ஷீரடியில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை
கூடுவது வழக்கம். அன்றைய தினம் மசூதியில் பாபாவைத் தரிசனம் செய்ய வரும்
பக்தர்கள் கூட்டமும் அதிகமாயிருக்கும்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஹேமத்பாந்த்
பாபாவின் முன்னால் அமர்ந்து கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.
பாபாவின் இடதுபுறம் ஷாமாவும், வலதுபுறம் வாமன்ராவும் அமர்ந்திருந்தனர்.
பாபா சிரித்தபடி, "ஷாமா! ஹேமத்தின் கோட்டு மடிப்பில் சில நிலக்கடலைப் பருப்புகள் இருக்கின்றன பார்!" என்றார்.
உடனே ஹேமத்பாந்த் தன்னுடைய கோட்டை உதறிவிட, அதிலிருந்து நிலக்கடலைப் பருப்புகள் நாலாபுறமும் சிதறி ஓடின.
"என் கோட்டு மடிப்பில் கடலைப்பருப்பு எப்படி வந்தது? யார் போட்டது?" என ஆச்சர்யத்தோடு கேட்டார் ஹேமத்.
"இது என்ன புதுமை? சந்தைக்குப் போய்
நீயே கடலைப்பருப்பு வாங்கித் தின்றிருப்பாய் ! இதிலிருந்து தனியாகத்
தின்னும் பழக்கம் உனக்கிருப்பது இன்று வெளிப்பட்டது" என்றார் பாபா.
"பாபா ! நான் இதுவரை சந்தைக்குப்
போனதும் இல்லை, போகவும் இல்லை. கடலைப்பருப்பு வாங்கித் தின்னவும் இல்லை.
அப்படியிருக்க, என் மீது இப்படி பழி போடுகிறீர்களே பாபா?" என்று
வருத்தத்துடன் கேட்டார் ஹேமத்பாந்த்.
அதற்கு பாபா, "அப்படியானால்,
கடலைப்பருப்பு கால் முளைத்து வந்ததா? இன்றில்லாவிடில் நேற்று இது
நடந்திருக்கலாம்! யாராவது ஒருவர் தின்னும்போது உங்களுக்கும் நாலு கடலை
கொடுத்திருக்கலாம்!" என்றார்.
மேலும் பாபா கூறும்போது, "இங்கு
பலபேர், ஆத்மாவில் கடவுள் இருப்பதாக வெளியில் டம்பமாகச் சொல்லிக்
கொள்கிறார்கள் ! ஆனால் நம்புவதில்லை! நம்பியிருந்தால் எதையும் உண்பதற்கு
முன் கடவுளுக்கு ஆத்ம நிவேதனம் செய்யத் தவறமாட்டார்களே ! அப்படி ஆத்ம
நிவேதனம் செய்யும் பழக்கம் இருந்தால், இது தெய்வம் சாப்பிடுவதற்கு
உகந்ததா? புனிதமானதா? என்று ஒருநிமிடம் யோசித்தாலும் போதும், கண்ட
இடத்தில் கண்டதையும், கடவுளுக்கு படைக்கத் தகாததையும் வாங்கிச் சாப்பிட்டு
உடம்பைக் கெடுத்துக் கொள்ள மாட்டார்களே !. அப்படியிருந்துவிட்டாலே
அவருக்கு தாமஸகுணம் மறைந்து சத்வகுணம் அதிகமாகும்" என்று ஹேமத்தைக் காரணமாக வைத்து பாபா இந்த உபதேசம் செய்ததாக மசூதியில் இருந்த மற்றவர்கள் கருதினார்கள்.
No comments:
Post a Comment