Tuesday 9 July 2019

சாயி தன் பக்தர்களை வருத்தப்பட விடமாட்டார்




தோபேஸ்வரைச் சேர்ந்த காகாமஹாராஜ் புகழ்பெற்ற மகான்.  அவர் ஒருமுறை பூனாவுக்குச் சென்றிருந்தபோது, அவரைக் காணவும்,  ஆசீர்வாதம் பெறவும் பக்தர்கள் பெருந்திரளாகக் கூடினர்.  
மகான் காகாமஹாராஜைக் காணும் ஆர்வத்தில் கூடிய கூட்டத்தில் எச்.வி. ஸாதே எனும் ஸாயி பக்தரும் ஒருவர். 

ஒவ்வொருவரும் மஹாராஜை தங்களின் இல்லத்திற்கு பிட்சைக்கு அழைத்தனர்.  பிட்சைக்கு அழைத்த பக்தர்களின் பலரின் அழைப்பையும் மஹாராஜ் அவர்கள் தட்டிக் கழித்தார்.  ஸாதேயும் தன் பங்குக்கு மஹாராஜை அழைக்க,  அவரின் அழைப்பும் மறுக்கப்பட்டது.  இது ஸாதேவுத்கு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்தது.

அன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் ஒரு சீடன் ஸாதேயிடம் வந்து, "காகா மஹாராஜூக்கு நாளை பிட்சை உங்கள் வீட்டில்தான்"  என்று சொல்லிச் சென்றான்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத ஸாதே கொண்ட ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

ஸாதே, உடனடியாக மளமளவென்று காய்கறிகள், அரிசி, மளிகை, வெண்ணெய், நெய், பூ, பழம், தாம்பூலம் என விருந்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை தடபுடலாக செய்துமுடித்தார்.

மறுநாள்,  பிட்சை முடிந்து காகா மஹாராஜ் ஓய்வாக இருக்கும்போது, அவரிடம் ஸாதே மிகவும் பவ்யமாக,  "மஹாராஜ் மன்னிக்கவும்!  முதலில் பிட்சைக்கு அழைத்த போது மறுத்தீர்கள்!  அப்புறம் தங்களை ஒப்புக் கொள்ளச் செய்தது எதுவோ?" என்று வினவினார்.

அதற்கு காகாமஹாராஜ் பலத்த சிரிப்புடன், "ஒப்புக் கொள்ளச் செய்தது எது என்று கேட்காதே!  எவர் என்று கேள்!  இதோ உன் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறாயே! இந்த, இந்த சாயிதான் என்னைக் குடைந்து தள்ளிவிட்டார்.  தன் பக்தர்கள் வருத்தப்பட அவர் தாங்கமாட்டாரே!" என்று ஸாதேயின் வீட்டில் மாட்டியிருந்த பாபாவின் படத்தைக் காண்பித்து புன்னகைத்தார்.

No comments:

Post a Comment