் பெற்றோரோடு வசித்து வந்தார்.  அவரது தந்தை ஒரு பர்லாங் தூரம் நடந்தால் கூட கால்கள் வீங்கிக் கொள்ளும்.  இந்த நோயினால் அவர் பெரிதும் துன்பப்பட்டார்.   ஹோமியோபதி, ‌அலோபதி என எல்லாவிதமான வைத்தியம் பார்த்தும் எந்தவொரு பயனும் தரவில்லை.

ஒரு வியாழக்கிழமை பரத்வாஜா சுவாமிகளின் சாயிபாபா பஜனையில் கலந்து கொள்ளச் சென்ற  வித்யாவின் தாயார்,  தனது கணவருக்கு இருக்கும் நோயைப் பற்றிக் கூறி மிகவும் வருத்தப்பட்டார். 

அதைக் கேட்ட பரத்வாஜர்,  "அம்மா !  தாங்கள் ஏற்கனவே தங்கள் வீட்டிலிருந்த பழைய சாயிபாபா படம் ஒன்றை சினேகிதரிடம் கொடுத்து விட்டதாகக் கூறியிருந்தீர்கள்!  அது ஞாபகமிருக்கிறதா?  முடிந்தால் அவருக்கு புதியதாக பாபா படம் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு , நீங்கள் கொடுத்த அதே பழைய பாபாவின் படத்தை திருப்பி வாங்கி,  வீட்டில் பாபா இருந்த பழைய இடத்திலேயே அந்த படத்தை மாட்டி பூஜை செய்து வாருங்கள்.  சாயி சரித்திரத்தையும் தினமும் பாராயணம் செய்து பாருங்கள்.  பாபாவின் அருளால் நிச்சயமாக நல்லதே நடக்கும்  !" என்றார்.

உடனடியாக சுலோச்சனாவும் அவரது தாயாரும் பாபாவின் புதிய படமொன்றை வாங்கி அந்த நண்பருக்கு கொடுத்துவிட்டு, "பழைய பாபாவின் படத்தை திருப்பி வாங்கி வந்து வீட்டில் ஏற்கனவே இருந்த அதே இடத்தில் மாட்டி பூஜை செய்ய ஆரம்பித்தார்கள்."

சுலோச்சனாவின் தந்தை அதுபற்றிக் கேட்க,  "அப்பா !  பாபா எத்தனையோ பேரின் வியாதிகளை தனது அருட்பார்வையினாலே குணப்படுத்திய மகான்.  அவரின் பாதம் பணிந்து சத்சரித்திரம் படித்து அவரை வேண்டிக் கொள்ளாவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான்!" என்றாள் வித்யா.

அவரும், "சரி அம்மா! உனக்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறேன்.  சத்சரித்திரமும் படிக்கிறேன்.  கால்வலி தீர்ந்துவிட்டால் ஷீரடிக்கு போகலாம் !"  என்றார்.  என்ன ஆச்சர்யம்!  படிப்படியாய் கால்வலி குணமாகி, ஒரே மாதத்தில் முற்றிலுமாக தீர்வு கிடைத்தது.  ஒரு பர்லாங் என்ன,  ஒரு கிலோமீட்டர் நடந்தாலும் கால்கள் வீங்கவில்லை. 

பாபாவின் அற்புதத்தை நினைவுகூர்ந்து வேண்டிக் கொண்டபடி குடும்பத்தோடு ஷீரடிக்குச் சென்று பாபாவிடம் நன்றிக்கடனை சமர்ப்பித்தனர்.  அதன்பிறகு வியாழக்கிழமை மட்டுமல்ல, நாள் தவறாமல் வீட்டில் பாபாவை பூஜித்தனர்.

No comments:

Post a Comment